கடந்த ஆண்டு, இந்திய-சீன எல்லைப் பகுதியான லடாக்கில் இருநாட்டு வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்துவந்தது. இருநாடுகளும் எல்லைப் பகுதிகளில் ஏராளமான படைகளைக் குவித்தன. பல கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் பாங்காங் ஏரி, கோக்ரா உள்ளிட்ட பகுதிகளிலிருந்த இருநாட்டுப் படைகளும் திரும்பப் பெறப்பட்டன. இதனால், எல்லையில் நீடித்த பதற்றம் சற்று தணிந்தது. இந்த நிலையில், தற்போது அருணாச்சலப் பிரதேசத்தையொட்டி இருக்கும் பகுதிகளில் சீனா, இந்தியா என இரு நாடுகளும் படைகளைக் குவித்துவருவதால் மீண்டும் அங்குப் பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. சமீபகாலமாக, அருணாச்சலப் பிரதேசத்தையொட்டிய எல்லைப் பகுதியில், சீனா தனது ராணுவப் பயிற்சியைத் தீவிரப்படுத்தியிருப்பதோடு, படைகளை அதிக அளவில் குவித்துவருகிறது. அருணாச்சலப் பிரதேசம் அருகேயிருக்கும் தவாங் பகுதியைக் கிழக்கு திபெத் என்று சொல்லி சொந்தம் கொண்டாட நினைக்கிறது சீனா. இதனால்தான் அங்கு அதிக அளவில் படைகளைக் குவித்து பதற்றத்தை ஏற்படுத்திவருவதாகச் செய்திகள் சொல்லப்படுகின்றன.
Also Read: `லடாக்கை தொடர்ந்து உத்தரகாண்ட்... குறிவைக்கிறதா சீனா?!' -எல்லையில் நடந்தது என்ன?
ராணுவ வீரர்களைக் குவித்தது மட்டுமல்லாமல், உயர் ரக ஆயுதங்களையும் எல்லையில் இறக்கிவருகிறது சீனா. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் படைகளைக் குவித்துவருகிறது. ஒரு வாரத்துக்கு முன்பாக கே-9 வஜ்ரா ரக பீரங்கிகளையும் எல்லைப் பகுதியில் இறக்கியிருந்தது இந்தியா. 2018-ம் ஆண்டில், இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட இந்த கே-9 ரக பீரங்கிகள், 52 கி.மீ தூரம் வரை சென்று தாக்கக்கூடியது.
கடந்த வாரத்தில் இது குறித்துப் பேசிய பேசிய ராணுவத் தளபதி நரவானே, ``எல்லையில் சீன வீரர்களின் நடமாட்டத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். சீன வீரர்களுக்கு இணையாக இந்திய வீரர்கள் எல்லையில் குவிக்கப்பட்டிருக்கின்றனர். சீன ஆயுதங்களுக்கு இணையான ஆயுதங்கள் எல்லையில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. எத்தகைய அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்'' என்றிருந்தார்.
கே-9 பீரங்கிகளைத் தவிர, ஸ்வீடனின் போஃபர்ஸ், எம்-777 ஹோவிட்சர் வகை பீரங்கிகளையும் எல்லையில் நிறுத்தியது இந்தியா. இந்த நிலையில் நேற்று முந்தினம், அதிநவீன விமான எதிர்ப்புப் பீரங்கியான எல்-70 ஏர் டிபன்ஃஸ் என்கிற சிறிய ரக ஏவுகணைகளையும் களமிறக்கியிருக்கிறது இந்திய ராணுவம். இந்த சிறிய ரக ஏவுகணைகளைப் பற்றிப் பேசிய ராணுவ விமானப் பாதுகாப்பு பிரிவு அதிகாரி சரியா அப்பாஸி, ``அருணாச்சலப் பிரதேச எல்லையில் எல்-70 ஏர் டிபன்ஃஸ் பீரங்கிகள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் குவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த சிறிய ரக ஏவுகணைகள் ஆளில்லா கண்காணிப்பு ட்ரோன்கள், போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களை தாக்கி அழிக்கும் திறன்கொண்டவை. இந்த ரக ஏவுகணைகளில், நவீன சென்சார் தொழில்நுட்பம், லேசர் கண்காணிப்பு, கேமரா, ரேடார் ஆகியவை பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்தத் தொழிநுட்பங்களின் உதவியோடு இலக்கைத் தானியங்கி முறையில் கண்டறிந்து குறிபார்க்கும் திறனும், தாக்கி அழிக்கும் திறனும் கொண்டிருக்கிறது அது'' என்றிருக்கிறார்.
ராணுவப் படைகளும், உயர் ரக பீரங்கிகள், சிறிய ரக ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களும் எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டிருப்பதால் அங்குப் போர்ச்சூழல் நிலவுகிறது. சீனா, இந்தியாவைச் சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, மறுபக்கம் படைகள் குவிக்கப்பட்டுவருவது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
Also Read: எல்லை பிரச்னை:`கொல்லப்பட்ட அஸ்ஸாம் காவலர்கள்; கைதட்டிக் கொண்டாடும் மிசோரம்?!'-என்ன நடக்கிறது அங்கே?
இந்த பதற்றமான சூழல் குறித்து கிழக்குப் பகுதியின் ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே, ``பதற்றத்தை ஏற்படுத்துவது நமது நோக்கமல்ல. அமைதியையே விரும்புகிறோம். பக்குவப்பட்ட முறையில் நிலைமையைச் சரிசெய்ய நினைக்கிறோம். அதேசமயத்தில் எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்கும் திறமை நம் ராணுவத்திடம் இருக்கிறது. படைகளும், ஆயுதங்களும் குவிக்கப்பட்டிருப்பது அதற்கான முன்னேற்பாடுகள்தான்'' என்று கூறியிருக்கிறார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/article-about-india-china-border-tension
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக