திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதால், இதனை முழுமையாக கட்டுப்படுத்த திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தவர்களில் பலர் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தற்போது, திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தென்கோவனூர் பகுதியைச் சேர்ந்த குமார் என்கிற ராஜ்குமார், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 39 வயதான ராஜ்குமார், தனது சின்னம்மாவை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில், இவர் மீது திருவாரூர் மாவட்ட காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான் அருகே கெழுவத்தூர் பகுதியில் வசித்து வந்தவர் நாகம்மாள். இவரின் கணவர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் நாகம்மாள் மட்டுமே தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நவம்பர் 10-ம் தேதி, நாகம்மாள் தனது வீட்டில் திடீரென மர்மமான முறையில் இறந்து கிடந்தது, இப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாகம்மாளின் சாவில் மர்மம் இருப்பதாக பெருகவாழ்ந்தான் காவல் நிலையத்தில், நாகம்மாளின் உறவினர்கள் புகார் கொடுத்தனர்.
அதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், நாகம்மாளின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நாகம்மாள் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது. அது தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில், நாகம்மாளை அவரின் அக்கா மகனே கொடூரமாக கொலை செய்ததாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது.
நாகம்மாள் 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து, அதன்மூலம் அவர் பணம் சேர்த்து வைத்திருந்திருக்கிறார். தென்கோவணூரை சேர்ந்த நாகம்மாளின் அக்காள் மகன் ராஜ்குமார் அதனை நோட்டம் விட்டு, நாகம்மாளிடம் அவர், அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று, நாகம்மாள் பணம் தர மறுத்ததால், இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
Also Read: `போதைப்பொருள்களை ஒழிக்க காவல்துறை நடவடிக்கை மட்டுமே போதாது!’ -திருவாரூர் எஸ்.பி-யின் வேண்டுகோள்
அந்நிலையில் தான் ராஜ்குமார் தனது நண்பருடன் சேர்ந்து நாகம்மாளை கழுத்தை நெரித்து கொலை செய்தததாக காவல்துறையினர் குற்றம்சாட்டினர். அது தொடர்பாக ராஜ்குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில்தான் திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயக்குமாரின் பரிந்துரையின்பேரில், ராஜ்குமாரை குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, ராஜ்குமார் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மன்னார்குடி பகுதியில் சட்டவிரோதமாக போலி மதுபாட்டில் தயார் செய்து விற்பனை செய்ததாக, சில நாள்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட, மேலநத்தம் சரவணன் என்பவர் மீதும் திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். திருவாரூர் மாவட்டத்தில் யாரேனும் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீதும், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயக்குமார் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
இதுகுறித்து பேசும் திருவாரூர் காவல்துறையினர், ‘’குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடியவர்களை மற்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தால், அடுத்த சில வாரங்களில் ஜாமீனில் வெளியில் வந்து மீண்டும் மீண்டும் குற்றச்செயல்களை ஈடுபடுகிறார்கள். அதுபோல் குண்டர் சட்டத்தில் எளிதில் வெளியில் வர முடியாது. சாதாரண குற்றங்களில் ஈடுபட்டால் கூட, குண்டர் சட்டத்தில் நீண்ட நாள்கள் சிறையில் இருக்க வேண்டும் என்ற பயம் வந்தால்தான், மற்றவர்களும் குற்றச்செயல்களில் ஈடுபட தயங்குவார்கள். திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை தற்போதைய சூழலில் இதுபோன்ற அதிரடி நடவடிக்கை மிகவும் அவசியமாக உள்ளது’’ என்கிறார்கள்.
source https://www.vikatan.com/news/crime/thiruvarur-police-action-to-stop-the-crime-in-district
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக