Ad

வியாழன், 21 அக்டோபர், 2021

பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ! - முகநூலில் லைவ் வீடியோ பதிவிட்டு உயிரை மாய்த்த நபர்

'கண்கள் கலங்கியபடி, சோகமான குரலில் முகநூல் பதிவில் ஒரு நபர் பேசுகிறார். தன்னுடைய பெயருடன் விலாசத்தையும் குறிப்பிடும் அந்த நபர், தன் குடும்பச் சூழ்நிலையை முதலில் எடுத்துக் கூறுகிறார். தங்களுக்கான இடத்திற்கு பட்டா மாறுதல் செய்வதற்காக கிராம நிர்வாக அலுவலரை அணுகியபோது 10,000 முதல் 15,000 வரை அந்த அதிகாரி லஞ்சம் கேட்டதாகவும், அதனால் தான் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளானதாகவும் தெரிவிக்கிறார். அந்த கிராமத்து பஞ்சாயத்துத் தலைவர் மீதும் அந்த நபர் கண்டனம் தெரிவித்ததோடு, "எங்களுக்கு வசதி இல்லாததால் எங்களை ஏமாத்துறாங்க. ஸ்டாலின் அய்யாதான் நல்ல தீர்ப்பு சொல்லணும்." என்று கூறிவிட்டு கோயில் குளம் ஒன்றில் குதித்து தற்கொலை செய்து கொள்கிறார்'. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

தற்கொலை செய்துகொண்ட பிரபு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டத்திற்கு உட்பட்ட நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூ வியாபாரி பிரபு. இவரது உடன்பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள், இரண்டு சகோதரிகளாம். இதில் அனைவருக்கும் திருமணமான நிலையில், தனித்தனியாக வசித்து வந்தனர். சகோதரர்களில் ஒருவரான வெங்கடேசன் என்பவர் சில வருடங்களுக்கு முன் இறப்பை தழுவியுள்ளார். 10 வயதுக்கு உட்பட்ட மூன்று பெண் பிள்ளைகளுடன் பிரபுவும், அவரது மனைவி சரண்யாவும் தனிக் குடும்பமாக வசித்து வந்துள்ளனர். இவர்கள் வசிக்கும் அதே பகுதியில், பிரபுவின் தந்தைக்கு சொந்தமான 3 சென்ட் இடம் இருந்துள்ளது. இந்த இடத்தை சகோதரர்கள் மூவருக்கும் பாகப்பிரிவினை செய்து பட்டா மாற்றம் செய்வதற்காக கிராம நிர்வாக அலுவலரை (VAO) அணுகியுள்ளார் பிரபு.

அப்போது, கிராம நிர்வாக அலுவலர் 10,000 முதல் 15,000 வரை லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் பிரபாவதி என்பவரும் உடந்தையாக இருந்தாராம். அதேபோல, தன் குடும்பத்தாருக்குச் சொந்தமான நிலத்தைத் தங்களுக்கே தெரியாமல் மறைமுகமாக வேறொரு நபருக்கு பட்டா மாறுதல் செய்வதற்கான முயற்சியும் நடந்து வந்ததாக அந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பிரபு. இச் சம்பவங்களால் மனமுடைந்த பிரபு, 19.10.2021 கண்ணீர் மல்க முகநூலில் லைவ் பதிவு போட்டுவிட்டு ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவில் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிரபுவை காணவில்லை எனத் தேடி வந்த அவரது உறவினர்களுக்கு, அன்று மாலை பொழுதிலேயே அவர் முகநூல் பதிவிட்டு இறந்த தகவல் தெரியவந்துள்ளது. அதன் பின்னர் பிரபுவின் உடலை மீட்டு, ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்

சம்பவ இடத்திற்கு வந்த களம்பூர் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் பிரபுவின் உடல் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணையை மேற்கொண்ட ஆர்.டி.ஓ கவிதா, கிராம நிர்வாக அலுவலர் சீனுவாசனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Also Read: லஞ்சம்: `வாரிசுச் சான்றிதழுக்கு ரூ.2,000; பட்டா மாற்ற ரூ.20,000’ - அடுத்தடுத்து சிக்கிய வி.ஏ.ஓ-க்கள்

இச்சம்பவம் தொடர்பாக, களம்பூர் காவல் நிலையத்தின் துணை ஆய்வாளர் விநாயகத்திடம் பேசினோம். "பிரபு என்பவரின் தந்தை பெயரில் 3 சென்ட் இடம் இருந்துள்ளது. அதை சகோதரர்கள் மூவருக்கும் பிரித்து பட்டா மாறுதல் செய்வதற்காக வி.ஏ.ஓ-வை அனுகிய போது, அவர் லஞ்சம் கேட்டதாக இந்த நபர் இறந்துள்ளார். 174வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை நடைபெற்று வருகிறது. கிராம நிர்வாக அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். எங்களது ஆய்வாளர் இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகிறார்" என்றார்.



source https://www.vikatan.com/news/crime/farmer-suicide-after-posting-live-in-facebook-regarding-bride-asked-by-vao

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக