Ad

வியாழன், 2 டிசம்பர், 2021

``அம்மாவை வெட்டாதீங்க தாத்தா..!" - பெண்ணுக்கு குழந்தைகள் கண் முன் அரங்கேறிய கொடூரம்

திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகிலிருக்கும் ஜங்களாபுரம் டேக்கன்வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவர் மகன் சிவம், ராணுவத்தில் பணிபுரிகிறார். சிவத்தின் மனைவி , அரசுப் பள்ளி ஆசிரியை எனக் கூறப்படுகிறது. இந்த தம்பதிக்கு 11 வயதில் ஒரு மகளும், 7 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். கருத்து-வேறுபாடுக் காரணமாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கணவரைப் பிரிந்தவர், தன் இரண்டு குழந்தைகளுடனும் அருகிலிருக்கும் கெஜல்நாயக்கன்பட்டி கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், கணவர் சிவத்துக்கு வேறு பெண்ணுடன் இரண்டாவது திருமணம் செய்து வைப்பதற்காக, அவர் தந்தை மணி, பெண் பார்த்துவருவதாக அந்த பெண்ணுக்கு தகவல் கிடைத்தது.

ஜங்களாபுரம்

அதனால், நான்கு நாள்களுக்கு முன்பு தன் இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கணவர் வீட்டுக்கு சென்றிருக்கிறார். கணவர் காஷ்மீரில் இருப்பதால், மாமனார் மட்டும் வீட்டிலிருந்திருக்கிறார். அவரிடம் வாக்குவாதம் செய்த அந்தப்பெண், ``இனிமேல், இங்கேயேதான் தங்கப் போகிறேன்" என்று கூறியிருக்கிறார். மருமகளை வீட்டிலிருந்து வெளியேற்றுவதற்காக மாமனார் மணி எவ்வளவோ முயற்சி செய்திருக்கிறார். இதனால், இருவருக்கும் மோதல் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், நேற்று சமையல் அறையில் இருந்த மருமகளைப் பின்பக்கமாகச் சென்று கத்தியால் வெட்டியிருக்கிறார் மாமனார் மணி. கழுத்திலிருந்து ரத்தம் பீறிட்ட நிலையில் அலறியடித்து அந்த பெண் சுருண்டு விழுந்திருக்கிறார்.

Also Read: திருப்பத்தூர்: 'புதரில் எரிந்துகிடந்த பெண் சடலம்' - கொலையாளிகளைப் பிடிக்க போலீஸ் தீவிரம்!

அப்போதும், ஆத்திரம் அடங்காத மாமனார் மணி, மேலும் நான்கைந்து முறை வெட்டியிருக்கிறார். கழுத்து, முகத்தில் பலத்த வெட்டு விழுந்ததில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். இதையடுத்து, ரத்தக்கறைப் படித்த கத்தியை வீட்டின் அருகிலிருக்கும் கிணற்றில் வீசிவிட்டு தப்பித்து ஓடியிருக்கிறார் மாமனார் மணி. தகவலறிந்ததும், நாட்டறம்பள்ளி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்றனர். ரத்த வெள்ளத்தில் கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பி ஓடிய மாமனார் மணியையும் விரைந்து பிடித்து கைது செய்தனர். விசாரணைக்குப் பின் நேற்றிரவு மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட மணி, ஆம்பூர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

மாமனார் மணி

விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரிகளிடம் பேசினோம். ``கொலைச் செய்யப்பட்ட பெண், அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்திருக்கிறார். போலி கல்விச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாகவும் அவர் மீது புகார்கள் இருக்கின்றன. அதனால், அவர் பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்? என்று இருவேறு தகவல்கள் வருகின்றன. கணவர் ராணுவத்தில் இருக்கும் நிலையில், அந்த பெண்ணுக்கு வேறொரு நபருடன் தவறான தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. நான்கு வருடங்களுக்கு முன்பு, ஓர் நாள் மாமனார் வெளியே சென்றிருந்த நேரத்தில் தனது வீட்டிற்கே அந்த நபரை வரவழைத்திருக்கிறார். சிறிதுநேரத்தில் மாமனார் வந்துவிட இருவரும் மாட்டிக்கொண்டனர்.

கதவை வெளிப்புறமாகப் பூட்டிவிட்டு ஊர் மக்களையும் அழைத்து மருமகள் செய்த தவறை வெளிப்படுத்தியிருக்கிறார். நாட்டறம்பள்ளி போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர். போலீஸார் அந்த வீட்டுக்கு விரைந்துச் செல்வதற்குள், பின்பக்க மாடிப் படி வழியாக காதலனைத் தப்பிக்க வைத்துவிட்டார்அந்த பெண். அப்போதிலிருந்தே மாமனார் மீது அவருக்கு தீராதப் பகை வளர்ந்திருக்கிறது. வீட்டுக்குள்ளேயே மாமனாரை அடித்து, துன்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கிறார். இதையெல்லாம் ராணுவத்தில் இருக்கும் தன் மகனிடம் சொன்னால், அவரின் நிம்மதி போய்விடும் என்று நினைத்து, சில காலம் சொல்லாமலேயே மறைத்திருக்கிறார். மருமகளின் போக்குத் தொடர்ந்து தவறான வழியிலேயே சென்றதால், பொருத்துக்கொள்ள முடியாமல் தன் மகனிடம் அனைத்தையும் போட்டுடைத்தார் மணி.

கொலை செய்யப்பட்ட பெண்

ராணுவத்திலிருந்து திரும்பிய சிவம், மனைவியிடம் வாழப் பிடிக்காமல் விவகாரத்துக் கோரியிருக்கிறார். இதையடுத்துதான் அவர் தன் இரண்டு குழந்தைகளுடனும் வீட்டிலிருந்து வெளியேறியிருக்கிறார். மூன்று ஆண்டுகளாக கணவருடன் எந்தவிதமான தொடர்பிலும் இல்லாதவர் தற்போது திடீரென கணவரின் வீட்டுக்குச் சென்று, ‘வீடு என்னுடையது’ என்று உரிமைக்கொண்டாடி மாமனாரை அடித்து வெளியே தள்ளியிருக்கிறார்.

‘இனியும் இவளை விடக்கூடாது’ என்ற கோபத்தில்தான் மாமனார் மணி, மருமகளை வெட்டிக் கொலை செய்திருக்கிறார். தாயைக் கொலைச் செய்யும்போது இரண்டு குழந்தைகளும் தடுத்திருக்கிறார்கள். ‘அம்மாவை வெட்டாதீங்க தாத்தா’ என்று கதறி அழுத இரண்டு குழந்தைகளையும் வீட்டின் மற்றொரு அறையில் தள்ளி கதவைப் பூட்டியிருக்கிறார் மணி. மருமகளை கொன்றப் பிறகு குழந்தைகள் இருந்த கதவைத் திறந்துவிட்டு தப்பியிருக்கிறார். வெளியூர் தப்பிச் செல்வதற்காக ஆத்தூர்குப்பம் பேருந்து நிலையத்தில் பதுங்கியிருந்தபோது அவரை கைது செய்தோம்’’ என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/police-arrested-father-in-law-who-murdered-daughter-in-law-in-tirupattur

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக