பரத், புனிதா, கிஷோர் மூவரும் கலந்துகொண்ட get-togetherஇல் பரத் பாடியதை கிஷோர் கேலி செய்ய, அவன் மீது கோபப்பட்டு பேசிவிட்டு பரத் அங்கிருந்து கிளம்பிச் செல்கிறான். அதற்காக புனிதா பரத்திடம் சண்டை போடுகிறாள். மறுநாள் பரத் கோபப்பட்டு கிஷோரை எச்சரிக்கை செய்வதற்காக அவன் வீட்டிற்குச் செல்கிறான். கிஷோரின் வீட்டுக்குச் சென்று பரத் பேசும்போது பரத்திற்கும் கிஷோருக்கும் வாக்குவாதம் உண்டாகி இறுதியாக கிஷோர் புனிதாவை தன்வசம் மாற்றி காட்டுவதாக பரத்திடம் சவால் விடுகிறான். பரத் அங்கிருந்து வெளியேறுகிறான்.
கிஷோரின் தவறான உள்நோக்கம் அதற்காக அவன் செய்த காரியங்கள் எல்லாம் பரத்துக்கு புரிந்திருந்தாலும் கிஷோரிடம் நேரடியாக சென்று பிரச்னை செய்ய பரத்துக்கு எந்த உரிமையும் இல்லை. பரத் கிஷோரிடம் முதலில் சாதாரணமாக பேசி இருக்கலாம். ஏனெனில் பரத்தின் குற்றச்சாட்டுகள் வெறும் அனுமானங்களே. அவற்றிற்கு ஆதாரங்கள் இல்லை. அப்படியே இருந்தாலும் அதை நம்பும் மனநிலையில் புனிதா இல்லை. புனிதா ஒருவருடன் நட்பாக இருப்பது புனிதாவின் தனிப்பட்ட விருப்பம். அந்த நட்பு பரத், புனிதாவின் காதலுக்கு இடைஞ்சலாக இருப்பதாக பரத் நினைத்தால் அதை பேசித் தீர்க்க வேண்டிய ஆள் புனிதா மட்டுமே.
ஆனால் எடுத்ததும் கோபப்பட்டு மூன்றாவது நபரிடம் சண்டைக்குச் செல்வது நியாயமில்லை. அதுபோக தனக்கும் புனிதாவுக்கு இடையில் இருக்கும் உறவில் சிக்கல் இருப்பதுபோல மற்றவர்களிடம் காட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. பரத் கிஷோரிடம் நேரடியாக சண்டையிடும் போது பரத்துக்கும் புனிதாவுக்கும் பிரச்னை இருப்பதாக கிஷோர் புரிந்து கொள்ள நேரிடும். ஏற்கெனவே அவர்களுக்குள் பிரச்னையை உண்டாக்குவதுதான் கிஷோரின் நோக்கமாக இருக்கும்போது பரத்தின் இத்தகைய செயல்கள் சிறு விரிசலை பெரும் பிளவாக ஆக்குவதற்கான சூழலை உருவாக்கிக் கொடுப்பதை போன்றது.
சிவா மாயாவை சந்திக்க உணவகம் வருகிறான். வந்ததிலிருந்தே தடுமாற்றத்துடன் இருக்கிறான். மாயா சிவாவை பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்து எழுந்து வந்து அணைத்து வரவேற்கிறாள். மாயாவின் தந்தையிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டதற்காக சிவா மன்னிப்பு தெரிவிக்கிறான். மாயா பேசிக் கொண்டிருக்கையில் சிவாவிற்கு காயத்ரியின் நினைவு வருகிறது. இருவரும் மீண்டும் ஒன்று சேரலாம் என்று மாயா சொல்ல, சிவா அது சரியாக வராது என்கிறான். சிவா யாரையாவது காதலிக்கிறானா என மாயா கேட்கிறாள். சிவா இல்லை என்று அதே பதற்றத்துடன் கூறுகிறான்.
சிவா காயத்ரிக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது என்று மாயாவுடன் மீண்டும் இணைய முடிவெடுத்து மாயாவை சந்திக்க வருகிறான். ஆனால் மாயாவிடம் பேசும்போது காயத்ரியின் நினைவு வருகிறது. சிவா மாயாவிடம் ஒன்று சேர்வதற்கு வாய்ப்பு இல்லை என வெளிப்படையாக சொல்கிறான். முதல் சந்திப்பிலேயே மாயாவிடம் வெளிப்படையாக அவ்வாறு கூறியது பாராட்டுக்குரியது. அதை செய்யாமல் தன்னுடைய சூழ்நிலைக்காக மாயாவுடன் மீண்டும் இணையலாம் என்று முடிவெடுத்து அதற்கான முயற்சிகள் செய்து சில காலம் கடந்த பிறகு இந்த முடிவை சிவா சொல்லியிருந்தால் அது மாயாவை மீண்டும் காயப்படுத்தும்.
சிவா மாயாவுடன் பேசி முடித்து, உடனடியாகக் கிளம்புவதாக சொல்லி கிளம்புகிறான். சிவாவின் மாற்றம் புதிதாக இருப்பதாகவும் தனக்கு அது மிகப் பிடித்திருப்பதாகவும் அப்போது மாயா சொல்கிறாள். சிவா அவளிடம் விடைப் பெறுகிறான்.
சிவாவின் மாற்றங்களுக்கு காயத்ரியும் ஒரு காரணமாக இருக்கிறாள். கடந்த சில நாள்களாக சிவா பொறுமையாக சிந்தித்து, பேசுகிறான். மாயாவின் தந்தையுடன் சண்டையிட்டு அவர் முகத்தில் கோபத்தில் காபியை ஊற்றிய சிவாவைத்தான் மாயா கடைசியாக பார்த்திருந்தாள். இவ்வளவு அமைதியாக சொன்ன இடத்திற்கு வந்து பேசி, ஒருவர் பேசுவதை கேட்டு பதில் சொல்லும் சிவா மாயாவிற்கே புதிதாக தெரிகிறான்.
சிவாவிற்கு மீண்டும் காயத்ரியின் நினைவு வருவது அவனைக் குழப்பமடைய செய்கின்றது. அவன் எவ்வளவு முயற்சி செய்தாலும் காயத்ரி பற்றிய நினைவுகளில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறான். ஏற்கெனவே ஒரே இடத்தில் வேலை செய்யும் காயத்ரிக்கும் சிவாவிற்கும் அடிக்கடி சந்தித்துக் கொள்வதும் ஒரு வகையில் அவர்களின் காதலை ஆழப்படுத்தவே செய்யும். இந்நிலையில் சிவா காயத்ரியை விட்டு எவ்வாறு விலகி இருக்கப் போகிறான்?
கவிதா பாண்டியனை உடனடியாக சந்திக்க வேண்டும் என்று சென்னை செல்ல கிளம்புகிறாள். ராஜேஷ் கவிதாவை தனியாக அனுப்ப மனமில்லாமல் அவனது வேலைகளை விட்டுவிட்டு அவளை காரில் அழைத்து வருகிறான். கவிதாவை வீட்டில் விடுவதற்கு முன்பு அவளுடன் பேச வேண்டும் என்று ராஜேஷ் சொல்கிறான். சென்னையில் இருந்து பெங்களூரு சென்றது முதல் மீண்டும் சென்னைத் திரும்பும் நிமிடம் வரை பாண்டியனை பிரிந்திருக்கும் தவிப்பிலேயே கவிதா இருந்தது பற்றி ராஜேஷ் அவளிடம் விளக்குகிறான். அதுபோக பாண்டியனை வெறுப்பேற்றுவதற்காக தன்னோடு தனியாக வெளியே வந்த சமயங்களில் கூட கவிதாவிற்கு தன் மேல் காதல் வரவே இல்லை என்று ராஜேஷ் சொல்கிறான். கவிதா மற்றும் பாண்டியன் இடையில் இருப்பது காதல்தான் என்பதை ராஜேஷ் தெளிவாக கவிதாவிற்கு புரிய வைக்கிறான். கவிதா அழுகிறாள். ராஜேஷிற்கு நன்றி சொல்கிறாள். அதோடு அவனுக்குத் தவறான நம்பிக்கை ஏற்படுத்தியதற்காக கவிதா அவனிடம் மன்னிப்பு கேட்கிறாள்.
ராஜேஷின் இடத்தில் யார் இருந்தாலும் இந்த விஷயத்தை இவ்வளவு எளிதாக எடுத்துக் கொண்டு பேச மாட்டார்கள். கவிதாவின் மீது அளவற்ற கோபம் வந்திருக்கும். பாண்டியனை ஒதுக்குவதற்காக ராஜேஷ் செய்த காரியங்கள் சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும், கவிதா பாண்டியனை விரும்புகிறாள் என்று தெரிந்த பின்பு ராஜேஷ் நடந்து கொள்ளும் விதமும் அவனது மன முதிர்ச்சியும் வியப்பளிக்கிறது. இவ்வளவு புரிதல் ஓர் ஆணுக்கு இருந்தால் சமூகத்தில் காதலிக்க மறுக்கும் பெண்களுக்கு ஆசிட் வீச்சு, அரிவாள் வெட்டு போன்ற வன்முறைகள் நடக்காது அல்லவா?
Also Read: AKS - 54: நட்பா, காதலா உணர்ச்சிப் போராட்டமும், காதலுக்கு ஆபத்தாக வரும் மூன்றாம் நபர்களும்!
கவிதாவுக்கு இவ்வளவு சீக்கிரமாக பாண்டியனுக்கும் அவளுக்கும் இருக்கும் உறவும், ராஜேஷின் மீது அவளுக்கு காதல் இல்லை என்கிற தெளிவும் ஏற்பட்டது அவளுக்கு மட்டுமல்லாமல் ராஜேஷ் மற்றும் பாண்டியனையும் குழப்பத்தில் இருந்து மீட்கும்.
ஆனால், வருத்தம் எல்லாம் ஒரு ஆணும் பெண்ணும் சிறுவயதில் இருந்து நல்ல நண்பர்களாக இருந்தாலே அது காதலில் போய் முடிய வேண்டும் என்று சமூகத்தில் இருக்கும் பொதுபுத்திக்கு மீண்டும் ஒரு வலுவான ஆதாரத்தை முன்வைப்பதைபோல சீரிஸின் அடுத்தடுத்த காட்சிகள் இருக்குமோ என்பதுதான்.
சிவா கிளம்பும்போது அவனுக்கு அலுவலகத்தில் காத்திருப்பதாக மாயா கூறிய சர்ப்ரைஸ் என்ன?
பாண்டியனின் முடிவு என்னவாக இருக்கும்?
காத்திருப்போம்!
source https://cinema.vikatan.com/television/aks-episode-55-matured-men-and-the-conflict-between-friendship-and-love
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக