Ad

புதன், 1 டிசம்பர், 2021

தஞ்சாவூர்: நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் காலதாமதம்; மேடையில் மயங்கி விழுந்த மூதாட்டியால் பரபரப்பு!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருக்கும் முதல் தளத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் அரசு கொறடா கோவி.செழியன், எம்.எல்.ஏ-க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி நீலமேகம், அண்ணாதுரை, ஜவாஹிருல்லா, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

நலத்திட்ட உதவை பெற வந்த மூதாட்டி

முன்னதாக காலை 10 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதனால் நலத்திட்ட உதவிகள் பெறுபவர்கள் காலை 9 மணிக்கெல்லாம் வருமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனர். அதன்படி பல பகுதிகளிலிருந்து சுமார் 100 பேர் அதிகாரிகள் சொன்ன நேரத்துக்கு ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து காத்திருந்தனர். அதில், பெரும்பாலானோர் வயதானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நிகழ்ச்சி காலை 11.45 மணியளவில் தான் தொடங்கியது. அதுவரை அனைவரும் விழா அரங்கில் காத்திருந்தனர். அவர்களுக்குச் சிற்றுண்டி கூட வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. நிகழ்ச்சியில் அரசுக் கொறடா கோவி.செழியன் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் என ஒவ்வொருவரும் தி.மு.க ஆட்சியின் செயல்பாடுகள் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் குறித்துப் புகழ்ந்து பேசிக் கொண்டே இருந்ததில் நேரம் சென்று கொண்டே இருந்தது.

எம்.எல்.ஏக்கள் மற்றும் கலெக்டர்

இதனால் மதியம் சுமார் 1.20 மணிக்கு பிறகுதான் காத்திருந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவே ஆரம்பித்தனர். ஒவ்வொரு பெயராகக் கூறி அதிகாரிகள் அழைக்கக் கோவி. செழியன் மற்றும் எம்.எல்.ஏ-க்கள், கலெக்டர் எனப் பலரும் உதவிகளை வழங்கினர். அப்போது கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க அகிலாண்டேஸ்வரி என்ற பெண் நடக்க முடியாமல் நலத்திட்ட உதவி பெற மேடைக்கு வந்தார். அப்போது உதவி பொருள்களைப் பெற்றுக்கொண்டு திரும்பிய போது, திடீரென உடல்நிலை முடியாமல் மேடையின் பக்கவாட்டிலேயே அமர்ந்து விட்டார்.

பின்னர் அப்படியே மயங்கி தரையில் விழ அந்த அரங்கமே அதிர்ச்சியடைந்தது. சில நிமிடங்கள் அப்படியே கிடந்த அகிலாண்டேஸ்வரி முகத்தில் அங்கிருந்த சிலர் தண்ணீர் தெளித்தனர். லேசாகக் கண் விழித்த அவரை ஒருவர் தூக்கியதுடன் கைதூக்கலாக அழைத்துக் கொண்டு வெளியே சென்றார். ``ரொம்ப நேரம் டீ கூட குடிக்காம காத்திருந்ததுல மயக்கம் வர்ற மாதிரி இருந்துச்சு... அங்கிருந்த அதிகாரி ஒருவர்கிட்ட குடிக்க தண்ணீர் கொடுங்கய்யானு கேட்டேன்.

தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில்

அதற்கு அவர் எங்களுக்கே குடிக்க தண்ணீர் இல்ல கொஞ்ச நேரம் பொறுத்துகமா வாங்கிட்டு வெளியே போயிடலாம் என கூறினார். வயசான உடம்பு காலையிலேயே வேற வந்துட்டேன். தாங்க முடியாம மயக்கம் வந்துருச்சு" என தாங்கலாக அழைத்து கொண்டு சென்றவரிடம் கண்கலங்கினார்.

இது குறித்து சிலரிடம் பேசினோம், ``நலத்திட்ட உதவிகள் பெற வந்திருந்தவர்களைக் காத்திருக்க வைத்துக் கொண்டு எம்.எல்.ஏ-க்கள் பேசிகொண்டே இருந்ததில், உதவிகள் கொடுக்க ரொம்பவே தாமதமாகிவிட்டது. கிட்டதட்ட 50 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து வந்திருந்த அகிலாண்டேஸ்வரிக்கு முடியாமல் போனதில் மேடைக்கு முன் பகுதியிலேயே மயக்கம் போட்டு விழுந்தார். அப்போது மேடையிலிருந்த கொறடா, எம்.எல்.ஏ-க்கள் உள்ளிட்ட யாரும் எந்த அசைவும் இல்லாமல் அமர்ந்திருந்தனர்.

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

மயக்கம் போட்டு விழுந்த பிறகும் அவருக்கான வசதிகளை அதிகாரிகள் செய்து கொடுக்கவில்லை என்பது வேதனை. எதிர் வரும் நாள்களில் இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருபவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும். எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் நேரம் கருதி சிக்கீரமே நலத்திட்டங்களைக் கொடுத்து அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்க வேண்டும்" என்றனர்.

Also Read: ``என்னை ஏன் அழைக்கவில்லை!" - உணவு அருங்காட்சியக விழாவில் தஞ்சாவூர் திமுக எம்.பி வாக்குவாதம்



source https://www.vikatan.com/government-and-politics/elder-woman-faints-in-the-tanjore-collector-office

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக