சென்னை கோயம்பேட்டில் செயல்பட்டு வரும் புனித தாமஸ் கலை அறிவியல் கல்லூரியின், பேராசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறி, அந்த கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். சம்பந்தப்பட்ட ஆங்கிலத்துறைப் பேராசிரியரை கைதுசெய்ய வேண்டும் எனக்கோரி கல்லூரியை முற்றுகையிட்டு இரண்டு நாட்களாக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்றையதினம் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, தகவலறிந்து வந்த மதுரவாயல் காவல்துறையினர் பாதுகாப்புக்காக கல்லூரியில் குவிக்கப்பட்டனர். பின்னர், காவல்துறை உதவி ஆணையர் ரமேஷ் பாபு, விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக்கூறி உறுதியளித்ததும், மாணவர்கள் கலைந்துசென்றனர்.
இந்த நிலையில், கல்லூரி நிர்வாகம் குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியரை சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்திருக்கிறது. ஆனால், இதனை ஏற்காத கல்லூரி மாணவர்கள் அவரை கைது செய்யவேண்டும் எனக்கோரி இன்றும் போராட்டத்தை தொடங்கியிருக்கின்றனர்.
இந்த சம்பவம்தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களிடம் பேசியபோது, ``குறிப்பிட்ட பேராசிரியர், ஆன்லைன் வகுப்பு நடக்கும்போதெல்லாம், மாணவிகளின் செல்போனை தொடர்புகொண்டு ஆபாசமாக பேசுவதும், ஆபாசமாக எஸ்.எம்.எஸ் அனுப்புவதுமாக இருந்திருக்கிறார்.
குறிப்பாக, ஆங்கிலத்துறையில் இரண்டாம் ஆண்டு படிக்கக்கூடிய ஒரு மாணவிக்கு இதுபோன்று தொடர்ச்சியாக பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார். எனவே, அந்தப் பேராசியரை கண்டித்தும், அவரை கைதுசெய்து சிறையிலடைக்க வேண்டும் எனக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம்!" என தெரிவித்தனர்.
மற்றொரு மாணவர், ``எங்கள் கல்லூரியில் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்கனவே பலமுறை நடந்திருக்கிறது. அவையெல்லாம் கல்லூரிக்குள்ளாகவே பேசி முடித்துவைக்கப் பட்டிருக்கிறது. காவல்துறை முறையாக விசாரித்தால், இவரைப்போன்று பல ஆசிரியர்களின் பாலியல் தொந்தரவுகள் வெளியில் வரும்!" எனக்கூறினார்.
மேலும், இதுகுறித்து விளக்கம் கேட்பதற்காக கல்லூரி நிர்வாகத்தினரை தொடர்பு கொண்டபோது, ``இங்கு போராட்டம் நடப்பதாக யார் சொன்னது? நீங்கள் வந்து பார்த்தீர்களா? இங்கு எந்தவித தவறும் நடக்கவில்லை; எந்தவிதமான போராட்டத்திலும் மாணவர்கள் ஈடுபடவில்லை!" எனக்கூறி தொடர்பை உடனடியாக துண்டித்தனர். மாணவர்களின் குற்றச்சாட்டு தொடர்பாக கல்லூரி நிர்வாகம் உரிய விளக்கம் அளித்தால் அதனை பரிசீலனைக்குப் பின்னர் வெளியிட தயாராக இருக்கிறோம்.
source https://www.vikatan.com/news/crime/chennai-college-students-protest-against-professors-sexual-harassment
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக