ஆல்டைம் கிரேட் ஆக எல்லாம் அவரை ஏற்றுக்கொள்ள முடியாதென்ற மஞ்ச்ரேக்கரின் கூற்றை பொய்யாக்கி வருகின்றன அஷ்வினின் அடுத்தடுத்த சாதனைகள்.
சொந்த மண்ணில் 300 விக்கெட்டுகள் என்னும் மைல்கல், அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது இந்திய பௌலராகப் பதவி உயர்வு, டெஸ்டில் தொடர் நாயகன் விருதை அதிக முறை கைப்பற்றிய இரண்டாவது நிலையில் உள்ள வீரர் என்ற அங்கீகாரம் என பல அடுக்குச் சாதனைகளை உள்ளடக்கியது, அஷ்வினின் நியூஸிலாந்துடனான கிரிக்கெட் தொடர்.
2011-ல், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக விளையாடிய முதல் டெஸ்ட் தொடரிலேயே, 22 விக்கெட்டுகளை வீழ்த்தி, தொடர் நாயகன் விருதோடுதான் ரெட் பால் கிரிக்கெட் உலகுக்குப் பரிச்சயமானார் அஷ்வின். சிஎஸ்கேயின் செல்லப் பிள்ளையாக மட்டுமே கருதப்பட்ட அவர், இந்தியாவின் ஸ்பைடர் மேனாக, சுழல் வலையால் கோப்பைகளைக் கைப்பற்றுவார் என முன்னதாகக் கணிக்கப்படவில்லை. ஆனால், அவர் ஆரம்பித்து வைத்த அந்த அதிர்வலையின் வீச்சு, பத்தாண்டுகள் கடந்தும் இன்னமும் தொடர்ந்து கொண்டேதானுள்ளது.
2013ம் ஆண்டில் இருந்து 14 டெஸ்ட் தொடர்களைத் தொடர்ச்சியாக, சொந்த மண்ணில் வென்ற இந்தியாவின் சாதனையை எண்ணி, உச்சி முகர்ந்து பாராட்டும் அதேநேரம் அதற்கான மறைமுக விசையினை மறக்கக் கூடாது. 'Lion's Share' என்ற ஆங்கிலச் சொற்பதத்துக்கு ஏற்றவாறு, இந்த வெற்றியில் அஷ்வினின் பங்கு மிக முக்கியமானது. இதில் இன்னமும் தெளிவு பெற ஒரு புள்ளி விவரமே போதுமானது. இந்த 14 தொடர்களில், இந்தியா 40 போட்டிகளில் விளையாடி 32-ல் வென்றிருக்கிறது. அந்த 40 போட்டிகளிலுமே, அஷ்வின் ஆடியிருக்கிறார். அந்தப் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக இந்தியா எடுத்துள்ள 749 எதிரணி விக்கெட்டுகளில் 246 விக்கெட்டுகள் அஷ்வினின் பந்தால் விழுந்தவையே. அதாவது, மூன்றில் ஒரு விக்கெட், அஷ்வினுடைய கணக்கில் ஏறியதுதான். இத்தகவலே சொல்லும், அனில் கும்ப்ளேவுக்கு அடுத்தபடியாக ஏன் அஸ்வின் அதிகமாகக் கொண்டாடப்படுகிறார் என்பதனை.
நடந்து முடிந்த நியூசிலாந்து தொடரில், பல சாதனைகளை அஷ்வின் படைக்கவும் செய்திருக்கிறார், உடைக்கவும் செய்திருக்கிறார். அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்த இந்தியர்கள் பட்டியலில், ஹர்பஜனை பின்னுக்குத் தள்ளி, மூன்றாவது இடத்துக்கு முன்னேறினார் அஷ்வின். தற்சமயம், 427 விக்கெட்டுகளோடு, மூன்றாவது இடத்தில் இருக்கும் அஷ்வினுக்கு, கபில்தேவின் விக்கெட் கணக்கைச் சமன் செய்ய இன்னமும் 7 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்படுகின்றன. அதேபோல், அனில் கும்ப்ளேவுக்கும் அவருக்குமான இடைவெளி, இன்னமும் 192 விக்கெட்டுகளாக இருக்கிறது.
அது எப்படி இருப்பினும், கிரிக்கெட் உலகம் அவர் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும், அளவீடுகளுக்கு அப்பாற்பட்டதுதான். 800 டெஸ்ட் விக்கெட்டுகளோடு, உலகம் கண்ட ஒப்பற்ற சுழல்பந்து வீச்சாளராக வலம் வரும் முத்தையா முரளிதரன் இந்த ஆண்டின் தொடக்கத்தில், தனது சாதனையை உடைக்க அஷ்வினால் மட்டுமே முடியும் எனக் கருத்துத் தெரிவித்திருந்தார். ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் மற்றும் முன்னாள் இந்திய இடைக்காலப் பயிற்சியாளராகப் பதவி வகித்த சஞ்சய் பங்கர் என பலரது பார்வையும் இதுவாகவே இருக்கிறது.
இதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை. 50, 100-ல் தொடங்கி, 400 விக்கெட்டுகள் வரை உள்ள ஒவ்வொரு மைல்கல்லையும், குறைந்த இன்னிங்ஸ்களில் எட்டிய இந்திய பௌலர், அஷ்வின்தான். அதற்காக, "ஜாம்பவானான முரளிதரனோடு, அவரை ஒப்பிட்டு விட முடியுமா?!" எனப் புருவங்களை உயர்த்துபவர்களுக்கான இன்னொரு புள்ளி விவரம், இந்த 300 இலக்கை எட்ட, அவர் எடுத்துக் கொண்ட இன்னிங்ஸ்கள்தான். முரளிதரன், முன்னதாக அதனை 48 போட்டிகளில் செய்திருந்தார் எனில், அஷ்வின் அதனை 49 போட்டிகளில் செய்து முடித்திருந்தார். முரளிதரன், பந்து வீசும் விதத்தில் எழுப்பப்பட்ட சர்ச்சைகளால் பல தடங்கல்களைக் கடந்தார் என்றால் அஷ்வினும், கோலி வெளிநாடுகளில் பேட்டிங் பலத்திற்காக ஜடேஜாவை நோக்கி நகர்ந்ததால், சில போட்டிகளைத் தவற விட்டிருந்தார். இந்த ஆண்டு இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில், அஷ்வின் வெளியே அமர்த்தப்பட்டதற்கான விளக்கத்தை இன்னமும் கிரிக்கெட் விமர்சகர்களும், ரசிகர்களும் கேட்டுக் கொண்டேதான் இருக்கின்றனர். அத்தகைய தடைகளையும் மீறி, இந்த ஆண்டு மட்டும் 50 டெஸ்ட் விக்கெட்டுகளை அஷ்வின் அநாயசமாகக் கடந்திருப்பதுதான் அவருக்கான உயரங்களை அதிகரித்துக் கொண்டே போகிறது.
ஒரே காலண்டர் ஆண்டில் 50 டெஸ்ட் விக்கெட்டுகளை அஷ்வின் கடப்பது இது முதல் முறை, இரண்டாம் முறை அல்ல நான்காவது முறை. முன்னதாக 2015, 2016, 2017-ம் ஆண்டுகளிலும், இதே சாதனையை அவர் நிகழ்த்தி இருந்தார். அவரைத் தவிர்த்து வேறு எந்த இந்திய பௌலருக்கும் இச்சாதனை வசப்படவில்லை. அனில் கும்ப்ளேவும், ஹர்பஜனும், அஷ்வினுக்கு அடுத்தபடியாக மூன்று முறை இதனை அரங்கேற்றி இருந்தனர்.
வேகப் பந்து வீச்சாளர்கள் போல 30-களின் மையத்திலேயே, விடைபெற வேண்டிய அவசியமும் அவருக்கில்லை. அதோடு முழு உடல் தகுதியோடு வலம் வரும் அஷ்வினுக்கு வயதும் 35 என்பதாலும், இன்னமும் 5 ஆண்டுகள் வரை தாராளமாக ஆடுவார் என்பதாலும், விக்கெட் வேட்டையாடும் வேகத்தை அவர் சற்றே அதிகமாக்கினால் முரளிதரனின் சாதனையை அவர் சமன் செய்யலாம் என்ற கணக்கிலேயே கருத்துக் கூறப்படுகிறது. ஆனால், உண்மையில் இதற்கான சாத்தியக்கூறுகள் குறைவுதான். ஏனெனில், அதற்கு இன்னமும் அஷ்வின் 370 விக்கெட்டுகளுக்கும் மேல் வீழ்த்த வேண்டும். அவருடைய வயதையும், கணக்கில் அடங்கா மற்ற காரணிகளையும் வைத்துப் பார்த்தால் உறுதியாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பௌலராக அனில் கும்ப்ளேவையும் தாண்டி பட்டியலில் அஷ்வின் தனது பயணத்தை முடிப்பார். அதே சமயம், உலக அளவில் அதிக விக்கெட்டுகளை எடுத்த பௌலர்கள் வரிசையில், தற்சமயம் 12-வது இடத்திலிருக்கும் அஷ்வின், முதலிடத்திற்கு முன்னேறுவாரா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
அதிக விக்கெட்டுகள் என்பது கௌரவம்தான் என்றாலும், அதற்கு இணையான பல சாதனைகளை ஏற்கனவே அஷ்வின் படைக்கத் தொடங்கி விட்டார். நியூசிலாந்துடனான இத்தொடரில், தொடர் நாயகன் விருதை அஷ்வின் பெற்றிருக்கிறார். டெஸ்டில் அதிக முறை தொடர் நாயகன் விருதை வென்றோர் பட்டியலில் காலீஸுடன், இரண்டாவது இடத்தை (9 முறை) அஷ்வின் பகிர்ந்துள்ளார். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், இதனை நிகழ்த்த, காலீஸுக்கு 61 தொடர்கள் தேவைப்பட்டிருக்கின்றன. அஷ்வினோ, அதனை 33 தொடர்களில், செய்திருக்கிறார். அதே 61 தொடர்களில், 11 முறை தொடர் நாயகன் விருதை வென்ற பெருமையோடு முதலிடத்தை முரளிதரன் அலங்கரிக்கிறார்.
முரளிதரனின், அதிக விக்கெட்டுகள் சாதனையை அஷ்வின் முறியடிக்கிறாரோ இல்லையோ, அதிகமுறை தொடர்நாயகன் விருதை வென்ற பெருமையை அவர் நிச்சயம் அடைவார். காரணம், சராசரியாக இதுவரை 3.67 தொடர்களுக்கு ஒருமுறை அஷ்வின் தொடர் நாயகன் விருதை வென்றிருக்கிறார். இந்த அளவீட்டிலும் அஷ்வின் இரண்டாவது இடம் வகிக்கிறார். அவருக்கு முன்னதாக இம்ரான் கான் மற்றும் மால்கம் மார்ஷல், சராசரியாக 3.5 தொடர்களுக்கு ஒருமுறை தொடர் நாயகன் விருதைக் கைப்பற்றியதே பெரிய அளவில் பேசப்பட்டது.
இதில் இன்னொரு ருசிகரமான தகவல் என்னவென்றால், அஷ்வின், டெஸ்டில் ஆட்ட நாயகன் (8 முறை) விருதைவிட, தொடர் நாயகன் விருதையே அதிக முறை (9 முறை) வாங்கியுள்ளார் என்பதுதான். அதேபோல், ஒரே ஆண்டில், இருமுறை தொடர் நாயகன் விருதை அஷ்வின் வாங்குவது, இது மூன்றாவது முறை. முன்னதாக, 2015 மற்றும் 2016-ம் ஆண்டுகளில், ஆண்டுக்கு இருமுறை தொடர் நாயகன் விருதை அஷ்வின் பெற்றிருந்தார். இந்தியா சொந்த மண்ணில் வெற்றி பெற்றுள்ள 14 தொடர்களில், 5 தொடர்களில் அஷ்வின்தான் தொடர் நாயகன் என்பதே சொல்லும் எந்தளவு தாக்கத்தை அவர் ஏற்படுத்தி இருக்கிறார் என்பதனை!
இதைவிடவும் நம்மை வியப்பில் ஆழ்த்தும் இன்னொரு சாதனையும் அஷ்வினின் வசம் உண்டு. இந்தியா வெற்றி பெற்ற டெஸ்ட் போட்டிகளில் 296 விக்கெட்டுகளை அஷ்வின் எடுத்துள்ளார். இந்தப் பட்டியலில், அவருக்கு அடுத்தபடியாக, இரண்டாவது இடத்தில்தான் 288 விக்கெட்டுகளோடு கும்ப்ளே இருக்கிறார்.
'இந்தியாவை இந்தியாவில் வெல்லவே முடியாது' என்ற கருத்துருவாக்கம், வலுப்பெற பௌலராக மட்டுமின்றி, பேட்ஸ்மேனாகவும் அஷ்வின் மெருகேறிக் கொண்டே வருகிறார். சமீபமாக, செட்டில் ஆகிவிட்டார் என்றால் பௌலர்களுக்கு ஆட்டங்காட்ட ஆரம்பித்து மோதி விளையாடுகிறார். மேலும், 2021-ம் ஆண்டை மட்டும் எடுத்துப் பார்த்தால், 30-களில் உலவும் அவரது பேட்டிங் சராசரி, இந்தியாவின் பின்வரிசையை பலப்படுத்துகிறது. உண்மையில், புஜாரா, ரஹானே உள்ளிட்ட டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை விட அஷ்வினின் இந்த வருட சராசரி அதிகம்.
இந்தியாவில் நடந்துள்ள போட்டிகளில் ஓப்பனர்கள், மத்திய வரிசை பேட்ஸ்மேன்கள், டெய்ல் எண்டர்கள், வேகப் பந்து வீச்சாளர்கள் என ஏதோ ஒரு சிலர் சோபிக்கத் தவறினாலும், அதை இந்தியா ஈடுகட்ட அஷ்வின் தோள் கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில், டி20 ஃபார்மட்டில் பல ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் ரீ-எண்ட்ரி, பல பட்டியல்களில் தனது பெயரை மேலேறச் செய்தது எனப் பெரும்பாலும் அஷ்வினுக்கு இந்த ஆண்டு, நினைவுகூரத்தக்க ஆண்டாகவே மாறி இருக்கிறது.
இது தொடர்கதையாகும் பட்சத்தில், நடப்பு டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் சிறந்த பௌலர்களில் ஒருவராக அஷ்வின் வலம் வரலாம். தலைமை மாறும் பட்சத்தில், ஒருநாள் போட்டிகளில் கூட, மறுபடி தலைகாட்டி கோலோச்சலாம்.
வாழ்த்துகள் ரவிச்சந்திரன் அஷ்வின்!
source https://sports.vikatan.com/cricket/why-is-ravichandran-ashwin-one-of-the-legends-of-modern-cricket
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக