Ad

புதன், 14 செப்டம்பர், 2022

``முல்லைப்பெரியாறு அணை பிரச்னையில் முதல்வர் மெளன விரதத்தை கலைப்பாரா?" - ஆர்.பி.உதயகுமார் காட்டம்

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை வந்த நிலையில், உசிலம்பட்டி 58 கால்வாயில் தண்ணீர் திறக்கவும், ரூல் கர்வ் மூலம் முல்லைப்பெரியாறு அணையில் 142 அடியாக நீரை தேக்கவும் மதுரை கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தார் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார்.

கலெக்டரிடம் மனு அளித்த ஆர்.பி.உதயகுமார்

பின்பு செய்தியாளர்களிடம் பேசியவர், "வைகை அணையில் தற்போது 70.44 அடி தண்ணீர் உள்ளது. 67 அடி வந்துவிட்டாலே 58-ம் கால்வாய்க்கு தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால், விவசாயிகள் நலனை புறக்கணிக்கிற, விவசாயிகள் வேதனையை கவனத்தில் கொள்ளாத அரசாக தி.மு.க அரசு உள்ளது. மதுரை வரும் முதல்வர் ஸ்டாலின் விவசாயிகள் பிரச்னையை கவனத்தில் கொள்ளாவார் என்ற நம்பிக்கையோடு இதை தெரிவிக்கிறோம்.

110 கிராம மக்களின் குடிநீர் ஆதரமாகவும், 2,500 ஏக்கர் விவசாய நிலம் பலன்பெறும் வகையிலும் இந்த 58 கால்வாய் மூலம் வருகின்ற தண்ணீர் உள்ளது.

58-ம் கால்வாயில் 11 நாள்களுக்கு 316 கன அடி நீர் திறந்தாலே அப்பகுதியிலுள்ள 35 கண்மாய்கள் நிறைந்துவிடும், கடந்த எடப்பாடியார் ஆட்சி காலத்தில் 65 லட்சத்தில் மராமத்து பணி செய்யப்பட்டு, மூன்று முறை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. தண்ணீர் திறக்க வேண்டும் என்று ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தவே வந்தோம். மாவட்ட ஆட்சியர் கனிவோடு கோரிக்கையை பெற்று நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். அதனால் போராட்டத்தை தற்காலிகமாக தள்ளி வைத்து மனுவினை தந்துள்ளோம்.

முதலமைச்சர் ஸ்டாலின்

58-ம் கால்வாயில் தண்ணீர் திறக்க முதல்வர் செவி சாய்க்கவில்லையென்றால் எடப்பாடியார் கவனத்திற்கு கொண்டு சென்று மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்.

முல்லைப்ரியாறு அணை நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக தேக்கிக் கொள்ளலாம், பேபி அணையை பழுது பார்க்கப்பட்ட பின் 152 அடியாக தேக்கிக் கொள்ளலாம் என்ற வரலாற்று தீர்ப்பை அம்மா ஜெயலலிதா பெற்று தந்ததற்காக 5 மாவட்ட விவசாயிகள் சார்பாக மாபெரும் பாராட்டு விழா நடைபெற்றது. விவசாயிகள் விழா எடுத்து மக்களால் அழைக்கப்பட்டு வந்த அம்மா திடலை தற்போது கலைஞர் அரங்கமாக மாற்றிவிட்டார்கள்.

ரூல்கர்வ்  திட்டத்தின் மூலம் செப்டம்பர் 11 முதல் 20 வரை 142 அடியாக தேக்க வேண்டும், தற்போது முல்லைப்பெரியாறில் 137.95 அடியாக உள்ளது, ஆகவே 142  அடியாக தேக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும், பருவமழை உள்ள போதும் ரூர்கர்வ் திட்டத்தின் மூலம் தண்ணீரை தேக்க முடியவில்லை.

முல்லைப்பெரியாறு அணை பிரச்னையில் முதல்வர் விவசாயிகளுக்கு உரிய விளக்கம் அளிப்பாரா? மெளன விரதத்தை கலைப்பாரா? உரிய விளக்கம் கொடுக்க முன் வருவாரா? மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியிடுவாரா..?

மு.க.ஸ்டாலின் | MK Stalin

விழா நாயகனாக முதலமைச்சர் உள்ளார். முப்பெரும் விழா, ஐம்பெரும் விழா, ஐம்பெரும் காப்பிய விழா எடுக்கும் முதல்வர், முதல்வர் அரசு ராஜாஜி மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு மாத்திரைகள் சரியாக கிடைப்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. அரசு மருத்துவமனைகளில் மாத்திரைகள் தட்டுப்பாடு நிலவுவது முதல்வருக்கு தெரியுமா எனத் தெரியவில்லை. மதுரையில் கலைஞர் நூலகத்தை பத்துமுறைக்கு மேல் ஆய்வு செய்த முதல்வர், நோய்தீர்க்கும் மருத்துவத்திற்கான மாத்திரைகள் விஷயத்தில் ஆய்வு செய்வாரா?

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எடப்பாடியார் ஆட்சி காலத்தில் 223 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, 21 கோடியில் நான்கு வழி சாலையுடன் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. வாக்கு சேகரிக்க உதயநிதி காட்டிய செங்கலை முதல்வர் எடுத்து வந்தாவது எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டுவாரா?

கலெக்டரிடம் மனு அளித்த ஆர்.பி.உதயகுமார்

தி.மு.க முன்னாள் அமைச்சர் சுப்புலெட்சுமியின் கணவர் ஜெகதீசன் ட்விட்டர் பதிவில், இந்த அரசில் ஊழல் இல்லாத துறையை காட்டினால் ஒரு கோடி பரிசு என பதிவிட்டு இருப்பதே இந்த அரசின் செயல்பாடுக்கு சாட்சியாக உள்ளது. அரசு விழாவை கட்சி விழாவை போல நடத்தி அரசு நிர்வாகத்தை அதற்கு பயன்படுத்தி வருகின்றனர், மாநாடு முப்பெரும் விழா என எத்தனை விழா நடத்தினாலும் தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுப்பாரா முதல்வர்" என்று கூறினார்.



source https://www.vikatan.com/news/politics/rb-udhayakumar-controversy-press-meet

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக