கரூர் மாவட்டத்தில் சமீபகாலமாக சைபர் குற்றங்கள் குறித்த புகார்கள் குவிந்த வண்ணமாக இருந்து வருகின்றன. அதிகரித்திருக்கும் சைபர் குற்றங்களை தடுக்கும் பொருட்டு, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வடிவேல் உத்தரவின்பேரில் சைபர் க்ரைம் போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். அதனடிப்படையில் போலீஸார் விசாரணையில் இறங்கியபோது, ஆண்களுடன் வீடியோ காலிங் செய்து, அதை வைத்து அவர்களை மிரட்டி பணம் பணம் பறிக்கும் கும்பலைச் சேர்ந்தவர்கள் தற்போது சிக்கியிருக்கிறார்கள்.
கரூர் பசுபதிபாளையம் ராமானூரை சேர்ந்த நபர் ஒருவருக்கு, முன்பின் அறிமுகம் இல்லாத செல்போன் எண்ணிலிருந்து, கடந்த ஒரு மாதத்துக்கு முன்பாக அழைப்பு வந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, பெண்களின் ஆபாசப் படங்களும் அவரின் போனுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. மேலும், அந்த நபரின் புகைப்படத்தை சில பெண்களின் ஆபாசப் படங்களுடன் இணைத்து, இணையத்தில் வெளியிட்டு விடுவோம் என்று கூறி மர்ம நபர்கள் மிரட்டியிருக்கின்றனர். அதனால், பயந்து போன அந்த நபர், கூகுள் பே மூலம் அந்த குறிப்பிட்ட நம்பருக்கு ரூ.49,000 வரை அனுப்பியதாக சொல்லப்படுகிறது. அந்த நம்பரிலிருந்து மிரட்டல்கள் வந்துகொண்டே இருந்ததால், அந்த நபர் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இது தொடர்பாக புகாரளித்தார். அவரின் புகாரைப் பெற்றுக்கொண்ட சைபர் க்ரைம் போலீஸார், கொலைமிரட்டல், தகவல் தொழில்நுட்பப்பிரிவு சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.
இதுதொடர்பாக, வங்கிக்கணக்குகள், தொலைபேசி எண்கள் உள்ளிட்டவற்றை போலீஸார் தீவிரமாக கண்காணித்தனர். அவற்றின் அடிப்படையில், பொள்ளாச்சியைச் சேர்ந்த பிரசாந்த் (27), அஜித்குமார் (49) ஆகிய இருவரை சைபர் க்ரைம் போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.
``இது போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள், சில இணையதளங்கள் மூலம் ஆண்களைக் குறிவைத்து ஆபாச விளம்பரங்களைப் பதிவிட்டு, அதன் மூலம் அவர்களுடன் வீடியோ கால் செய்து, அதைப் பதிவு செய்து வைத்துக் கொள்கிறார்கள்.
பின்னர், அதை வைத்து அவர்களை மிரட்டி பணம் பறித்து விடுகிறார்கள். கேட்ட பணத்தைத் தரவில்லை என்றால், அந்த வீடியோக்களை அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்பி விடுவோம் என்றும் மிரட்டுகிறார்கள்" என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.
Also Read: நாமக்கல்: காதல் திருமணம்; திருமணம் மீறிய உறவு?! - மனைவியை படுகொலை செய்த கணவர்
source https://www.vikatan.com/news/crime/in-karur-man-arrested-in-cyber-crime-issue
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக