இன்று பேசும் விஷயங்கள் நேற்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவையாக இருக்கலாம். இன்று பேசுபவை நாளை பொருளற்றுப் போகலாம். ஆனால், பேச வேண்டும். அந்த வகையில், காதல் உறவில் இன்று பேசப்பட வேண்டிய, குழப்பங்கள் அதிகம் நிறைந்த தலைப்பொன்றைப் பற்றிதான் இந்த வாரம் பார்க்கப்போகிறோம். அது, ரிலேஷன்ஷிப்பில் Physical intimacy எனப்படும் உடல் சார்ந்த நெருக்கம்.
உடல் நெருக்கம் என்பதில் அணைத்தல், முத்தமிடுதல் தொடங்கி உடலுறவு வரை அனைத்தையும் சேர்த்தே பார்க்கப்பட வேண்டும் என்றாலும், நம்ம ஊர் காதலுக்கு ஒவ்வொன்றுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. சினிமாவில்கூட எம்.ஜி.ஆர் தொடங்கி இன்றைய ஹீரோக்கள் வரை அவர்களை முத்தமிடும் நாயகிகள், கொஞ்சம் தீவிரமானால் `அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான்’ என்பார்கள். அதை முதலில் மனதில் வைத்துக் கொள்ளலாம். இந்த விஷயத்தில் பொதுவான விதிகள், கருத்துகள் என எதுவுமே கிடையாது. எல்லாமே சப்ஜெக்டிவ்தான். எனவே, அவரவர் சூழல், லைஃப்ஸ்டைல், குடும்பம் சார்ந்து எல்லாமே மாறும்.
உடல் பிணைப்பு என்பது ரிலேஷன்ஷிப்பில் முக்கியமானது. ஒரு நண்பன் அல்லது தோழிக்கும், காதலன் அல்லது காதலிக்கும் இருக்கும் வித்தியாசம் இந்த உடல் பிணைப்புதான். காதலன் /காதலியிடமிருந்து இந்த உடல் பிணைப்பை நீக்கிவிட்டால் அவர் நல்ல நண்பர் ஆகத்தான் தெரிவார்கள். எனவே, உடல் பிணைப்பு என்பது தவறில்லை; அது இயல்பானது என்பதை முதலில் ஏற்றுக்கொள்வோம். தொடாமலே காதல் எல்லாம் 80-களில் படங்கள் ஓடுவதற்காகச் சொல்லப்பட்ட விஷயம். அதில் எந்தப் பெருமையும் இல்லை; உண்மையும் இல்லை. டிவி ரியாலிட்டி ஷோக்களில் புண்ணியத்தில் `ஹக்' எனப்படும் விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக இங்கே இயல்பானதாக மாறி வருகிறது. போலவே, முத்தங்களும் மாறினால் நல்லது. விஷயம் இதுதான். காதலில் உடல் சார்ந்த பிணைப்பு இயல்பானது. அதை ஏற்றுக் கொண்டால்தான் இதைப் பற்றி மேலும் நாம் பேச முடியும்.
அடுத்து PDA எனப்படும் Public display of affection. பொதுவெளியில் தங்கள் இணையரை முத்தமிடுவது, அணைப்பது, கைகோப்பதன் மூலம் தங்கள் காதலை வெளிப்படுத்தும் செயலைதான் அப்படிச் சொல்வார்கள். இதில் தவறேதும் இல்லை. ஆனால், நம் ஊரில் இவற்றை ஏற்றுக்கொள்வதில் நிறைய சோஷியல் ஸ்டிக்மாக்கள் இருக்கின்றன. காதல் ஜோடியில் ஒருவர் இந்த ஸ்டிக்மாக்களை உடைக்கிறேன் எனப் பொதுவெளியில் தன் இணையரை முத்தமிடலாம். ஆனால், அது இன்னொருவருக்கு உடன் பாடில்லாத ஒன்றாக இருந்தால் சிக்கல்தான். சமூகம் என்ன நினைக்கிறது என்பதைவிட தன் பார்ட்னர் என்ன நினைக்கிறார் என்பதுதான் முக்கியம். பி.டி.ஏ.வு-க்கெல்லாம் பழகாத ஒருவர், தன் பார்ட்னர் பொதுவெளியில் அணைத்தாலோ, முத்தமிட்டாலோ அதைத் தவிர்க்கிறார் என்றால், அதற்கான காரணத்தை இன்னொருவர் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். `நான் உன் லவ்வர். உன்னை கிஸ்கூட பண்ணக் கூடாதா?' என்றால், தீர்ந்தது விஷயம். சிக்கல்தான்.
முத்தமோ, கைகோத்தலோ, அணைத்தலோ இல்லை அதையும் தாண்டியோ... இருவருக்கும் அதில் பரிபூரண சம்மதம் இருக்க வேண்டும்.
பொதுவெளியில் சரி. தனிமையில்? இதற்கு ஒரே ஒரு ஃபார்முலாதான் இருக்கிறது. அது முத்தமோ, கைகோத்தலோ, அணைத்தலோ இல்லை; அதையும் தாண்டியோ... இருவருக்கும் அதில் பரிபூரண சம்மதம் இருக்க வேண்டும். அதில் எந்த விதமான அழுத்தமோ, நிர்ப்பந்தமோ இருக்கக் கூடாது. அதுதான் அடிப்படை. ஒரு முறை அப்படி இருவரும் உணர்வோடு கலந்து முத்தமிடுவதால், இனி எப்போது வேண்டுமென்றாலும் முத்தமிடலாம் என்றும் நினைக்கக் கூடாது. எப்போது முத்தமிட்டாலும் அது இருவருக்கும் ஒப்புதல் இருக்க வேண்டும். அது இல்லாமல் போனால் சின்ன சீண்டல்கூட சிக்கல்தான். ஒத்துப்போனால், உடலுறவே கொண்டாலும் பிரச்னையில்லைதான்.
உடலுறவு எனச் சொன்னதும் இன்னொரு முக்கியமான விஷயம் நினைவுக்கு வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் சில நாடுகளில் உடலுறவு கொள்வதற்கான குறைந்தபட்ச வயதை மாற்றி எழுதினார்கள். அப்போது உலகம் முழுவதுமே அது பற்றிய விவாதம் எழுந்தது. விகடனில் கூட அது பற்றி ஒரு கட்டுரை வந்தது. அந்த விவாதங்கள் அனைத்தின் சாராம்சமும் இதுதான். ஒரு நாட்டு மக்களின் மனமுதிர்ச்சி, சமூக வளர்ச்சி, பெண்களை அவர்கள் நடத்தும் விதம், அந்நாட்டின் மருத்துவக் கட்டுமானம் என ஏகப்பட்ட காரணிகளை கருதில் கொண்டுதான் செக்ஸுக்கான குறைந்தபட்ச வயதை நிர்ணயிக்க முடியும். இது நாட்டுக்கு நாடு, சமூகத்துக்கு சமூகம் மாறுபடும் என்கிறார்கள். எனவே, உங்கள் வயது மட்டுமே உங்கள் பார்ட்னருடன் உடலுறவு கொள்வதற்கான அனுமதிச்சீட்டு என நினைக்க வேண்டாம். முதலில் சொன்னது போல, இது சப்ஜெக்டிவ்.
21 வயது பெண்ணும், 24 வயது அவளின் பார்ட்னரும் காதலிக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். அந்தப் பெண்ணுக்கு வேலை இல்லை. வேலைக்குச் செல்லும் எண்ணமும் இல்லை. சட்டப்படியும் மற்ற எந்த விதியின்படியும் இவர்கள் இணைந்து வாழவோ, உடலுறவு கொள்ளவோ எந்தத் தடையுமில்லை. ஆனால், ஒருவேளை அந்தப் பெண் கர்ப்பமானால் அதை அவரால் எதிர்கொள்ள முடியுமா, கருக்கலைப்பு செய்வதென முடிவெடுத்தால் அதை அவள் பார்ட்னர் ஏற்பாரா, குடும்பம் என்ன செய்யும்? குடும்பத்தைத் தாண்டிவந்தால் அந்தப் பெண்ணால் தன் வாழ்க்கையைச் சமாளிக்கும் நிதி சுதந்திரம் அவளுக்கு இருக்கிறதா? இவையெல்லாம் நிச்சயம் யோசிக்கப்பட வேண்டும். காதலிக்கும் இருவர் உடல் உறவு கொள்வதில் எந்தத் தடையும் சொல்லவில்லை. ஆனால், இந்த விளைவுகளைச் சந்திக்கும் ஆற்றல் இன்றி சிக்கலில் மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதுதான் விஷயம்.
இந்தச் சமூக சிக்கல்களையெல்லாம் ஓரமாக வைத்துவிடுவோம். காதலிக்கும் இருவருக்கிடையே செக்ஸ் சரிதானா? சரிதான். அன்பை வெளிப்படுத்தும் வழி மட்டுமல்ல; செக்ஸ் என்பது உடல் தேவையும்தான். அந்தப் புரிதல் இருந்தால் மட்டுமே செக்ஸுக்கு ஓகே சொல்லுங்கள். அதில் குழப்பமாகவே இருப்பதாக நினைத்தால் அதைத் தள்ளிப் போடுவதே சரியானது. ஆனால், மூன்று விஷயங்களுக்காக செக்ஸைப் பயன்படுத்த வேண்டாம் என்பதுதான் வேண்டுகோள்.
1. உங்கள் காதலையும் ரிலேஷன்ஷிப்பையும் உறுதி செய்வதற்காக, உங்கள் பார்ட்னர் உண்மையாகவே உங்களைக் காதலிக்கிறாரா என்றறிவதற்காக செக்ஸைக் கேட்காதீர்கள்.
2. உடலுறவு கொண்டுவிட்டால் உங்கள் பார்ட்னர் உங்களைவிட்டு போக மாட்டார் என்றெண்ணி அதைச் செய்யாதீர்கள்.
3. செக்ஸ் வைத்துக்கொண்டுவிட்டால் வீட்டிலிருப்பவர்கள் மறுக்க மாட்டார்கள் எனத் திருமணத்துக்கான உத்தரவாதமாக அதைப் பார்க்காதீர்கள்.
Also Read: Ghosting, Benching, Caking... ரிலேஷன்ஷிப்பில் இதெல்லாம் என்ன தெரியுமா? #AllAboutLove - 13
இவற்றையெல்லாம் தாண்டி இன்னொரு மிகப்பெரிய ஏரியா இருக்கிறது இந்த விஷயத்தில். அது, பார்ட்னரைத் தாண்டி இன்னொருவருடன் ஃபிஸிக்கல் இண்டிமஸி இருந்தால் என்ன செய்வது? உதாரணமாக, நண்பர்களுக்கிடையே அணைப்பதும், முத்தமிடுவதும் இயல்பாகப் பர்க்கும் ஆட்களும் இங்கே நிறைய இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர், இதை ஏற்காத ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தால் என்ன ஆகும்? சண்டைதான் வரும். உங்களுக்கு யார் முக்கியம், எது முக்கியம் என்பதை உணர்ந்து ரிலேஷன்ஷிப்பைத் தொடர வேண்டுமென கேட்டுக்கொள்வது இதற்காகத்தான், கண்மூடித்தனமாக, ஒருவரைப் பற்றி எதுவும் தெரியாமல் காதலிக்கலாம். ஆனால், ரிலேஷன்ஷிப்பில் அப்படி இருக்க முடியாது.
இன்னொரு விஷயம். மேற்கத்திய கலாசாரத்தில் Cheating என்பார்கள். ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும்போது இன்னொருவருடன் செக்ஸ் வைத்துக்கொள்வது. ஆங்கிலப் படங்களில் பார்த்திருக்கலாம். ஹீரோ, தன் மனைவிக்குத் தெரியாமல் இன்னொரு பெண்ணுடன் செக்ஸ் வைத்துக் கொள்வார், இதைத் தெரிந்துகொள்ளும் மனைவி `இது ஒரு தடவை விபத்தா நடந்ததா அல்லது அவள் மீது உங்களுக்கு ஃபீலிங்க்ஸ் இருக்கிறதா?' எனக் கேட்பார். அங்கே One night stand போன்றவையும், உணர்ச்சி வேகத்தில் முன்பின் தெரியாத ஒருவரை, அந்த மொமெண்ட்க்காக முத்தமிடுவதும் ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால், காதலனை முத்தமிடவே வாய்ப்பு கிடைக்காத சமூகத்தில் இந்தக் காரணங்கள் சரிப்பட்டு வராது. எனவே, ரிலேஷன்ஷிப்பில், குறிப்பாக உடல் பிணைப்பு விஷயத்தில் மேற்கத்திய வாழ்க்கைமுறையை அடிப்படையாக வைத்துக்கொண்டால் நம்ம ஊர் ரிலேஷன்ஷிப் காலை வாரிவிடும்.
Also Read: உங்கள் ரிலேஷன்ஷிப் பற்றி பெற்றோர்களிடம் எப்போது சொல்லலாம், கூடாது?#AllAboutLove - 15
சரி, இவற்றையெல்லாம் மீறி உங்கள் பார்ட்னருக்குத் தெரியாமல் இன்னொருவரை முத்தமிட்டுவிட்டீர்கள்; அல்லது உடலுறவு கொண்டுவிட்டீர்கள். இப்போது என்னச் செய்வது? அதை உங்கள் பார்ட்னரிடம் சொல்லிவிடுங்கள். கஷ்டம்தான். அடி விழலாம்தான். ஆனால், சொல்லிவிடுங்கள். அவர் என்ன முடிவு சொல்கிறாரோ, அதுதான் தீர்ப்பு. எதிர்ப்பேச்சே கிடையாது. அதுதான் ஒரே தீர்வு.
ஒரு ரிலேஷன்ஷிப்பில் வேறு எதையும்விட உடல் பிணைப்பு விஷயத்தில்தான் அதிக கவனமாக இருக்க வேண்டும். அது முத்தல் முதல் உடலுறவு வரை எதுவாக இருந்தாலும் அதற்கு சரியெனச் சொல்வது மறுப்பதும் மிக மிக முக்கியமானவை. உங்கள் பார்ட்னர் தவறாக நினைப்பார், கோவப்படுவார் என்றெல்லாம் எண்ணி செக்ஸுக்கு சரியென சொல்லாதீர்கள். உங்கள் `NO’-வை உங்கள் பார்ட்னர் சரியாகப் புரிந்து கொள்ளாவிட்டால், அது ஆரோக்கியமான உறவே கிடையாது.
source https://www.vikatan.com/lifestyle/relationship/what-if-a-relationship-partner-says-no-for-sex
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக