ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை ஆசனவாயில் வைத்துக் கடத்த முயன்ற இருவரை திருச்சி சுங்கத்துறை அதிகாரிகள் கைதுசெய்திருக்கும் சம்பவம், விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பல சிறப்புகளைக்கொண்ட திருச்சி சர்வதேச விமான நிலையம், தற்போது தங்கம் கடத்திவரும் மையமாக மாறிவருகிறது. அதுவும் தங்கத்தைப் பலவிதமான யுக்திகளில் கடத்திவருகிறார்கள். தங்கத்தைப் பொடி செய்து கடத்துவது, ஆசனவாய் உள்ளிட்ட உடலின் பகுதிகளில் மறைத்துக் கடத்துவது, உடைமைகளில் மறைத்துக்கொண்டு வருவது எனக் கடத்தல் சம்பவங்கள் நிகழ்கின்றன. இன்று துபாயிலிருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது பயணிகளில் இருவரின் நடத்தைகள் சந்தேகத்துக்கிடமான வகையில் இருக்கவே, அவர்களிடம் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அதில், தஞ்சாவூரைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரும், ராமநாதபுரத்தைச் சேர்ந்த பால் பாண்டி என்பவரும் தங்கள் ஆசனவாயில் வைத்து ரூ.60 லட்சம் மதிப்புள்ள 1,252 கிராம் எடைகொண்ட தங்கத்தை பேஸ்ட் வடிவில் மறைத்துவைத்துக் கடத்திவந்தது தெரியவந்தது.
Also Read: தங்கக் கடத்தல் விவகாரம்; விசாரணையில் கஸ்டம்ஸ் அதிகாரி! - திருச்சி ஏர்போர்ட்டில் நடப்பது என்ன?
இதையடுத்து தங்கத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அவர்களைக் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். கடந்த மாதம் திருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த சில சுங்கத்துறை அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டிருப்பதோடு, ஒருசில அதிகாரிகளுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.
இது குறித்து விமான நிலைய அதிகாரிகளிடம் பேசினோம். ``எங்களுக்குத் தகவல் வந்ததன் பேரில் சோதனை நடத்தினோம். அப்போது இவர்களின் நடவடிக்கையில் எங்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. எனவே, அவர்களைத் தனி அறையில் வைத்து விசாரிக்கையில் தங்கத்தை ஆசன வாயில் வைத்துக் கடத்தி வந்ததாகச் சொன்னார்கள்.
மற்றொருவர் இடுப்பில் பேஸ்ட் வடிவிலான தங்கத்தைக் கடத்தி வந்திருக்கிறார், அந்தத் தங்கத்தையும் கைப்பற்றியுள்ளோம்" என்றனர்.மேலும், "பேஸ்ட் வடிவிலான தங்கத்தைப் பொறுத்தவரை, கடத்தல் தொடர்பான தகவல்கள் கிடைத்தால் மட்டுமே கடத்திவருபவர்களைப் பிடிக்க முடியும். வழக்கமான சோதனைகளில் பேஸ்ட் வடிவிலான தங்கத்தைப் பிடிக்க முடியாது.
இவர்கள் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களை ஒரே நபர் அனுப்பினாரா அல்லது வெவ்வேறு நபர்கள் அனுப்பியிருக்கின்றனரா என்பது குறித்தும் விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறோம்” என்றனர்.
source https://www.vikatan.com/news/crime/rs60-lakh-worth-of-gold-abducted-by-trichy-airport-officials
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக