கொம்பர்கள் எதிர்கொண்ட முதல் ‘ரிவார்ட் சேலஞ்ச்’தான் நேற்றைய போட்டியின் ஹைலைட். ‘சிக்கலான போட்டியாக இருந்தது’ என்று பொதுவாக வர்ணிப்பார்கள் அல்லவா? நேற்று நடந்த சவால் உண்மையிலேயே ‘சிக்கலானதாக’ இருந்தது. அந்தச் சிக்கலில் மாட்டிக் கொண்டு இரு போட்டியாளர்கள் வெளியே வர முடியாமல் தவித்தது பரிதாபம்.
சர்வைவர் 54-ம் நாளில் என்ன நடந்தது?
உமாபதியும் விக்ராந்த்தும் காலையில் கம்பு பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தனர். “எனக்கும் சொல்லித் தாங்களேன்” என்று உமாபதியிடம் வந்து நின்றார் ஐஸ்வர்யா... அவ்வளவுதான். இருவரும் வாய்ப்பேச்சில் பிறகு நெடுநேரம் கம்பு சுற்ற ஆரம்பித்தார்கள். “நீ அந்த கேம்ல இப்படிப் பண்ணே... அது சரியா?” என்று ஐஸ்வர்யா ஆரம்பிக்க, “நீதானே இப்படிப் பண்ணே...” என்று உமாபதி எதிராட்டம் ஆட, இவர்களின் ‘கம்பு கட்டும் கதை’ நெடுநேரமாக சுழன்று கொண்டே இருந்தது.
ஐஸ்வர்யா செய்த தவறுகளையெல்லாம் உமாபதி அடுக்கிக் கொண்டே போக, “என்னை வில்லி மாதிரி சித்திரிக்காதே” என்று சிணுங்கினார் ஐஸ்வர்யா. இவர்களின் நீண்……டடட உரையாடலை தூரத்தில் இருந்து பார்த்து/கேட்டுக் கொண்டிருந்த இதர போட்டியாளர்கள் ஜாலியாக தங்களுக்குள் கலாய்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு இதுவொரு நல்ல பொழுதுபோக்காக இருந்தது.
ஐஸ்வர்யாவிடமுள்ள சில நல்ல பழக்கங்களுள் ஒன்று, எதிராளியிடம் நேரிடையாக பேசிவிடுவது. தவறு தன் தரப்பில் இருந்தால் அதை நேர்மையாக ஒப்புக் கொள்வது. "ஆமாம். டாஸ்க் வர்றப்ப நான் Hyper ஆயிடுவேன். நீ கூடத்தான் Flag டாஸ்க்ல படியில் உக்காந்து எங்களை வெறுபேத்தின" என்று உமாபதி மல்லுக்கட்டினார்.
“ரெண்டு பேரும் மனசுல இருக்கறதையெல்லாம் கொட்டி கொட்டி ரெண்டு நாள்லே ஃபிரெண்ட்ஸ் ஆயிடுவாங்க” என்று மற்றவர்கள் கிண்டலடித்துக் கொண்டிருந்தார்கள். “அன்னிக்கு கூட உமாபதி கழுத்தை நெறிச்சுக் கொல்லணும் மாதிரி இருக்குன்னு சொன்னியே?” என்று ஐஸ்வர்யாவிடம் வந்து சொன்னார் நந்தா. இப்படி போட்டுக் கொடுப்பதின் மூலம் உரையாடலில் சூடு ஏறும் என்பது அவரின் ஜாலியான எதிர்பார்ப்பு.
ஒருவழியாக இருவரும் பழைய கணக்குகளையெல்லாம் பேசிக் கொண்டு நண்பர்களாகத் திரும்பி வந்தார்கள். “பேசி முடிச்சிட்டீங்களா..? எங்களுக்கு ரொம்ப என்டர்டெயின்மென்ட்டா இருந்தது” என்றார் விஜி.
ஓலை வந்தது. முதல் ரிவார்ட் சேலஞ்ச். அனைவரும் கிளம்பினார்கள். “களத்துக்கு வாங்க சர்வைவர்ஸ்” என்று அனைவரையும் வரவேற்ற அர்ஜுன், “பிரியாணில்லாம் எப்படி இருந்தது. என்னை ஒரு வார்த்தை கூட கேட்காம நீங்க பாட்டுக்கு சாப்பிட்டீங்க?” என்பது போல் ஜாலியாக விசாரித்தார். பிறகு ஐஸ்வர்யாவிற்கும் உமாபதிக்கும் நடந்த நீண்ட சமாதான பேச்சு வார்த்தை பற்றி விசாரிக்கும்போது “மனசுல கொஞ்சம் டென்ஷன் இருந்தது சார்... எல்லாத்தையும் பேசி தீர்த்துக்கிட்டேன்” என்றார் ஐஸ்வர்யா.
“ஓகே... இப்ப பதினோரு பேரு இருக்கீங்க. ஆனா இது டீமா ஆட வேண்டிய ஆட்டம். பத்து பேர்தான் ஆட முடியும். ஒருவர் விலகணும்” என்ற அர்ஜுன் பிறகு அதிர்ஷ்டக்கல் மூலம் போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்க வனேசா போட்டியில் இருந்து விலக நேர்ந்தது. ஆனால் இதற்காக அவர் உள்ளூற மகிழ்ச்சியே அடைந்திருப்பார். அப்படியொரு ரணகளமான போட்டி.
அதிர்ஷ்டக்கல்லின் மூலமே அணியும் அமைந்தது. இனிகோ + ஐஸ்வர்யா (ஆஹா! என்ன பொருத்தம்?!), விக்ராந்த் + விஜி, சரண் + உமாபதி, அம்ஜத் + லேடி காஷ், நந்தா + நாராயணன். உமாபதியுடன் இணைந்து ஆட வேண்டும் என்கிற சரணின் நெடுநாள் கனவு இப்போதுதான் நிஜமாகியதாம்.
“போட்டி விதிமுறைகளைப் பார்த்துடலாமா?” என்றார் அர்ஜுன். ‘மலையைக் கிள்ளி எலியைப் பிடிப்பது’ என்று ஒரு பழமொழி சொல்வார்கள். அப்படித்தான் இருந்தது இந்தப் போட்டி.
ஒவ்வொரு அணியிலும் உள்ள ஒரு போட்டியாளரின் இடுப்பில் கயிறு மாட்டப்படும். அதைக் கொண்டு அவர்கள் மூன்று விதமான தடைகளைத் தாண்ட வேண்டும். ஆள் உயர தடை ஒன்று, அதற்கும் உயரம் குறைவான தடை இரண்டு. படுத்தவாக்கில் ஊர்ந்து கடந்து செல்லும் தடை மூன்று. அவ்வளவுதானே என்று ஈஸியாக கேட்க முடியாது. இவர்கள் இடுப்பில் இணைக்கப்பட்டிருக்கும் கயிறானது ஒவ்வொரு தடையிலும் இரண்டு மூன்று சுற்றுகளாக சுற்றப்பட்டிருக்கும். இவர்கள் தங்களின் உடலை லாகவமாக வைத்து தாண்டுவதின் மூலம் அந்த முடிச்சிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அடுத்த நிலைக்குச் செல்ல முடியும்.
இப்படி மூன்று தடைகளையும் கடந்த பிறகு அணியில் உள்ள மற்றவர் வந்து பொறுப்பேற்றுக் கொள்வார். அவர் நான்கு குச்சிகளை இணைத்து நீண்ட கம்பாக்கி, அதன் முனையில் ஒரு பந்தை வைத்து அதற்கான குறுகிய பாதையில் தள்ள வேண்டும். அது சரியாக கீழே வைக்கப்பட்டிருக்கும் ஒரு வாளியில் சென்று விழுந்தால் வெற்றி.
இருங்கள்... இன்னமும் முடியவில்லை. இப்போது இருவரும் சேர்ந்து கையில் தரப்பட்டிருக்கும் இலக்குகளை எதிரே அடிக்க வேண்டும். சுழலும் விசையில் உள்ள அந்த இலக்கில் பட்டால் அது சுழன்று சுழன்று ஒரு கொடியை ரிலீஸ் செய்யும். இப்படி இரண்டு கொடிகளையும் ரிலீஸ் செய்து விட்டால்... அந்த அணியே வெற்றி பெறும். (ஹப்பாடா!).
போட்டி ஆரம்பித்தது. சரணிற்கு இந்த டெக்னிக் புரிந்துவிட்டதோ அல்லது அதிர்ஷ்டம் கூட நின்றதோ... தெரியவி்ல்லை. அவர் பாட்டுக்கு ஒவ்வொரு தடையையும் மிக லாகவமாகத் தாண்டினார். கயிற்று முடிச்சுகளும் அவருக்கு நன்கு ஒத்துழைத்தன. எனவே அவர் மற்றவர்களை விடவும் விரைவாக முன்னணிக்குச் சென்று ஆட்டத்தை சிறப்பாக உமாபதியிடம் ஒப்படைத்தார்.
ஆனால் இந்த முதல் நிலையைத் தாண்ட மற்ற போட்டியாளர்கள் மிகவும் சிரமப்பட்டார்கள். அதிலும் விஜி, நாராயணன், ஐஸ்வர்யா ஆகியோரால் முதல் தடையையே தாண்ட முடியவில்லை. அம்ஜத் சற்று சுதாரித்துக் கொண்டு இரண்டாவதாக சென்று சேர்ந்து லேடி காஷிடம் ஆட்டத்தை ஒப்படைத்தார்.
இந்தச் சக்கர வியூகத்தில் இருந்து எப்படி வெளியே வருவது என்று தெரியாமல் தவித்தார் விஜி. அவர் ஒவ்வொரு முறை முயன்றபோதும் கயிறு அவரை இன்னொரு சிக்கலில் தள்ளி அழகு பார்த்தது. நாராயணனின் நிலை இன்னமும் மோசம். அவருக்கு எப்படி வெளியே வருவது என்றே தெரியவில்லை. ஆனால் ஒரு கட்டத்தில் விஜியும் நாராயணனும் சுதாரித்துக் கொண்டு தடைகளைத் தாண்டி மெல்ல முன்னேறினார்கள். உண்மையில் இந்தப் போராட்டம் மிகச் சிரமம் வாய்ந்ததாக இருந்தது. பார்க்கும் நமக்கே அத்தனை கஷ்டமாக இருந்தது.
மற்றவர்களாவது தாண்டிவிட்டார்கள். ஆனால் ஐஸ்வர்யாவால் முதல் தடையை இறுதிவரை தாண்ட முடியவில்லை. அவர் எசகுபிசகாக தாண்டியதால் கயிற்றின் முடிச்சு எதிர்பக்கமாக விழுந்து நன்கு இறுக்கிக் கொண்டு விட்டது. ஆட்டம் முடியும் வரை அவரால் அதைக் கழற்ற முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.
சரண் மிகவும் முன்னணியில் வந்து ஆட்டத்தை ஒப்படைத்துவிட்டாலும் நிதானமாகச் செய்ய வேண்டிய அடுத்த சவாலில் போராடிக் கொண்டிருந்தார் உமாபதி. “எனக்கு நிதானமா செய்யற வேலையே பிடிக்காது” என்று பிறகு காரணம் சொன்னார். என்றாலும் நான்கு கொம்புகளையும் இணைத்து பந்தை மேலே வைத்து மெல்ல மெல்ல உயர்த்தி பாதையில் தள்ள, அது உருண்டு சென்று வாளிக்கு மிக அருகில் கீழே விழுந்தது. போச்... அவர் மீண்டும் முயல வேண்டும்.
உமாபதியாவது பரவாயில்லை. இவருக்கு சமநிலையில் இருந்த லேடி காஷ் மிக மிக போராடிக் கொண்டிருந்தார்.
மிகவும் சிரமப்பட்டாலும் அடுத்த முயற்சியில் உமாபதிக்கு மகத்தான வெற்றி கிடைத்தது. அவர் நிதானமாக போட்ட பந்து வாளியில் சென்று கச்சிதமாக விழுந்தது. எனவே உமாபதியும் சரணும் இணைந்து அடுத்த நிலைக்கு ஓடினார்கள்.
பந்துகளை ஓங்கி எறிவதின் மூலம் விசையை சுழல வைக்க வேண்டும். சரண் அடித்த விதம் சரியாக இருந்ததால் “நீயே அடி” என்று உற்சாகப்படுத்தினார் உமாபதி. முதல் கொடியை சரண் கீழே இறக்கியவுடன் இந்த ஜோடி உற்சாகம் அடைந்தது.
உமாபதி – சரண் ஜோடியானது, போட்டியை ஏறத்தாழ முடிக்கும் நிலையில் இருந்தபோது கூட இதர ஜோடிகள் தடைகளைத் தாண்ட முடியாமல் தவித்தன. பல முறைகள் தோற்றுப் போய் ஒரு கட்டத்தில் சரண் அடித்த பந்து விசையில் சரியாக பட்டதில் அது சுழன்று இரண்டாவது கொடியும் கீழே இறங்க... வெற்றி.. வெற்றி… மகத்தான வெற்றி. சரணைத் தூக்கிக் கொண்டாடினார் உமாபதி.
“தன்னுடைய கயிற்றில் ஏன் முடிச்சு இறுகியது?” என்று தவிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. அவரின் அருகில் வந்த அம்ஜத்தும் நந்தாவும் அவரை விடுவித்துவிட்டு அவர் செய்த தவறு என்ன என்பதை விளக்கினார்கள். போட்டி ஆரம்பிக்கும்போது “நான் லீடிங் எடுத்து கொடுக்கறேன். பேலன்ஸை நீ பார்த்துக்கோ” என்று தன் கூட்டாளி இனிகோவிடம் ஆர்வமாகச் சொல்லியிருந்தார் ஐஸ்வர்யா. ஆனால் முதல் தடையையே தன்னால் தாண்ட முடியாமல் பின்தங்கி விட்டதால் அம்மணிக்கு சங்கடமும் அவமானவுணர்ச்சியும் தாங்க முடியவில்லை.
Also Read: சர்வைவர் - 53: அண்ணன் விஜய் பற்றி நெகிழ்ந்த விக்ராந்த்... தன் கையால் விருந்து பரிமாறிய அர்ஜுன்!
போட்டி முடிந்ததும் சரணிற்கும் உமாபதிக்கும் வாழ்த்து சொல்லிய அர்ஜுன், “என்ன ஆச்சு ஐஸ்வர்யா?” என்று விசாரித்தார். “கயிறு இறுகிடுச்சு சார். ஆட்டத்தின்போது நான் கத்தறேன்னு இவங்க டிரைபல் பஞ்சாயத்துல சொல்லும்போது எனக்கு கோவமா வந்துச்சு. இந்தப் போட்டில நல்லா ஆடி அதை மாத்தணும்னு நெனச்சேன். ஆனா அது ஓவர் கான்பிடன்ஸா ஆயிடுச்சுன்னு தெரியுது. இனிமே ஆட்டத்துல பதற்றப்படக்கூடாதுன்ற பெரிய பாடம் கத்துக்கிட்டேன்” என்று ஒப்புதல் வாக்குமூலம் தந்தார் ஐஸ்வர்யா. “காலைல நான் என்ன சொன்னேன்?” என்கிற மாதிரி சிரித்துக் கொண்டிருந்தார் உமாபதி.
“ஓகே... உமாபதி, சரண்... உங்களுக்கு என்ன ரிவார்டு வேணும்? நேத்திக்குத்தான் நல்ல சாப்பாடு ஆச்சு" என்று வெகுமதியைப் பற்றி விசாரித்தார் அர்ஜுன். “சார்... ஏதாவது ஹோட்டல்ல ரூம் போட்டுக் கொடுத்தா நல்லாயிருக்கும் சார். நல்லாத் தூங்கி, குளிச்சு ரொம்ப நாளாச்சு...” என்ற உமாபதி “ஆனா நீங்க கொடுக்கவா போறீங்க?” என்று பின்குறிப்பாக புன்னகைத்தார்.
சர்வைவர் கரன்ஸியை பரிசளித்த அர்ஜூன், போனஸாக ஒரு வெகுமதியை அறிவித்ததும் அனைவரும் ஆச்சர்யத்தில் வாய் பிளந்தார்கள். ஆம். ‘Luxury Spa’ என்பதுதான் அந்த வெகுமதி. கடற்கரையோரம் நான்கு சிறப்பான படுக்கைகள் இருக்கும். மசாஜ் செய்து கொள்ளலாம். பக்கத்தில் இருக்கும் ஒரு அருமையான ஷவரில் குளிக்கலாம். உணவுகளும் இருக்கும்” என்று அர்ஜுன் விவரித்த போது, வெற்றி பெற்றவர்களைத் தவிர இதர அனைவருக்கும் “போச்சா... சோனாமுத்தா” என்றுதான் மைண்ட் வாய்ஸ் ஓடியிருக்கும்.
“யாராவது ஒருத்தரை நீங்க கெஸ்ட்டா கூப்பிட்டுட்டு போகலாம்” என்று அடுத்த ட்விஸ்ட்டை அறிவித்தார் அர்ஜுன். “நம்மளலாம் கூப்பிட மாட்டான்” என்று காண்டுடன் நின்று கொண்டிருந்தார் விஜி. அணியில் திரும்பி வந்தபோதே உமாபதி தனக்கு வாக்களிக்கவில்லை என்றதால் இருக்கலாம். ஆனால் உமாபதியோ பாசம் குறையாமல் விஜியைத் தேர்ந்தெடுத்தது சிறப்பு.
‘யாரையாவது அழைத்துச் செல்லலலாம்’ என்கிற அதிர்ஷ்டம் சரணிற்கும் அடித்தது. உடனே ஐஸ்வர்யாவின் கன்னங்கள் சிவக்க ஆரம்பித்தன. “இல்லை. அது கிண்டலுக்கு வழிவகுப்பதாக இருக்கும்” என்று சரண் உள்ளூற தயங்கினாரோ... என்னமோ ‘நந்தா’வை தேர்ந்தெடுத்தார்.
ஆக... நான்கு நபர்களும் லக்ஸரி ஸ்பா சொகுசு வசதியை ஒரு நாள் அனுபவித்து விட்டுத் திரும்புவார்கள். உமாபதி விஜியையும், சரண் நந்தாவையும் தேர்ந்தெடுத்த விவகாரம் அணியில் ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்துமா?
பார்த்துடுவோம்.
source https://cinema.vikatan.com/television/survivor-54-saran-and-umapathi-scored-in-the-kombargal-first-reward-challenge
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக