பூலோக வைகுந்தமாம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவின் முதல் அங்கமான பகல் பத்து திருவிழாவின் 4-ம் நாள் உற்சவம் இன்று (7-12-21 செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. விழாவின் நாயகனாம் நம்பெருமாள் அலங்கார சௌரி கொண்டையுடன் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் காட்சி அளித்தார். இவ்விழாவின் முக்கிய திருநாளான வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறக்கும் வைபவம் வரும் டிசம்பர் 14-ம் தேதி அதிகாலை நடைபெற உள்ளது. வைகுந்த ஏகாதசி விழா பகல் பத்து, ராத்திரி பத்து என்று தொடர்ந்து 21 நாள்கள் நடைபெறும். அப்போது திருவரங்கம் பூலோக வைகுந்தமாய் ஜொலிக்கும் என்பது சிறப்பு.
பகல் பத்து விழாவின் 4-ம் நாளான இன்று காலை நம்பெருமாள் சவுரிக் கொண்டை, பவள மாலை, முத்துச்சரம், தாயார் பதங்கங்கள், அழகிய மணவாளப் பதக்கம், மகரி, கல் இழைத்த ஒட்டியாணம், வைர அபய ஹஸ்தம், அடுக்கு பதக்கங்கள் என அலங்கரித்துக் கொண்டு பக்தர்களுக்கு அர்ஜுன மண்டபத்தில் சேவை சாதித்தார். அப்போது பக்தர்கள் கூடி 'ரங்கா ரங்கா!' என விண்ணதிர, விண்ணகரமாம் திருவரங்கம் அதிர குரல் எழுப்பி வழிபட்டனர். வைகுந்த ஏகாதசி விழா சென்ற சனிக்கிழமை (4-12-21) பகல் பத்து உற்சவ முதல் நாளாக திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது.
நான்முகனுக்கு உண்டான அகங்காரத்தை ஒடுக்க நினைத்த திருமால், தன் காதுகளிலிருந்து மது, கைடபர்களை வெளிப்படச் செய்தார். அவர்கள் நான்முகனைக் கொல்ல முயன்றபோது, அவர்களைத் தடுத்த திருமால், பிரம்மாவை காப்பாற்றி, அசுரர்கள் கேட்கும் வரத்தைத் தருவதாகக் கூறினார். அப்போது அந்த அசுரர்கள் திருமாலுக்கு வேண்டுமானால் தாங்கள் வரம் தருவதாக ஆணவத்துடன் கூறினர். திருமாலும் தன்னால் அவர்கள் வதம் செய்யப்பட வேண்டும் என்ற வரத்தைக் கேட்டார். அவ்வாறே அசுரர்களை வதமும் செய்தார். அப்போது "பகவானின் பரமபதத்தில் தாங்கள் நித்தியவாசம் செய்ய வேண்டும்" என்ற வரத்தை அசுரர்கள் கேட்டனர்.
அதன்படி, மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியன்று பரமபதத்தின் வடக்கு வாசலாம் சொர்க்கவாசல் திறந்து, அசுரர்களை பரமபதத்தில் சேர்த்துக் கொண்டார் திருமால். அசுரர்கள் பெற்ற முக்தியை அனைவரும் பெற வேண்டும் என்று விரும்பி, ''பெருமானே! தங்களது அர்ச்சாவதாரம் விளங்கும் சகல ஆலயங்களிலும் மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசியன்று, சொர்க்க வாசல் திறக்கப்பட வேண்டும். அப்போது அந்த வழியாக எழுந்தருளும் தங்களை தரிசிப்பவர்களும், தங்களுடன் சொர்க்க வாசல் வழியாக வெளியே வருபவர்களும் பரமபத மோட்சம் அடைய வேண்டும்'' என்று வரம் கேட்டனர் அசுரர். தீனகருணாகரனான திருமாலும் அவர்கள் கேட்டபடியே வரம் அருளினார். இதுவே வைகுந்த ஏகாதசி சொர்க்க வாசல் திறக்கும்படியான ஐதீகத்தின் திருக்கதை.
வைகுண்ட ஏகாதசி விழாவின் சிறப்பு என்றால் அது அரையர் சேவையே எனலாம். இது வந்த விதமும் சுவாரஸ்யமானது. திருமங்கையாழ்வார் காலத்தில், நம்மாழ்வார் திருவாய்மொழிப் பாடல்களை இசையுடன் ஓதி பத்து நாள்கள் விழா எடுத்தனர். அதற்காக மங்கையாழ்வார் நெல்லை மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஆலயத்தில் எழுந்தருளிய நம்மாழ்வார் திருமேனியை ஸ்ரீரங்கத்துக்கு கொண்டு வந்து விழா கொண்டாடினார். அதுவரை நம்பெருமானுக்கு விழா எதுவும் எடுக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டது. தமிழ் வேதமான பிரபந்தத்துக்குப் பெருமை சேர்க்கும் வண்ணம் பெருமாளே விரும்பி ஏற்றுக் கொண்ட விழா இது. பின்னர் ஸ்ரீரங்கத்திலேயே ஆழ்வார்களுக்கு விக்கிரகங்கள் அமைத்துக் கோயில் எழுப்பி, பத்து நாள் விழா எடுத்தனர். இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீநாதமுனிகளால் விஸ்தாரமாக அரையர் சேவை விழா என்று தொடங்கப்பட்டது. முதன் முதலில் இச்சேவை ஸ்ரீரங்கத்தில் தொடங்கப்பட்டது.
Also Read: நிச்சயப் பலன்களைத் தரும் ஸ்ரீஐயப்ப சிறப்பு யாகங்கள்... நீங்களும் சங்கல்பிப்பது எப்படி?
கலியன் எனும் திருமங்கை ஆழ்வார் அருளிய திருநெடுந்தாண்டகம் தொடங்கி பத்து நாள்கள் பகல் பத்து எனவும், நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாடி தொடங்கப்படும் கடைசி 10 நாள்கள் இராப் பத்து என்றும் கொண்டாடப்படுகிறது. பகல் பத்துக்கும் இராப் பத்துக்கும் நடுவே உள்ள நாளே வைகுண்ட ஏகாதசி. இராப் பத்து இறுதி நாளில் நம்மாழ்வார் பரமபதம் எய்தும் காட்சியை, நிகழ்த்திக் காட்டுவர். ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் இந்த 21 நாள்கள் விழாவிலும் பெருமாள் விதவிதமான அலங்காரங்களோடு எழுந்தருளுவார். ஒவ்வொரு நாளும் ஒருவித நடையுடன் சர்வ அலங்கார பூஷிதனாக நம்பெருமாள் சேவை சாதிக்கும் அழகே அழகு எனலாம். புரட்டாசியில் பெருமாளை சேவித்தால் இகலோக வாழ்வுக்கான சௌபாக்கியங்கள் கிட்டும் என்றால், இந்த வைகுந்த ஏகாதசியில் பெருமாளை வணங்க பரலோக வாழ்வுக்கான ஞானமும் புண்ணியமும் கிட்டும் என்கின்றன ஞான நூல்கள்.
'சதுரமா மதிள்சூழ் இலங்கைக்கு இறைவன் தலைபத்து உதிர ஓட்டி, ஓர் வெங்கணை உய்த்தவன் ஓத வண்ணன்மதுரமா வண்டு பாட மாமயில் ஆடுஅரங்கத்து அம்மான், திருவயிற்று உதரபந்தம் என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே.'
source https://www.vikatan.com/spiritual/gods/trichy-temples-24-vaigunda-yegadasi-festival-in-srirangam-ranganathar-temple
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக