Ad

புதன், 1 டிசம்பர், 2021

சென்னையின் வசூல்ராஜா வட்டங்கள் முதல் உண்மையை உடைத்த கே.எஸ்.அழகிரி வரை..! - கழுகார் அப்டேட்ஸ்

சமீபத்தில் ஆளுங்கட்சியினர் வியாபாரிகளிடம் வசூல் வேட்டை நடத்தியதாக எழுந்த புகாரை அடுத்து தி.நகரில் இரண்டு வட்டச் செயலாளர்கள் கட்சிப் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருக்கிறார்கள். இதையடுத்து, சென்னையில் பல்வேறு வட்டச் செயலாளர்கள்மீது புற்றீசல்போல புகார்கள் கிளம்பியிருக்கின்றன. ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த வட்டச் செயலாளர் ஒருவர், வீடு காலி செய்து தருவதாகச் சொல்லி, பெண் ஒருவரிடம் ஒரு லட்சம் ரூபாய் பணம் வாங்கிவிட்டு ஏமாற்றிவிட்டார்.

திமுக- அண்ணா அறிவாலயம்

அந்தப் பெண் காவல்துறையில் புகார் அளிக்க... விவகாரம் பெரிதாகியிருக்கிறது. தி.நகர் பகுதியில் மற்றொரு வட்டச் செயலாளர் கடைக்காரர்களிடம் மாமூல் வாங்கிவிட்டு, ‘காவல்துறையினர் மாமூல் கேட்டு வந்தால் அவர்களிடம் பணம் கொடுக்க வேண்டாம்... என் பெயரை மட்டும் சொல்லுங்கள்’ என்று தடாலடி காட்டிவருகிறாராம்.

சமீபத்தில், உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்று சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி ஏரியாவின் மூன்று நிர்வாகிகள் மாமூல் வேட்டையில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதேபோல ‘கேரளா’வை அடைமொழியாகக்கொண்ட இரண்டெழுத்து வட்டச் செயலாளர் ஒருவர் கிருஷ்ணாம்பேட்டை ஏரியாவில் சுடுகாட்டை ஆக்கிரமித்திருக்கிறார் என்றும், அவ்வை நடராஜன் சாலையில் வியாபாரிகளிடம் வசூல்வேட்டை நடத்துகிறார் என்றும் புகார்கள் வரிசைகட்டுகின்றன. மேலும், தனது குடும்பத்திலேயே இருவருக்குத் தற்காலிக அரசு வேலை வாங்கிய நிலையில், இப்போது கவுன்சிலர் சீட்டுக்கும் கேரளா நபர் குறிவைத்திருக்கிறார் என்று புலம்புகிறார்கள் ஏரியாவாசிகள். இதேபோல மயிலாப்பூர் பகுதியில் புல்லாங்குழல் நபர், கே.கே.நகரில் ‘மன்னர்’ பெயர்கொண்டவர், எண்ணூரில் மொழியின் பெயர்கொண்டவர் ஆகியோர்மீது அறிவாலயத்தில் புகார்கள் குவிந்துவருகின்றன. ஏற்கெனவே மழை வெள்ளத்தால் மக்கள் அதிருப்தியிலிருக்கும் நிலையில், இவர்களின் வசூல்வேட்டையால் வியாபாரிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் கடும் கோபத்தில் இருப்பதால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக இவர்களைக் கட்டம்கட்ட திட்டமிட்டுவருகிறதாம் கட்சித் தலைமை!

எதிர்க்கட்சியின் இரும்பு நபர் உச்சபட்ச பதற்றத்தில் இருக்கிறாராம். ‘எந்த நேரமும் போலீஸ் ரெய்டு வரலாம்’ என்று வந்த தகவலை அடுத்து, இரு நாள்களுக்கு முன்பு அவசர அவசரமாக தன்னிடமிருந்த 900 ஸ்வீட் பாக்ஸ்களைத் தனக்கு நெருக்கமான புள்ளிகளிடம் ஒப்படைக்கும் வேலையில் மும்முரமாகியிருக்கிறார். கிராமத்து வீட்டிலிருந்தும், ‘சாலை’ நகரத்திலிருந்தும் ஸ்வீட் பாக்ஸ்களை ஏற்றிக்கொண்டு கிளம்பும் வாகனங்கள் மலைப்பாதை ஒன்றிலும், மின்னனு நகர் தாண்டியும் பயணிக்கின்றனவாம்!

கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவுகளுக்காக தலா 12 பெரிய ஸ்வீட் பாக்ஸ்களைக் கொடுத்தது அ.தி.மு.க தலைமை. ஆனால், தென் மாவட்டத்தில் சில வேட்பாளர்களுக்கு மட்டும் அந்தப் பெட்டிகளில் சிலவற்றை ‘அப்புறம் வாங்கிக்கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டதாம். அந்த வகையில் நவரத்தினமான நபருக்கு ஏழு பெட்டிகள் பாக்கி வரவேண்டியிருந்தது. ஊர் முழுக்கக் கடனை வாங்கிவிட்டு, அடைக்க முடியாமல் அல்லாடியவர் கட்சித் தலைமையிடம் பாக்கி கேட்டு பலமுறை கெஞ்சியும் வேலை நடக்கவில்லை.

Also Read: மிஸ்டர் கழுகு: தி.மு.க எம்.பி-யின் தனிநபர் துதி! - முகம் சுளித்த மூத்த எம்.பி-க்கள்...

இதையடுத்தே, சமீபத்தில் தேசியக் கட்சியில் அவர் ஐக்கியமாகியிருக்கிறார். அவர் கேட்டதைக் கொடுத்து இணைப்பை நடத்திவிட்டது அந்த தேசியக் கட்சி!

கடந்த ஆட்சியில் முட்டை, பருப்பு என அரசுக்கு சப்ளை செய்து கோலோச்சிய அந்த நிறுவனம், மீண்டும் தனது லாபியை ஆரம்பித்துவிட்டது. தேர்தலுக்கு முன்பே நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தற்போது பல்வேறு டெண்டர் விவகாரங்களில் மூக்கை நுழைத்துவருகிறதாம் அந்த நிறுவனம். ஏற்கெனவே அந்த நிறுவனத்துக்கு எதிராக ‘போர்’ தொடுத்த அமைப்பு ஒன்று இப்போதும் தீவிரமாகப் போர் தொடுக்க... அவர்கள் ஏவும் அம்புகளெல்லாம் புஸ்வாணமாகிவிடுகின்றனவாம். இன்னொரு பக்கம், டெண்டர் உள்ளிட்ட ஆவணங்களில் தங்கள் பெயர் வந்துவிடக் கூடாது என்று ஆந்திராவிலிருந்து பினாமி பெயர்களில் கம்பெனிகளைக் களமியிருக்கிறது அந்த உணவுப்பொருள் சப்ளை நிறுவனம். இதற்கிடையே அரசு அளிக்கும் பொங்கல் பொருள்களை விநியோகிக்கும் டெண்டரை எடுப்பதில் மேற்கண்ட நிறுவனத்துக்கும், திருப்பூர் துணி நிறுவனம் மற்றும் மசாலா நிறுவனம் ஒன்றுக்கும் இடையே கடும் போட்டி நடக்கிறது!

திருச்சி மாநகராட்சி மேயர் பதவியைப் பிடிக்க, தி.மு.க-வில் கடும் போட்டி தொடங்கிவிட்டது. அன்பானவரின் ஆதரவாளர்களான மலைக்கோட்டை பிரமுகர், மீசைக்காரரின் ஆதரவாளரான ‘பாசமானவர்’, ஜெயமானவர் மற்றும் வாரிசு பிரமுகர் ஆகியோர் சீட் கேட்டு இப்போதே அறிவாலயத்தில் காய்நகர்த்த ஆரம்பித்துவிட்டார்கள்.

Also Read: பன்னீரின் வேலுமணி பாசம் முதல் அன்வருக்கு தூதுவிட்ட ராஜகண்ணப்பன் வரை... கழுகார் அப்டேட்ஸ்

எப்படியாவது சீட் வாங்கிவிட வேண்டும் என்று இவர்கள் ஒருவர்மீது ஒருவர் மாறி மாறிப் புகார்களை அனுப்பியதை அடுத்து அனைவரின் தகிடுதத்தங்களும் வெளியே வரவே... திருச்சி நிர்வாகிகளை மொத்தமாக விசாரிக்க உத்தரவிட்டிருக்கிறதாம் கட்சித் தலைமை. இதையடுத்து, “உங்களால என் மானமே போச்சு!” என்று தன் ஆதரவாளர்களைக் காய்ச்சி எடுத்திருக்கிறார் மீசைக்காரர். அன்பானவரோ கூலாக, “எதுக்கும் கவலைப்படாதீங்க... நான் பார்த்துக்குறேன்!” என்று தன் ஆதரவாளர்களைத் தேற்றியிருக்கிறார்.

கடந்த நவம்பர் 28 அன்று வேலூர் வந்திருந்த தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, ‘‘உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்குக் குறைந்த வார்டுகளை தி.மு.க ஒதுக்குவது வேதனை அளிக்கிறது’’ என்று உண்மையைப் போட்டு உடைத்தது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கே.எஸ்.அழகிரி

ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போதே, தி.மு.க போட்டியிட்ட பல இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் சுயேச்சையாகக் களமிறங்கி ‘டஃப்’ கொடுத்தனர். இந்தப் பிரச்னை நகரப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் நீடிக்கக் கூடாது என்பதற்காகத்தான் கே.எஸ்.அழகிரி, தோழமையுடன் சுட்டிக்காட்டினார் என்கிறார்கள் வேலூர் காங்கிரஸார்.

நீலகிரி மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த தாசில்தார் மாற்றத்தில், வனத்துறை அமைச்சர் தனக்குத் தோதான தாசில்தார்களைத் தனது தொகுதிக்குள் அமர்த்திக்கொண்டார் என்ற பேச்சு எழுந்தது. ஆனால், கோத்தகிரி ஏரியாவின் அதிகாரி ஒருவர் மட்டும் ஆளுங்கட்சிப் புள்ளிகளை கண்டுகொள்ளாமல் அ.தி.மு.க-வினருக்கே முன்னுரிமை கொடுத்துவந்தாராம். இதனால், அவர்மீது காட்டத்திலிருந்த அமைச்சர், சமீபத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவரை நேரில் அழைத்து, “நடக்குறது தி.மு.க ஆட்சி... அதை மனசுலவெச்சுக்கிட்டு வேலை செய்யுங்க!” என்று அனைவரின் முன்னிலையிலும் வெளுத்துவாங்கியிருக்கிறார். இந்த விவகாரம் நீலகிரி மாவட்ட அரசு அலுவலர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது!



source https://www.vikatan.com/government-and-politics/politics/kazhugar-updates-on-deals-about-dmk-and-congress-and-other-political-happenings

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக