Ad

செவ்வாய், 20 செப்டம்பர், 2022

கால்நடைகளைத் தாக்கும் தோல் கட்டி நோய்... மனிதர்களையும் பாதிக்குமா?

கால்நடைகளை வேகமாகப் பாதித்து வருகிறது எல்.எஸ்.டி எனப்படும் தோல் கட்டி நோய் ( Lumpy skin disease - LSD). கேப்ரிபாக்ஸ் (capripox) என்ற வைரஸால் கால்நடை மற்றும் எருமைகளில் இந்த நோயின் பாதிப்பு உருவாகிறது. ஈக்கள், கொசுக்கள், பேன்கள் போன்ற ரத்தம் உண்ணும் பூச்சிகளால் விலங்குகளுக்கு அதிவேகமாக இந்நோய் பரவுகிறது. விலங்குகளில் காய்ச்சல் மற்றும் தோலில் முடிச்சுக்களை (nodules) உண்டாக்குவதோடு, நோயின் தீவிரம் அதிகரிக்கையில் இறப்பும் நிகழ்கிறது.

கால்நடை

இந்த வைரஸ் நோய்த்தொற்றால் நாடு முழுவதும் சுமார் 57,000 - க்கும் அதிகமான கால்நடைகள் இறந்துள்ளது என மத்திய அரசு வியாழக்கிழமையன்று அறிவித்துள்ளது. இந்த நோய்த் தொற்றால் இதுவரை 15.21 லட்சத்துக்கும் அதிகமான கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஹரியானா மற்றும் டெல்லி உட்பட ஏழு மாநிலங்களில் உள்ள கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

நோய்த் தொற்றால் விலங்குகள் பாதிக்கப்படும் பட்சத்தில், பாதிக்கப்பட்ட விலங்குகளைத் தனிமைப் படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தவும், பரவாமல் தடுக்கவும், கட்டுப்பாட்டு அறைகள் ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் உருவாக்கப்பட்டுப் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதும் தொற்றுநோய்ப் பரவலால், இந்த இரண்டு மாநிலங்களில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 3,000 கால்நடைகள் இறந்துள்ளன.

Cows

இந்நோய்ப் பாதிப்புக்குச் சிகிச்சைகள் ஏதும் இல்லை. ஆனால், நோய்ப் பரவலைத் தடுக்க தடுப்பூசிகள் உண்டு. அதோடு இந்த வைரஸ் தொற்று விலங்குகளிடமிருந்து மனிதர்களைப் பாதிக்காது. ஆனால், கால்நடையிலிருந்து பெறப்படும் பொருள்களில் தாக்கத்தை உண்டாகும். இதைத் தவிர, பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மும்பையில் மாடுகளின் போக்குவரத்துக்கு, மும்பை காவல்துறை செப்டம்பர் 14 -ம் தேதி தடை விதித்துள்ளது. இந்தத் தடையானது அக்டோபர் 13 வரை அமலில் இருக்கும். அதோடு இந்தத் தடையை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.



source https://www.vikatan.com/news/animals/cattle-skin-tumor-disease-does-it-affect-humans-too

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக