விடுபட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்று (06.10.2021) காலை முதல் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை, மொத்தமுள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில், செஞ்சி, கண்டமங்கலம், முகையூர், ஒலக்கூர், திருவெண்ணைநல்லூர், வானூர், விக்கிரவாண்டி ஆகிய 7 ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 6 ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு வரும் 9-ம் தேதி இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
Also Read: உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர் பட்டியலில் திடீர் திருத்தம்?! - அதிர்ச்சியில் ஈச்சங்குப்பம் மக்கள்
பொதுவாகவே, உள்ளாட்சித் தேர்தல் என்றால் பணத்திற்கும், பரிசு பொருட்களுக்கும் பஞ்சமிருக்காது. அதேபோல மது பிரியர்களின் வாக்குகளை கவர்ந்து இழுப்பதற்கு சில வேட்பாளர்கள் கையிலெடுக்கும் ஆயுதங்களில் முக்கியமானது ஓட்டுக்கு மதுபானம் கொடுப்பது. தமிழக மதுபானங்களின் விலையோ அதிகமாக இருப்பதாலும், விழுப்புரத்திற்கு அருகிலேயே உள்ள புதுவை மாநிலத்தில் குறைந்த விலையில் மதுபானங்கள் கிடைக்கும் என்பதாலும், உள்ளாட்சித் தேர்தலுக்கான மதுபானங்களைப் புதுவையில் இருந்து விழுப்புரம் மாவட்டத்தில் இறக்கும் பணிகள் ஜோராக நடைபெற்றிருப்பதாகச் சொல்கிறார்கள். இப்படி புதுவையில் இருந்து விழுப்புரத்திற்கு மறைமுகமாக கடத்திவரப்படும் மதுபானங்கள் பிடிபடுவது உள்ளாட்சி தேர்தல் அறிவித்த பின்னர் அதிகரித்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் அறிவித்த பிறகு இருசக்கர வாகனங்கள், கார், மினி லாரி, டிராக்டரின் பின்புற பெட்டி என பல வழிகளில் மதுபானம் மறைத்துக் கொண்டுவரப்படும் போது பிடிபடும் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. அதேபோல கள்ளசாராயம் பிடிபடுவதும் அதிகரித்துள்ளது. சரியாக சொல்லபோனால், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பதற்கு முன்பாக 28 நாள்களில் (15.08.2021 - 13.09.2021) மட்டும் தமிழக கள்ளசாராயம் 2001 லிட்டரும், புதுவையை சேர்ந்த மில்லி சாராயம் 257 லிட்டரும், உள்ளூர் மற்றும் கலால் காவல் துறையினரின் நடத்திய சோதனையின்போது விழுப்புரம் மாவட்டத்தில் பிடிபட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் செப்டம்பர் 14-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அன்றிலிந்து அடுத்த 15 தினங்களிலேயே மீண்டும் அந்த எண்ணிக்கை ஈடாகிவிட்டது எனலாம். 14.09.2021 - 29.09.2021 வரை சரியாக 15 நாள்களில் மட்டுமே... தமிழ்நாடு கள்ளச்சாராயம் 2340 லிட்டரும், புதுவையை சேர்ந்த மில்லி சாராயம் 218 லிட்டரும், சோதனையில் பிடிபட்டுள்ளன.
Also Read: உள்ளாட்சித் தேர்தல்: லட்சக்கணக்கில் ஏலம்போன ஊராட்சித் தலைவர் பதவிகள்?! - விழுப்புரத்தில் பரபரப்பு
இவை ஒருபுறம் இருந்தாலும், புதுவையிலிருந்து விழுப்புரத்திற்கு கடத்திவரப்பட்ட டாஸ்மார்க் மதுபானங்கள், கடந்த 28 நாள்களில் பிடிபட்டதை ஒப்பிடும் போது... உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பிற்கு பின் 4 மடங்கு அதிகரித்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முந்தைய 28 நாள்களில் 1346 லிட்டர் புதுவை டாஸ்மார்க் மதுபானங்களே சோதனையின்போது பிடிபட்டுள்ளன. ஆனால், உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த 15 நாள்களில் மட்டும் 5828 லிட்டர் புதுவை டாஸ்மார்க் மதுபானங்கள் பிடிபட்டுள்ளன. அதுமட்டுமின்றி கர்நாடகத்தை சேர்ந்த டாஸ்மார்க் மதுபானம் 31.5 லிட்டரும் பிடிபட்டுள்ளது.
கடந்த மாதம் 28ம் தேதி இரவு, கண்டமங்கலம் அருகே புதுவையில் இருந்து கடத்தி வரப்பட்ட 7200 மதுபாட்டில்கள் மொத்தமாக பிடிபட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் அண்டை மாநிலத்தில் இருந்து மதுபானங்கள் கடத்தி வருவது அதிகரித்திருக்கும் சம்பவம் வருத்தத்திற்குரிய ஒன்று. மக்களுக்கு சிறந்த தலைவனாகவும், சேவை மனப்பான்மையோடும் தேர்தலில் போட்டியிட வேண்டிய பதவிகளுக்கு, எதிர்கால லாப நோக்கத்துடன் சில வேட்பாளர்கள் இத்தகு செயல்களில் ஈடுபட்டால் அதை என்னவென்று சொல்வது.!
உள்ளாட்சித் தேர்தல் அறிவித்த பின்னர், அடுத்த 15 நாள்களில் கள்ளச்சாராயம் மற்றும் மதுபானங்களைக் கடத்தி வரும் செயல்களில் 286 ஆண்களும், 53 பெண்களும் ஈடுபட்டுள்ளனர். அதில் பெரிய அளவில் கடத்தலில் ஈடுபட்ட 98 ஆண்களும், 39 பெண்களும் என மொத்தம் 137 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள நபர்கள் மீது வழக்கு பதியப்பட்டு பெயில் மூலம் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 29 இருசக்கர வாகனங்களும், 15 நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தடுப்பு நடவடிக்கை குறித்து காவல்துறை அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, ``விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர்; அதேபோல கடலூர் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் புதுவை ஆட்சியர் ஆகியோர் சம்பந்தப்பட்ட டி.எஸ்.பிகளுடன் புதுவையில் ஒன்றாகச் சந்தித்து கடந்த 30- ஆம் தேதி மீட்டிங் நடத்தியிருந்தனர். ``அதிக எண்ணிக்கையிலான மதுபானங்களை மொத்த எண்ணிக்கையில் கேட்பவர்களுக்கு விற்பனை செய்ய வேண்டாம்" என்று ஆலோசித்துள்ளனர். 30-ம் தேதிக்கு பிறகு மதுபானங்கள் கடத்திவரப்படும் எண்ணிக்கை குறைந்திருக்கிறது" என்றார்.
Also Read: ரூ. 236 கோடி பணம்; 2.90 லட்சம் லிட்டர் மதுபானம் - தேர்தல் ஆணையத்தின் `பறிமுதல்' ரிப்போர்ட்!
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர், நான்கு மடங்கு அதிகமான மதுபானங்கள் சோதனைகளில் பிடிபட்டிருந்தாலும், அதிகாரத்தைப் பயன்படுத்தி, மாவட்டத்துக்குள் சிலர் மதுவைக் கொண்டு வந்ததாகவும் சொல்கின்றனர் அந்தப் பகுதி மக்கள்.
source https://www.vikatan.com/news/tamilnadu/the-number-of-liquors-brought-from-pondicherry-to-villupuram-has-increased-in-15-days
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக