Ad

புதன், 1 டிசம்பர், 2021

டெக் உலகை இயக்கும் இந்தியர்கள்... டாப் CEO-க்களின் முழு பயோடேட்டா!

இந்தியாவில் இருந்து இன்னொரு டெக் CEO. ஏற்கனவே, பல இந்தியர்கள் உலகின் முன்னணி டெக் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி பதவியை அலங்கரித்திருக்க ட்விட்டரின் CEO-வாக அறிவிக்கப்பட்டிருக்கிறார் பராக் அக்ரவால். தற்போது இந்தியர்கள் எந்தெந்த நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்கள்? அவர்கள் சாதித்த கதை தெரியுமா?

சத்யா நாதெல்லா - மைக்ரோசாஃப்ட்

சத்யா நாதெல்லா - மைக்ரோசாப்ட்

1967-ல் ஹைதராபாத்தில் பிறந்த நாதெல்லா மணிப்பால் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் இளங்கலைப் பொறியியல் படிப்பையும், விஸ்கான்ஸின் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பையும் முடித்தார். அதன் பின்னர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முடித்தார். 1992-ல் மைக்ரோசாஃப்டில் சேர்வதற்கு முன் சன் மைக்ரோசிஸ்டம் என்ற அமெரிக்க நிறுவனத்தில் பணிபுரிந்தார் . மைக்ரோசாஃப்டில் பல முக்கிய பொறுப்புகளில் பதவி வகித்திருக்கிறார். மைக்ரோசாப்டின் க்ளவுடு சேவைகளை மேம்படுத்தியதில் அவருடைய பங்கு முக்கியமானது. 2014-ல் பில் கேட்ஸ் மற்றும் ஸ்டீவ் பால்மருக்கு அடுத்தபடியாக மைக்ரோசாப்டின் மூன்றாவது தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார் சத்யா நாதெல்லா. மைக்ரோசாஃப்ட்டின் பலம் பலவீனம் என்னவென்று அறிந்து மீண்டும் வளர்ச்சி பாதையில் அந்த நிறுவனத்தை அழைத்துசென்றதில் சத்யா நாதெல்லாவுக்கு முக்கிய பங்குண்டு!

அரவிந்த் கிருஷ்ணா - ஐபிஎம்

அரவிந்த் கிருஷ்ணா - ஐபிஎம்

1962-ல் ஆந்திராவில் பிறந்தவர் அரவிந்த் கிருஷ்ணா. தனது இளங்கலைப் பொறியியல் பட்டப்படிப்பை கான்பூர் ஐஐடியிலும், தன்னுடைய முனைவர் பட்டத்தை அமெரிக்காவில் இல்லினாய் பல்கலைக்கழகத்திலும் பெற்றார். 1990-ல் ஐபிஎம்மில் இணைந்த அவர் ஐபிஎம்மின் ஆய்வுத்துறை, க்ளவுடு சேவை தொடர்பான துறைகளில் துணைத் தலைவர் பதவி வகித்திருக்கிறார். 2019-ல் ரெட் ஹேட் (Red Hat) என்ற அமெரிக்க சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றை வாங்கியது ஐபிஎம். 34 பில்லியன் டாலர் மதிப்பில் ரெட் ஹேட் வாங்கப்பட்டதன் பின்னணியில் அரவிந்த கிருஷ்ணாவின் பங்கு நிறையவே இருந்தது. இதனைத் தொடர்ந்து 2020 ஏப்ரலில் ஐபிஎம்மின் தலைமை செயல் அதிகாரியாக அறிவிக்கப்படுகிறார் அரவிந்த் கிருஷ்ணா. அதன் பிறகு 2021 ஐனவரியில் ஐபிஎம்மின் தலைவராகவும் (Chairman) பணியமர்த்தப்படுகிறார். தற்போது ஐபிஎம்மின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி என இரு பொறுப்புகளையும் அரவிந்த் கிருஷ்ணாவே கவனித்து வருகிறார்.

ஷாந்தனு நாராயண் - அடோப்

ஷாந்தனு நாராயண் - அடோப்

1963-ல் ஹைதராபாத்தில் பிறந்தவர் ஷாந்தனு நாராயண். ஹைதராபாத்தில் உள்ள ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பொறியியல் பட்டத்தையும், அமெரிக்காவில் ஒஹையோ மாகாணத்தில் உள்ள பவுலிங் கிரீன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பொறியியல் பட்டத்தையும் அதனைத் தொடர்ந்து கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஹாஸ் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் எம்பிஏ பட்டத்தையும் பெற்றார். அடோப் நிறுவனத்தில் இணைவதற்கு முன்பாக மெஷரக்ஸ் ஆட்டோமேஷன் சிஸ்டம், ஆப்பிள் ஆகிய நிறுவனங்களில் பணிபுரிந்திருக்கிறார் ஷாந்தனு. இணையதளங்களில் டிஜிட்டல் புகைப்படங்களை பகிர்வதற்கு முன்னோடி எனக் கூறப்படும் பிக்ட்ரா நிறுவனத்தின் துணை நிறுவனர் ஷாந்தனு நாராயண். அதன் பிறகு 1998-ல் புராடக்ட் டெவலப்மன்டில் மூத்த துணைத் தலைவராக அடோபில் பணியில் இணைகிறார். 2007-ல் அடோபின் தலைமை செயல் அதிகாரியாக அறிவிக்கப்படுகிறார் ஷாந்தனு. அடோபின் சேவைகளை டெஸ்க்டாப்பில் இருந்து க்ளவுடு சேவைக்குக் கொண்டு சென்றதில் ஷாந்தனுவின் பங்கு முக்கியமான ஒன்று. தற்போது வரை அடோபின் தலைமை செயல் அதிகாரியாகத் தொடர்ந்து வருகிறார் ஷாந்தனு நாராயண்.

நிகேஷ் அரோரா - பாலோ ஆல்டோ நெட்வொர்க்

நிகேஷ் அரோரா - பாலோ ஆல்டோ நெட்வொர்க்

1968-ல் உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தில் பிறந்தவர் நிகேஷ் அரோரா. வாராணாசியில் உள்ள ஐஐடியில் இளங்கலைப் பொறியியல் படிப்பை முடித்தார். மேற்படிப்பை பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் முடித்த அவர், நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிப்பையும் முடித்தார். கல்லூரி முடித்த பிறகு பல நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகளை வகித்திருக்கிறார் நிகேஷ். 2004-ல் இருந்து 2014 வரை கூகுளில் பல தலைமைப் பொறுப்புகளில் இருந்திருக்கிறார் நிகேஷ். 2014-ல் கூகுளில் இருந்து விலகி சாப்ட்பேங்க்கில் தலைவராகவும் (President) COO-ஆகவும் (Chief Operating Officer) பணியில் இருந்திருக்கிறார். மேலும் அவைவா, ஏர்டெல், கோல்கேட் பால்மோலிவ், ஸ்பிரின்ட், சாப்ட்பேங்க், யாகூ உள்ளிட்ட நிறுவனங்களின் இயக்குநர்கள் குழுவிலும் முக்கிய உறுப்பினராக இருந்திருக்கிறார் நிகேஷ் அரோரா. இவற்றைத் தொடர்ந்தே 2018-ல் அமெரிக்காவின் சைபர் பாதுகாப்பு நிறுவனமான பாலோ ஆல்டோவில் தலைமை செயல் அதிகாரியாகவும், தலைவராகவும் (Chairman) பொறுப்பேற்றுள்ளார்.

சுந்தர் பிச்சை - ஆல்ஃபபெட்

சுந்தர் பிச்சை - ஆல்ஃபபெட்

இவருக்குத் தனியாக அறிமுகம் தேவையில்லை. நாம் அனைவரும் அறிந்த ஒரு முகம். 1972-ல் சென்னையில் பிறந்தவர் சுந்தர் பிச்சை. கராக்பூர் ஐஐடியில் இளங்கலைப் பொறியியல் பட்டத்தை முடித்த சுந்தர் பிச்சை, மேற்படிப்பை ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்திலும், எம்பிஏவை பென்சில்வேனியா பல்கலைக்கழகத்திலும் முடித்தார். 2004-ல் கூகுளில் இணைந்தார் சுந்தர் பிச்சை. கூகுள் க்ரோம், க்ரோம் ஓஎஸ் மற்றும் கூகுள் ட்ரைவ் ஆகியவற்றின் மேம்பாட்டில் சுந்தர் பிச்சையின் பங்கு முக்கியமானது. இவரது மேற்பார்வையின் கீழ் ஆண்ட்ராய்டு கூகுளின் ஒரு முக்கிய அங்கமாக மாறியது. 2015 ஆகஸ்டில் கூகுளின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 2017-ல் ஆல்ஃபபெட்டின் இயக்குநர்கள் குழுவில் ஒருவராகவும் நியமிக்கப்படுகிறார் சுந்தர் பிச்சை. 2019 டிசம்பரில் ஆல்ஃபபெட் CEO பொறுப்பும் சுந்தர் பிச்சையிடம் கொடுக்கப்பட்டது.

பராக் அக்ரவால் - ட்விட்டர்

பராக் அக்ரவால் - ட்விட்டர்

முன்னணி டெக் நிறுவனங்களின் இந்தியத் தலைமை செயல் அதிகாரிகள் பட்டியலின் புதிய வரவு பராக் அக்ரவால். 1984-ல் மும்பையில் பிறந்தவர் பராக். பாம்பே ஐஐடியில் இளங்கலைப் பொறியியல் பட்டத்தையும், ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றிருக்கிறார் பராக். சாதரண பொறியியலாளராக இணைந்த பராக் 2017-ல் ட்விட்டரின் CTO-ஆக (Chief Technology Officer) உயர்ந்தார். ட்விட்டரில் சேர்வதற்கு முன்னதாக மைக்ரோசாப்ட் மற்றும் யாகூ ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியிருந்தார். ட்விட்டரில் இணைந்தபிறகு, 2019-ல் ட்விட்டரில் பரப்பப்படும் தவறான கருத்துக்கள் மற்றும் அவதூறுப் பேச்சுக்களைக் களைவதற்காக 'ப்ராஜக்ட் பளூஸ்கை' திட்டத்தை முன்னெடுத்தது ட்விட்டர். அதனை நிர்வகிக்கும் பொறுப்பு பராக்கிடமே கொடுக்கப்பட்டது. அதன் பிறகு நேற்றும் ட்விட்டரின் புதிய தலைமை செயல் அதிகாரியாக அறிவிக்கப்பட்டிருக்கிறார் பராக் அகர்வால்.



source https://www.vikatan.com/technology/tech-news/indian-ceos-of-top-tech-companies-full-details

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக