உலக அளவில் மிக மோசமான தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ள 17 நாடுகளில் இந்தியா, 13-வது இடத்தில் இருக்கிறது. கோடைக்காலங்களில் குடிப்பதற்கே தண்ணீர் பற்றாக்குறை நிலவி வரும் சூழலில் விவசாயத்துக்குச் சொல்லவே வேண்டாம். அதிலும் வறண்ட பகுதிகளில் மழைக்காலங்களிலேகூட தண்ணீர் கிடைப்பது பெரிய சவாலாக இருந்து வருகிறது. அப்படியொரு பகுதிதான் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள தம்பல்லபள்ளே.
இந்தியாவின் மிகவும் வறட்சியான மாவட்டம் என்றழைக்கப்படும் அனந்தபூர் மாவட்டத்துக்கு அருகில்தான் இந்தப் பகுதி உள்ளது. தக்காளி, நெல்தான் அதிக அளவில் இந்தப் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. காரணம், போர்வெல் மூலம் கிடைத்து வந்த நிலத்தடி நீர்தான்.
Also Read: நாகையில் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலை: இது நியாயமா முதல்வரே?
அந்தத் தண்ணீரும் குறிப்பிட்ட காலத்துக்கு கிடைக்காமல் போக என்ன செய்வதென்று தெரியாமல் மாற்றுத் தொழிலுக்குப் போகலாமா என்று யோசித்திருக்கின்றனர் விவசாயிகள். அப்போதுதான் அவர்களை தண்ணீர் குறைவாகத் தேவைப்படும் சிறுதானியங்களைப் பயிர் செய்ய வைத்து, அதிலிருந்து மீட்டெடுத்திருக்கிறார் 30 வயதான பரேஷம்மா.
`தண்ணீர் பற்றாக்குறையுள்ள இடங்களில் சிறுதானியங்கள், பயறு வகைகளைப் பயிரிடுங்கள்’ என்று வேளாண் விஞ்ஞானிகளே பரிந்துரைத்து வருகின்றனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடிக்குத் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் காலங்களிலெல்லாம் உளுந்து, காராமணி பயிரிடுங்கள் என்று அரசே விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்துவதும் உண்டு. ஆனால், அப்படி எந்தக் கூட்டங்களும் அந்தப் பகுதியில் நடக்கவில்லை. ஆனால், சூழல் பாதுகாப்பு அமைப்பு (Foundation for Ecological Security) என்ற தன்னார்வ அமைப்பு நடத்திய சிறுதானிய சாகுபடி, நீர் மேலாண்மைக் கூட்டங்களில் ஆர்வமாக கலந்துகொண்டுள்ளார் பரேஷம்மா.
அங்கு தண்ணீர் பற்றாக்குறை வந்தால் என்னென்ன பயிர் சாகுபடி செய்ய வேண்டும், வறட்சியான பகுதிகளில் என்ன மாதிரியான நீர் மேலாண்மை உத்திகளைக் கையாள வேண்டும் என்பது போன்ற தகவல்களைப் பயிற்சி வகுப்புகளின் மூலம் அறிந்திருக்கிறார். அங்கு கற்ற விஷயங்களை தம்பல்லபள்ளே ஊரைச் சுற்றியுள்ள விவசாயிகளிடம் போய் சொல்லிப் பார்த்திருக்கிறார்.
ம்ஹூம்... யாரும் முன்வரவில்லை. காரணம் பணப்பயிரான தக்காளி, நல்ல விற்பனை வாய்ப்புகொண்ட நெல்லை விட்டுவிட்டு வேறொரு பயிரைச் சாகுபடி செய்வதற்கு யாரும் முன்வரவில்லை. `தண்ணி கிடைச்சா இந்தப் பயிரைச் சாகுபடி செய்றோம். இல்லைனா விவசாயம் பண்ணாமலே இருந்திடுவோம்’ என்று சொல்லியிருக்கின்றனர். பரேஷம்மாவும் முயற்சியைக் கைவிடுவதாக இல்லை. தொடர்ந்து அவர்களிடம் பேசியிருக்கிறார்.
ஒரு கட்டத்துக்குப் பிறகு இறங்கிவந்த சில விவசாயிகள், `சரிம்மா சிறுதானியங்களைச் சாகுபடி செய்றோம். யார் வாங்குவாங்க’ என்று கேட்டிருக்கின்றனர். ஆனால், இந்தக் கேள்விக்குப் பதிலில்லை. `நீங்க சாப்பிடுங்க... நெல்லுக்கு எவ்வளவு உரம், பூச்சிக்கொல்லி கொடுத்து விளைவிக்கிறீங்க. அதையே சாப்பிடுறீங்க. ஆனா, சிறுதானியங்கள் விளையுறதுக்கு அதெல்லாம் தேவையில்லையே... விளையவெச்சு சாப்பிடுங்க. பிறகு, விற்பனை பத்தி யோசிக்கலாம்’ என்று சொல்லியிருக்கிறார்.
சொன்னமாதிரியே சிறுதானியச் சாகுபடி செய்ய ஓரிரு விவசாயிகள் முன்வந்திருக்கின்றனர். போர்வெல் தண்ணீரை எதிர்பார்க்காமல், மழையின் மூலமாகக் கிடைத்த தண்ணீரைப் பயன்படுத்தி சாமை, தினை, வரகு, கேழ்வரகு, சோளம் சாகுபடி செய்து விளைச்சல் எடுத்தனர். இப்படிக் கிடைத்த சிறுதானிய விதைகளை மற்ற விவசாயிகளுக்கு இலவசமாகக் கொடுத்து சாகுபடி செய்ய வைத்தார். அதிக அளவு தண்ணீர் தேவைப்படவில்லை, சாகுபடி செலவும் இல்லை என்பது தெரியவர மற்ற விவசாயிகளும் சிறுதானியச் சாகுபடியில் இறங்கியிருக்கின்றனர். மொத்தமுள்ள 700 குடும்பங்களில் 50 குடும்ப விவசாயிகள்தாம் சிறுதானியச் சாகுபடிக்கு மாறியிருக்கின்றனர்.
``இந்த 50 பேரின் அனுபவங்கள், பிற விவசாயிகளுக்கு வழிகாட்டியாக அமையும். அதன்மூலம் மற்ற விவசாயிகளும் சிறுதானியங்களை நோக்கி வருவார்கள். இப்போது இந்தச் சிறுதானியங்கள் 200 குடும்பங்களுக்கு உணவாக மாறியிருக்கிறது. படிப்படியாக சிறுதானியச் சாகுபடிக்கு விவசாயிகளை மாற்ற முடியும்” என்று நம்பிக்கையோடு சொல்கிறார் பரேஷம்மா.
பரேஷம்மா சிறுதானியச் சாகுபடியை மட்டும் ஊக்குவிக்கவில்லை. நிலத்தடி நீரைப் பெருக்குவதற்கான வேலைகளையும் அந்தப் பகுதியில் செய்திருக்கிறார். அதுகுறித்துப் பேசும் அவர், ``100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களைப் பயன்படுத்தி 1,500 நீர்க்குழிகள்(Trenches), 50 பண்ணைக்குட்டைகளை (Farm Pond) உருவாக்கி நிலத்தடி நீரை பெருக்குவதற்கான வேலைகளையும் செய்திருக்கிறேன். இதன்மூலம் நிலக்கடலை, பருத்தி, சோளம் போன்ற மானாவாரி பயிர்களின் சாகுபடியும் இந்தப் பகுதியில் அதிகரித்திருக்கிறது” என்கிறார்.
Also Read: கால்வாய்கள் கட்டப்பட்டபின் கிராமப் பொருளாதாரம் வளர்ந்துள்ளதா? ஆய்வு கூறும் உண்மை!
தினமும் விவசாயிகளைச் சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் பரேஷம்மா. தான் ஏழ்மை நிலையில் இருந்தாலும், விவசாயிகள் வாழ்வில் ஏற்றம் காண வேண்டுமென்று அமைப்புகளின் உதவியோடு தம்பல்லபள்ளே பகுதியில் செயலாற்றி வருகிறார். நீர் சேமிப்பு, நீர் பாதுகாப்பு போன்ற விஷயங்களில் செயல்பட்டதற்காக ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் (UNDP) `வுமன் வாட்டர் சாம்பியன்’ (Women Water Champion) என்ற அங்கீகாரத்தையும் விருதையும் பெற்றுள்ளார். சின்ன விஷயம்தான் மகத்தான விஷயங்களை உருவாக்குகிறது. அந்த வகையில் வறட்சியான பகுதியில் பரேஷம்மா எடுத்த முயற்சி அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
இன்றைய தேவை ஊருக்கு ஒரு பரேஷம்மா!
source https://www.vikatan.com/news/agriculture/how-did-thamballapalle-pareshamma-turned-her-water-deficit-area-into-fertile-land
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக