Ad

வெள்ளி, 23 செப்டம்பர், 2022

தமிழ்நாட்டில் சேதமடைந்த நிலையில் 5,583 பள்ளிக் கட்டடங்கள்! - அரசின் நடவடிக்கை என்ன?

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 37,554 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் 8,000-க்கும் அதிகமான பள்ளிகளின் கட்டடங்கள் சுமார் 25 ஆண்டுகள் பழமையானவை. இதனால், மழைக்காலங்களில் பள்ளிக் கட்டடங்கள் இடிந்து விழுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. இதைத் தடுக்க ஒவ்வோர் ஆண்டும் பல நூறு கோடிகள் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், மறு சீரமைப்பு பணிகளிலும் முறைகேடு நடப்பதாகவும், பள்ளிக் கட்டடங்களை முறையாக சரிசெய்ய முடியவில்லை எனவும் குற்றச்சாட்டு பலரால் முன்வைக்கப்படுகிறது.

அரசுப் பள்ளி

நடப்பு கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறக்கப்பட்ட அன்றைய தினமே, புதுக்கோட்டை மாவட்டம், எஸ்.களபம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4-ம் வகுப்பு மாணவர் ஒருவர் காயமடைந்தார்.

இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த செந்தில் முருகன் என்பவர், உயர் நீதிமன்றக் கிளையில், ``தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய கட்டடங்கள் அதிகமாக இருக்கின்றன. குறிப்பாக மதுரை கொடி மங்கலத்தில் அரசு உயர்நிலைப் பள்ளிக் கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. எனவே, அரசுப் பள்ளிகள், அங்கன்வாடி கட்டடங்களின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து, ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்களை அகற்றி புதிய கட்டடங்கள் கட்ட குழு அமைக்க உத்தரவிட வேண்டும்" என்று மனுத்தாக்கல் செய்திருந்தார்.

மதுரை உயர் நீதிமன்றம்

இந்த மனு குறித்த விசாரணையின்போது அரசு தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், ``தமிழ்நாடு முழுவதும் 5,583 பள்ளிக் கட்டடங்கள் சேதமடைந்திருக்கின்றன. 2021-2022-ம் ஆண்டில் சேதமடைந்த 2,553 பள்ளிக் கட்டடங்கள், 2022-2023-ம் ஆண்டில் 3,030 சேதமடைந்த பள்ளிக் கட்டடங்களும் அகற்றப்பட்டன. அதேபோல, நபார்டு கடன் திட்டத்தில் ரூ.3,745,28 கோடி செலவில் 6,941 பள்ளிகளில் 40,043 வகுப்பறைகள், 3,146 ஆய்வகங்கள், 10,470 கழிப்பறைகள், 5,421 குடிநீர் வசதிகள், 8,28,387 மீட்டர் சுற்றுச் சுவர் ஆகியவை கட்டப்பட்டிருக்கின்றன" எனக் கூறப்பட்டிருந்தது.

அரசின் இந்த புள்ளிவிவரங்கள் தமிழ்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ``அங்கன்வாடி, கழிப்பறை, வகுப்பறை என எல்லாவற்றையும் சேர்த்துதான் 5,583 பள்ளிக் கட்டடங்கள் சேதமடைந்திருப்பதாக் கோர்ட்டில் கூறப்பட்டிருக்கிறது. இதை சரிசெய்ய ஒவ்வோர் ஆண்டும் ரூ.100 கோடிக்கும் மேல் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. தற்போதுகூட ரூ.106.78 கோடி செலவில் 2,695 பள்ளிகளில் 32 வகுப்பறைகள், 2 ஆய்வகங்கள், 436 கழிவறைகள், 2,270 பள்ளிகளுக்கு குடிநீர் வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

பள்ளிக்கல்வித்துறை

கட்டட புனரமைப்பு பணிகள் கடந்த காலங்களில் சரியாக மேற்கொள்ளப்படவில்லை. சிமென்ட் கலவை குறைபாடு உள்ளிட்ட பல பிரச்னைகள் இருந்தன. அந்த தவறு மீண்டும் நடைபெறக் கூடாது என்பதில் துறை மிக உறுதியாக இருக்கிறது. இன்னும் 2 ஆண்டுகளில் சேதமடைந்த பள்ளிக் கட்டடங்கள் இல்லாத நிலையை உருவாக்கும் முயற்சியில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்கான வரும் நிதியாண்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது" என்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/education/thousands-of-school-buildings-are-in-the-worst-condition-says-tn-govt-in-court

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக