வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்து எட்டு என்று ஞாபகம். இப்படி ஆரம்பிக்கும்போதே ஏதோ சரித்திர, பூகோளக் கதை சொல்லப் போகிறான் என்று பக்கத்தைப் புரட்டி விட்டீர்களானால்.. ஒரு நல்ல கதையை இழந்து விட்டீர்கள் என்று பின்னால் வருத்தப்படுவீர்கள்...
பெங்களூரில் சொல்ப சம்பளத்தில்(?) பிரம்மச்சாரியாய்(?) இருந்த காலத்தில் ஒரு பத்துக்கு பத்து ரூமில் கங்காதர் என்ற கன்னட நண்பனுடன் (அவன் மனைவியுடன் சண்டையிட்டு பிரிந்து வாழ்பவன்) தங்கி நாட்களை நெட்டித் தள்ளிக் கொண்டிருந்த காலம் . கங்காதர் தமிழ், இந்தி, கன்னடா, தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளை சரளமாகப் பேசுவான். முன்பு கடத்தல் தொழில் செய்து கொண்டிருந்ததாகவும் அதன் காரணமாக ஒரு முறை ஜெயிலுக்கு போய் வந்ததால் அவன் மனைவி லஷ்மி அவனை வெறுத்து ஒதுக்கி வைத்து விட்டதாகவும் மப்பில் இருக்கும் போதெல்லாம் உளருவான். நாங்கள் தங்கியிருந்த ரூமுக்கு அடுத்த வீட்டில் அவன் மனைவி தன் தாய் மற்றும் குடும்பத்துடன் தங்கி இருந்தாலும், அவனிடம் பேசுவது கிடையாது.
மாதத்தில் முதல் வாரம் நாங்கள் ராஜாக்கள்தான். சமைக்க மாட்டோம். இரண்டாவது வாரத்தில் ஸ்டவ் எரிந்தால்தான் வயிறு காயாது. இதில் நான்காவது வாரம்தான் கொடுமையானது. கடன் கொடுக்கும் இளிச்சவாயர்கள் சிக்கவில்லை என்றாலோ, எங்கள் கம்பெனிகளில் அட்வான்ஸ் சம்பளம் கிடைக்கவில்லை என்றாலோ, இரவு பெரும்பாலும் வயிற்றுக்கு ஈரத்துணிதான்.
இந்த நிலையில் ஒருநாள் கங்காதரின் நண்பருக்கு நண்பர் என்று சொல்லிக்கொண்டு ஒருவர் ஞாயிறு அதிகாலை (7 மணி) வந்து எங்களைச் சூழ்ந்து கொண்டார். கூடவே எங்கள் வயதில் சிவந்த ஒரு பையன். வலதுபுறம் வகிடெடுத்து, அரும்பு மீசையுடன், சற்று மொழுமொழுப்பாக, கொஞ்சம் நாணத்துடன் நின்றான். பார்க்கும்போதே தெரிந்தது மலபார் சேட்டன் என்று.
மேட்டர் இதுதான் அவன் தற்சமயம் சிரமதசையில் இருக்கிறான், அவனையும் எங்கள் ரூம்மெட்டாக நாங்கள் அங்கீகரிக்க வேண்டும். அதைக் கேட்டவுடன் கங்காதரின் கண்களில் ஒரு மின்னல் தோன்றி மறைந்தது. அதன் அர்த்தம், ஒரு கறவை மாடு தானாக கட்டுத்தரைக்கு வந்து தன்னை கட்டிக் கொண்டதே என்பதுதான். மின்னலைப் பார்த்து புரிந்து கொண்ட மலபார் சேட்டன்(சேட்டனா கொக்கா?), பாக்கெட்டில் கை விட்டு ஒரு ஆயிரம் ரூபாயை எடுத்து கங்காதரிடன் கொடுத்து, 'இதை அட்வான்ஸாயிட்டு வெக்கூ' என்று ஒரு புல்டாஸ் போட்டு எங்கள் இருவரின் விக்கெட்டை ஒரே பந்தில் வீழ்த்தினான்.
அந்த சேட்டன் தான் 'சஜி ஜேக்கப்'.
ஒரு சிறிய பெட்டியுடன் எங்கள் ரூமுக்கு ஒரு ஞாயிறன்று வந்து எங்கள் ஜோதியில் ஐக்கியமானான் சஜி ஜேக்கப். சஜிக்கு கார் டிரைவர் வேலை. ஒரு தமிழரின் வீட்டு கார் டிரைவராக மாதம் ஏதோ சம்பளத்தில் அவரிடமும், அவர் மனைவியிடமும், அவரின் மகளிடமும் திட்டு வாங்கிக் கொண்டே வேலை செய்து கொண்டிருந்தான். அவர் திட்டும்போது அம்மாவையும், அக்காவையும் வார்த்தைகளில் உபயோகித்து திட்டுவதுதான் கஷ்டமாக இருப்பதாக சில சமயம் புலம்புவான். உனக்கு கோபம் வராதா என்று கேட்டால், சிரித்துக் கொண்டே சொல்வான், ' ஆயாளு தமிழில் அல்லே திட்றது. மலையாளம் எங்கில் தேஷ்யம் வரும்' என்பான்.
அவன் ரூமுக்கு வந்தவுடன் எங்களின் வாழ்க்கையில் சில பல மாற்றங்கள் ஏற்பட்டன. முதல் மாற்றம், முருகனும், ராகவேந்திரரும் வீற்றிருந்த அறையின் ஜன்னல் விளிம்பில் யேசு பெருமானும் சேர்ந்து அமர்ந்து கொண்டார். மூன்று தெய்வங்களும் எல்லா வகையான வழிபாடல்களுக்கும் தங்களைப் பழக்கப் படுத்திக் கொண்டனர். அடுத்த மாற்றம், சமையல் மற்றும் வரவு செலவுகளைத் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டான் சஜி. அவன் சிக்கனத்தின் சின்னமாக இருந்ததால் எனக்கும், கங்காதருக்கும் எந்த ஆட்சேபணையும் இருக்கவில்லை. தவிர, சஜி செய்த மாறுதல்கள் எல்லாமே நல்ல எண்ணத்துடனும், சுயநலமற்றும் இருந்ததால் அவன் செயல்களை நாங்கள் ஒரு மனதாக ஏற்றுக் கொண்டோம். மூன்றாவது, ஹோட்டலில் சாப்பிடுவதையும், அவ்வப்போது பாருக்கு போவதையும் அவன் கட்டுப்படுத்தினான்.
என்னவோ தெரியவில்லை அவன் சொல்வதை மீற வேண்டும் என்று எங்களுக்குத் தோன்றவே இல்லை. ஒரு வீட்டில் கடைக்குட்டிக்கு எவ்வளவு உரிமை உண்டோ அத்தனையும் அவனே எடுத்துக் கொண்டான். சிகரெட் புகையினால் திணறிக் கொண்டிருக்கும் எங்கள் அறையில் இப்போதெல்லாம் சாம்பிராணிப்புகையும், ஊதுபத்தி புகையும்தான் மணந்து கொண்டிருந்தது.
நாங்கள் எவ்வளவோ கேட்ட போதிலும், சஜியிடம் இருந்து அவனைப் பற்றி அதிக விவரங்கள் சேகரிக்க முடியவில்லை. அவ்வப்போது கிடைத்த தகவலில், அவன் ஊர் கொச்சி- ஏழைக்குடும்பம்- பிழைப்புக்காக சென்னை சென்றான்- அங்கே டிரைவிங் லைசன்ஸ் எடுத்தும் வேலை கிடைக்கவில்லை- பெங்களூரில் வேலை கிடைத்ததால் இங்கே வந்து விட்டான். மாதா மாதம் ஊருக்கு பணம் அனுப்ப வேண்டும். அதுதான் இந்தச் சிக்கனம். வழக்கமான கதையாக இருந்தாலும், எது எப்படியோ.. நாங்கள் மாதம் முழுதும் பட்டினி இல்லாமல் சாப்பிட்டோம். எங்கள் அறையும் கண்ணியவான்கள் தங்கி இருக்கும் அறையாக சுற்றுள்ளவர்களால் மதிக்கப் பட்டது. வாழ்க சஜி ஜேக்கப்..!
' கன்னடதா மக்களெல்லா ஒந்தாக பண்ணி ' என்று பாடி ராஜ்குமார் கர்நாடக மக்களை உசுப்பேத்திக் கொண்டிருந்த காலம் அது. கங்காதரின் சின்னக் கொழுந்தியாள் ஒரு நாள் ரூமுக்கு வந்து எங்களை எரிச்சலோடு பார்த்து, ' ஒப்ரு தமிளு, ஒப்ரு கேரள்..ம்..நாவெல்லா கல்சாக்கு ஏன் மாடுவது?' என்று . வெம்பினாள். அடக்க முடியாத ஆர்வத்தோடு கேட்டாள்,' நீவு மூரு ஜனா மாத்தாடுவாக, யாவு பாஷையல்லி மாத்தாடுத்தீரா?' (நீங்கள் மூன்று பேரும் பேசும்போது எந்த பாஷையில் பேசிக்கொள்வீர்கள்?) சட்டென புரிந்து கொண்டு பதில் சொன்னான் சஜி 'தமிழ்'.
'தமிழ் வாழ்க' என்று அவளை வெறுப்பேற்றுவதற்காகக் கூவினேன். எரிச்சலின் உச்சமாக, 'இர்ரீ.. வாட்டாள் நாகராஜுக்கு ஹேளித்தினி..' என்று பயமுறுத்திவிட்டுச் சென்றாள். நானும், கங்காதரும் சிரித்துக் கொண்டோம். ஒரு வார்த்தை கூட புரியாத சஜி ' எந்த? எந்த?' என்று எங்களிடம் விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தான் அப்பிராணியாக.
இப்படியாக அதிகச் சிக்கலில்லாமல் வாழ்க்கைச் சக்கரம் சுழன்று கொண்டிருந்தபோதுதான் அது நடந்தது. ஒரு நாள் அதிகாலை வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டை அணிந்த லாலேட்டன் போலவும், மம்முட்டியைப் போலவும் உள்ள தடிமனாக நான்கு பேர் ரூமுக்குள் நுழைந்தனர். மிரட்சியுடனும், அதிர்ச்சியுடனும் அவர்களைப் பார்த்து கை கட்டி நின்றான் சஜி. ' நமக்கு பூவாம்' என்று ஒற்றை வார்த்தை மாத்திரம் சொன்னார் நான்கு பேரில் ஒருவர். என்னமோ ஏதோ என்று அவன் அருகில் செல்ல நானும், கங்காதரும் முயன்ற போது, ' எண்ட செறியச்சனும், அம்மாவனும்..' என்று அணை போட்டான் சஜி எங்களுக்கு.
காய்ந்து கொண்டிருந்த சர்ட், பேண்ட் போன்றவற்றை எடுத்து அவன் கொண்டு வந்த பெட்டியில் அடுக்கிக் கொண்டான். தயங்கித் தயங்கி போகும்போது எங்கள் இருவரின் விழிகளையும் உற்று நோக்கினான். அவன் சொல்ல நினைத்த எத்தனையோ வார்த்தைகளை, அந்த நனைந்த விழிகள், மெளன மொழியில் பகர்ந்தன. நால்வருக்கும் இடையில் அவன் பலி ஆடு போல அழைத்துச் செல்லப்பட்டான். படகு போன்ற ஒரு பெரிய கார் வெளியே நின்று கொண்டிருந்தது. அவர்களையும், எங்கள் குட்டித்தம்பி சஜி ஜேக்கப்பையும் ஏற்றிக் கொண்டு சீறிப் பாய்ந்த அந்த வண்டியை அதிர்ச்சி கலையாமல் பார்த்துக் கொண்டிருந்தோம் நானும் கங்காதரும்.. அதுதான் நாங்கள் அவனைப் பார்ப்பது கடைசி முறை என்பதுகூடத் தெரியாமல்..
சுவாரஸ்யமில்லாமல் கழிந்து கொண்டிருந்தன நாட்கள். கங்காதரின் கொழுப்பெடுத்த கொளுந்தியாள் மாத்திரம் ' மலயாளி ஹோகிபிட்று, தமிழு யாவாக ஹோகுவது?' என்று வெறுப்பேத்திக் கொண்டிருந்தாள்.
இதற்கிடையில், கங்காதர் வேலை செய்து கொண்டிருந்த ஃபேக்டரி நஷ்டத்தினால் மூடப்பட்டு விட மறுபடியும் பணக்கஷ்டம் எங்களை விரட்டியது. என் ஒருவன் சம்பாத்தியம்தான் என்ற நிலையில், எனக்கு தொந்தரவு கொடுக்க விரும்பாத கங்காதர் என்னைத் தனியாக போகச் சொன்னான். அவனை அந்த நிலையில் விட்டுச் செல்ல மனமில்லாமல் அங்கேயே தங்கியிருந்த போதுதான் அந்த யோசனையை சொன்னான் கங்காதர்.
அதாவது கொச்சினுக்குப் போய் சஜியைக் கண்டுபிடித்து கொஞ்சம் பண உதவி கேட்டுப்பார்ப்பது என்று.
'அட்ரஸ் இல்லாமல் கொச்சியில் எப்படி அவனைத் தேடி கண்டு பிடிப்பாய்? அப்படியே கண்டு பிடித்தாலும், அவனிடம் பண உதவி கேட்பது நன்றாக இருக்குமா?' என்றேன் நான்.
' அவன் கஷ்டப்பட்ட போது நாம் உதவவில்லயா? மேலும் அவன் அந்த மாதிரி நினைப்பவன் அல்ல. நான் போகிறேன். நீயும் வந்தால் நன்றாக இருக்கும்' என்றான் கங்காதர்.
' இல்ல.. எனக்கு மனசில்ல.. நீ வேணும்னா போய் வா ' என்றேன். உதவிக்குப் பதில் உதவியாக பணம் வாங்குவது எனக்கு கேவலமாகப் பட்டது.
போய் மூன்று நாட்கள் கழித்துத் திரும்பி வந்தான் கங்காதர். சட்டைப் பையில் நூறு ரூபாய் நோட்டுக்கள் பிதுங்கிக் கொண்டிருந்தன. அவன் ரூமுக்கு வந்தவுடன் கங்காதரின் மச்சானும், இரண்டு கொளுந்தியாள்களும் அவனைச் சுற்றி நின்று சஜியைப் பற்றி ஆவலுடன் விசாரிக்கத் தொடங்கினர்.
கொச்சியில் கங்காதர் போய் இறங்கியவுடன், பஸ் ஸ்டேண்ட் பக்கத்தில் உள்ள ஒரு பெரிய செருப்புக் கடையில்தான் முதலில் விசாரித்தானாம். ஏனென்றால் சஜி ஒருமுறை பேசும்போது அவன் அப்பாவுக்கு கொச்சியில் பஸ் ஸ்டேண்ட் பக்கத்தில் செருப்புக்கடை இருப்பதாகக் கூறியிருந்திருக்கிறான். அங்கிருந்த மேனேஜர் சஜியின் பேரைக் கேட்டவுடன், சஜிக்கு போன் செய்ய, சஜி ஓடி வந்து இறுக அணைத்துக் கொண்டானாம். அடுத்த இரண்டு நாட்களும் கங்காதருக்கு ராஜ உபச்சாரம்தானாம். காரணம், சஜி அவன் எங்களிடத்தில் கூறியதைப் போல ஏழை ஒன்றும் இல்லையாம். அவன் குடும்பம் கொச்சியில் உள்ள பெரும் பணக்காரக் குடும்பங்களில் ஒன்றாம். தோல் தொழிலில் கொடி கட்டிப் பறக்கும் அவன் அப்பாவிற்கு ஒரே மகனாம் சஜி.
சிறு வயதிலுருந்தே பொத்திப் பொத்தி வளர்த்தியதால் வெறுப்புற்று சுதந்திரக் காற்றை சுவாசிக்க வீட்டை விட்டு ஓடி வந்த காலத்தில்தான் எங்களோடு வாசம். என்னையும், மற்றவர்களையும் கேட்டதாகவும், செலவுக்கு போதுமான அளவு பணம் கொடுத்து விட்டதாகவும், எப்போது தேவைப்பட்டாலும் வரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டானாம். அவன் கூறியவற்றை அனைவரும் கேட்டுக் கொண்டாலும், அவன் கூறிய முழுதும் என்னால் நம்ப முடியவில்லை. ஆனாலும் அவன் கொண்டு வந்திருந்த பணம் நம்பும்படி இருந்தது.
பணம் கையில் புழங்கியதால், அன்று பாருக்கு சென்றோம். நான் முதலிலேயே கங்காதரை கவிழ்ப்பதென்று முடிவு செய்திருந்ததால் ஒரு கல்யாணி மட்டும் எடுத்துக்கொண்டு அவனுக்கு கொஞ்சம் அதிகமாக ஊற்றி விட்டேன். எதிர்பார்த்ததைப் போலவே, உளறலினின் உச்ச கட்டத்தில் கொச்சியில் நடந்ததைச் சொல்லிவிட்டான் கங்காதர்.
செருப்புக்கடையில் மானேஜரைப் பார்த்தது வரை சரி. தான் யாரென்று மானேஜரிடம் கூறியதும் அவர் சஜியின் அப்பாவுக்குப் போன் செய்திருக்கிறார். பின் மானேஜர் திரும்பி வந்து கொஞ்சம் மிரட்டும் தொனியில் சொல்லியிருக்கிறார், ' பாரு தம்பி.. சஜியை யாரும் பார்க்க முடியாது அது மட்டுமல்ல இங்கிருந்து நீ எவ்வளவு சீக்கிரம் போகிறாயோ அவ்வளவு நல்லது. சஜியின் அப்பா பெரிய பணக்காரர் மட்டுமல்ல. இங்கு தாதாவும் கூட. சஜியை அவர் மீண்டும் இழக்க விரும்பவில்லை. எந்த விதத்திலேயும் சஜியை யாரும் நெருங்க முடியாது. ஒரு ஜெயிலில் இருப்பது போல இருக்கிறான். நீ வந்தது கூட அவனுக்குத் தெரியாது. உனக்குப் பணம் வேண்டுமானால் கொடுத்து அனுப்பச் சொன்னார். ஆனால் இன்னும் ஒரு மணி நேரத்தில் இந்த ஊரை விட்டு நீ போய் விட வேண்டும். அதுதான் உனக்கு நல்லது. இந்தா எவ்வளவு வேணுமோ அவ்வளவு எடுத்துக்கோ' என்று பணக்கட்டை மேஜை மேல் போட்டார். பயத்தில் எவ்வளவு கையில் கொண்டதோ அவ்வளவு அள்ளிக்கொண்ட அவனை பேருந்தில் ஏற்றி அனுப்பிய பின்தான் அந்த மானேஜர் நிம்மதிப் பெருமூச்சு விட்டார். கதையை சொல்லிய (உளறிய) கங்காதர் போதையல்லாத உண்மைக் கண்ணீரைச் சொறிந்தான். இனி சஜியைப் பார்க்கவே முடியாது என்ற உண்மை மனதில் பாரத்தை சுமக்க வைத்தது. எனக்கும் ஏதோ ஒன்றை இழந்ததைப் போல கண்ணீர் கண்களில் முட்டி நின்றது...!
**************
-சின்னுசாமி சந்திரசேகரன்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
source https://www.vikatan.com/oddities/miscellaneous/my-vikatan-short-story-of-a-young-man
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக