Doctor Vikatan: என் மகள் சமீபத்தில் கொதித்துக் கொண்டிருந்த சுடுநீரை காலில் ஊற்றிக் கொண்டாள். தேங்காய் எண்ணெய் தடவினால் சரியாகிவிடும் என விட்டுவிட்டோம். ஆனால் பெரிய அளவில் கொப்புளம் வந்துவிட்டது. பயந்துபோய் அருகில் ஒரு மருத்துவரிடம் சென்றோம். அவர் கொப்புளத்தை உடைத்துவிட்டு மேல்தோலை வெட்டி எடுத்துவிட்டு மருந்து வைத்து கட்டுப்போட்டார். மூன்று நாள்களுக்கு தினமும் கட்டு போட்டே வந்தார். பார்ப்பவர் அனைவரும் தீக்காயம், சுடுநீர் காயத்துக்கு கட்டுப்போட்டால் ஆறாது என அச்சுறுத்தினார்கள். பிறகு அனுபவம் வாய்ந்த வேறு மருத்துவரிடம் சென்றோம். அவர் கட்டினை அகற்றிவிட்டு, செப்டிக் ஆகாமல் இருக்க ஊசி, மாத்திரை என சிகிச்சை அளித்தார். என்னுடைய இந்த அனுபவத்தில் சில கேள்விகள் இருக்கின்றன.
1. தீக்காயம், சுடுநீர் கொட்டுதல் நிகழ்ந்தால் உடனடியாக செய்ய வேண்டிய முதலுதவிகள் என்னென்ன? (இரண்டாவதாக நான் பார்த்த மருத்துவர் குளிர்ந்த நீரில் ஒருமணி நேரம் காலை வைத்திருந்தால் கொப்புளமே வந்திருக்காது என, அவ்வை சண்முகி திரைப்படத்தை உதாரணமாகச் சொன்னார். இது சரியா?)
2. தீக்காயம், சுடுநீர் காயத்துக்கு கட்டுப்போடுவது சரியா..?
- சூர்யா, சென்னை.
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, பிளாஸ்டிக், ஏஸ்தெட்டிக், ரீகன்ஸ்ட்ரக்ட்டிவ் அறுவை சிகிச்சை மருத்துவர் செல்வ சீதாராமன்...
அடுப்படியில் உள்ள சூடான உணவுகள், கொதிக்க வைத்த நீர், குழம்பு, சாம்பார் உள்ளிட்டவை குழந்தைகள் மேலே பட்டு ஏற்படும் தீக்காயங்கள் வீடுகளில் மிகவும் சகஜம். இப்படி ஏற்படும் தீக்காயங்களை உடனடியாக குழாய் தண்ணீரைத் திறந்துவிட்டு அதில் ஐந்து நிமிடங்களுக்குக் காட்டலாம். வலி அதிகமிருந்தால் குளிர்ந்த டவலை அதன்மேல் வைக்கலாம். காயம் பட்டதும் உடனடியாக வலியைக் குறைப்பதற்கான வழி இது. நீங்கள் கேட்டதுபோல ஒரு மணி நேரமெல்லாம் குளிர்ந்த நீரில் வைத்திருக்க வேண்டியதில்லை. கட்டும் தேவையில்லை.
குழாய் தண்ணீரில் காட்டுவதால் இன்ஃபெக்ஷன் பரவும் வாய்ப்பும் குறையும். ரொம்பவும் லேசான காயம், சருமம் சிவந்திருக்கிறது.... அவ்வளவுதான் என்றால், அதன் மேல் மாய்ஸ்ச்சரைசிங் க்ரீம் அல்லது வாசலைன் அல்லது கற்றாழை கலந்த க்ரீம் தடவினாலே போதுமானதாக இருக்கும். ஒருவேளை காயம் பெரிதாக இருக்கிறது, முகம் மாதிரியான இடங்களில் இருக்கிறது, வலியும் அதிகம் என்ற நிலையில் உடனே மருத்துவரை அணுகுவதுதான் சிறந்தது.
சூடான நீர் பட்டு ஏற்பட்ட தீக்காயத்துக்கு சிகிச்சை அளிக்க வேண்டுமா, வேண்டாமா என்ற உங்கள் கேள்வியில் 3 விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டும். அந்தக் காயத்தின் ஆழம், அது எந்தளவுக்குப் பரவியிருக்கிறது, அதில் இன்ஃபெக்ஷன் ஏதேனும் ஏற்பட்டிருக்கிறதா என்ற விஷயங்களைப் பார்க்க வேண்டும். ஏற்கெனவே குறிப்பிட்டபடி சிறிய, லேசான காயம்தான், மேலோட்டமான பாதிப்புதான் என்றால் அதற்கு சிகிச்சை எதுவும் தேவையில்லை. ஆயின்மென்ட் போட்டாலே சரியாகிவிடும். கட்டுப்போட வேண்டியதில்லை.
ஆழமான, பெரிய காயம் என்றால் அதற்கு வெளிப்புற வழியே ஊசியின் மூலம் குளுக்கோஸ் திரவம் செலுத்த வேண்டி வரலாம். இன்ஃபெக்ஷன் ஏற்பட்டிருந்தால் ஆன்டிபயாடிக் கொடுக்க வேண்டி வரும். தவிர சில இடங்களில் உள்ள தீக்காயங்களுக்கு ஸ்பெஷல் சிகிச்சை தேவைப்படும். உதாரணத்துக்கு முகம், அந்தரங்க உறுப்புகள், கைகள் போன்ற பகுதிகளில் படும் காயங்கள். எனவே, காயத்தின் தீவிரத்தைப் பொறுத்து மருத்துவர் சிகிச்சையைப் பரிந்துரைப்பார்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
source https://www.vikatan.com/health/healthy/doctor-vikatan-is-it-ok-to-bandage-a-burn
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக