Ad

ஞாயிறு, 23 மே, 2021

மரங்கள் வளர்ப்பதால் மட்டுமே பூமியைக் காப்பாற்றிவிட முடியுமா? - `இல்லை' என்கிறது இந்த ஆய்வு!

மக்கள் பல்லாண்டு காலமாகவே மரம் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். 16-ம் நூற்றாண்டில் ஐரோப்பிய கண்டத்தில் வாழ்ந்த நிலவுடைமையாளர்கள், கப்பல் கட்டுவதற்கான மரங்களை வளர்த்தார்கள். அதற்கும் முந்தைய 5-ம் நூற்றாண்டில், ஏட்ரியாடிக் கடலோரத்தில் வாழ்ந்த துறவிகள், தங்களின் உணவு மற்றும் எரிபொருள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக பைன் காடுகளை உருவாக்கினார்கள். மேலும், ஐரோப்பியர்களின் வருகைக்கும் முன்னமே, அமேசான் மழைக்காட்டில் வாழ்ந்த தொல்குடிகள் பெரும்பகுதி மரங்களை வளர்த்துள்ளனர்.

இப்படியாக, பல்வேறு தேவைகளின் அடிப்படையில் மரங்களை வளர்க்கும் பழக்கம் பல நூற்றாண்டுகளாகவே மனிதர்களிடையே இருந்து வருகிறது. ஆனால் 21-ம் நூற்றாண்டில் மரம் வளர்ப்பது வெறும் தேவைகளின் அடிப்படையிலானதாக மட்டுமே இல்லாமல், பூமியைக் காப்பாற்றுவதற்கான போராட்டத்துக்குக் கிடைத்த ஒரு முக்கியமான ஆயுதமாகக் கருதப்படுகிறது.

காலநிலை மாற்றம்

காடுகள் மீட்டுருவாக்கம், மரம் நடுதல் போன்ற செயல்பாடுகள், காலநிலை மாற்றம், உலக வெப்பமயமாதல் ஆகிய பிரச்னைகளுக்குத் தீர்வாக அமையுமென்று சொல்லப்படுகிறது. இதை அடிப்படையாக வைத்து உலகளவில் கோடிக்கணக்கான மரங்கள் நடப்படுகின்றன. 2020-ம் ஆண்டில், இந்திய அரசு கிராமப்புறங்களில் மட்டும் சுமார் 26 லட்சம் மரங்களை நட்டுள்ளது. ஆனால், உண்மையாகவே இப்படி லட்சக்கணக்கில் மரங்கள் நடுவது காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துமா?

இன்று உலகமே காலநிலை மாற்றத்திற்குத் தீர்வு தேடிக் கொண்டிருக்கிறது. அதிகமான மரங்களை நடுவதே இதற்குத் தீர்வாக அமையுமென்று பெருவாரியான மக்கள் தொகை நம்புகிறது, அந்த வேலைகளில் ஈடுபடுகிறது. ஏனெனில், இது மிகவும் எளிமையானதும்கூட. யார் வேண்டுமானாலும் வெளியே சென்று ஒரு மரத்தை நட்டு வைத்துவிட்டு, நான் பூமியின் நிலையைச் சரிசெய்வதற்கு என்னால் இயன்ற பங்களிப்பைச் செய்துவிட்டேன் என்று சொல்ல முடியும். இத்தகைய மனநிலையோடு செயல்படுவது தனிநபர் பங்களிப்புகளுக்குச் சரியாக இருக்கும். ஆனால், பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளே மரம் நடுவதை மட்டும் குறிக்கோளாக வைத்துக்கொண்டு இயங்குவது எந்தளவுக்குச் சரி என்ற கேள்வியும் பல்வேறு தரப்பினரிடையே எழுகிறது.

ஆகவே, மரம் நடுவது உண்மையாகவே காலநிலை மாற்றத்துக்குப் பங்கு வகிக்குமா என்பது குறித்துப் புரிந்துகொள்ள சர்வதேச சுற்றுச்சூழல் பத்திரிகையான மங்காபே, ஓர் ஆராய்ச்சியாளர்கள் குழுவை ஒருங்கிணைத்தது. அந்த ஆய்வுக்குழு, உலகளவில் இந்தியா, அமெரிக்கா உட்பட பல நாடுகளில் நடைபெறும் பல்வேறு மக்கள் மற்றும் அரசாங்க அமைப்புகளின் மரம் நடும் முயற்சிகளைப் பற்றிய பகுப்பாய்வை மேற்கொண்டு, அதன்மூலம், மரம் நடுவது உண்மையாகவே பலனளிக்கிறதா என்பதை ஆய்வு செய்தது.

அதில், இதுபோன்ற மிகப் பெரிய அளவிலான மரம் நடும் முயற்சிகளில் எத்தனை மரங்கள் நடப்படுகின்றன என்பதில்தான் பெரும்பான்மை மக்கள் மற்றும் அமைப்புகளின் கவனம் இருக்கிறது. ஆனால், அவர்கள் நடக்கூடிய நிலவியல் அமைப்புக்குத் தகுந்த மரங்களாக அவை இருக்கின்றனவா, இயல் தாவரமாக இருக்கின்றனவா, மரக் கன்றுகளை நட்டபிறகு, அவை வளரும் வரை முறையாகப் பராமரிக்கப்படுகின்றனவா போன்றவற்றில் எந்தக் கவனமும் செலுத்தப்படுவதில்லை என்று இந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

Forest - Tree planting

காலநிலை மாற்றத்தின் வீரியத்தை மட்டுப்படுத்துவது, மரம் நடும் பணிகளின் முதன்மைக் குறிக்கோளாக இருந்தாலும், அது, நீரியல் சுழற்சியை முறைப்படுத்துதல், மண் அரிப்பைக் கட்டுப்படுத்துதல், பாலையாகுதலைத் தடுத்தல், காட்டுயிர் வாழ்விடங்களை மீட்டுருவாக்குதல் போன்ற பல்வேறு செயல்பாடுகளுக்கு வழிவகுக்கின்றன. அதோடு, உள்ளூர் சமூகங்களின் வாழ்வாதாரம், ஆரோக்கியம் ஆகியவற்றை மேம்படுத்துவதையும் மரம் நடும் முன்னெடுப்புகள் மூலம் நாம் அடைய முடியும். ஆனால், தற்போது மக்கள் மேற்கொள்ளும் மரம் நடும் முன்னெடுப்புகள் இவையனைத்தையும் சாத்தியமாக்கக்கூடிய அளவுக்குத் திறன் வாய்ந்தவையாக இருக்கின்றனவா என்ற கேள்வியை எழுப்புகின்றனர் ஆய்வாளர்கள்.

காலநிலை மாற்றம் முதல், பல்லுயிரிய வள அழிவு மற்றும் நீர்ப் பற்றாக்குறை வரை அனைத்தையும் சரி செய்வதற்குரிய பிரபலமான முயற்சியாக மரம் வளர்த்தல் மற்றும் காடுகள் மீட்டுருவாக்கம் அங்கீகரிக்கப்படுகிறது. ஐ.நா-வும் கூட, 2021-2030 வரையிலான சூழலியல் மீட்டுருவாக்க இலக்கை அடையும் முயற்சியிலும்கூட முதன்மையாக மரம் வளர்ப்பதையே முன்னிலைப்படுத்துகிறது.

2004-ம் ஆண்டு, அமைதிக்கான நோபல் பரிசை வென்ற கென்ய சூழலியலாளர் வங்காரி மாத்தாய் முன்னெடுத்த பசுமை வளைய இயக்கம், மரம் நடுவதைப் பெரியளவில் முன்னிறுத்தியது. அதோடு, அந்த அமைப்பு 5 கோடிக்கும் அதிகமான மரங்களை நட்டு, பெரியளவிலான சூழலியல் பகுதிகளை மீட்டெடுத்தது. அதைப்போலவே, உலகம் முழுக்கவுள்ள நிறுவனங்களும் இயக்கங்களும் தனிநபர்களும் காடுகளையும் இயற்கை சூழலியல் அமைப்புகளை மீட்டெடுப்பதில் முழு முனைப்போடு ஈடுபடுகின்றனர். இது பாராட்டுக்குரியது.

2019-ம் ஆண்டு நடந்த ஓர் ஆய்வு, பூமியில் சுமார் 900 மில்லியன் ஹெக்டேர் நிலப்பகுதி காடுகளை மீட்டுருவாக்கக்கூடிய வகையில் இருப்பதாகக் கூறுகிறது. அங்கெல்லாம் புதிதாகக் காடுகளை உருவாக்குவதன் மூலம், வளிமண்டலத்தில் வெளியிடப்படும் 205 பில்லியன் மெட்ரிக் டன் கரிம வாயுவைக் கட்டுக்குள் வைக்க முடியும். இந்த அளவு, இதுவரை மனித இனம் வெளியிடுகின்ற மொத்த கரிம வெளியீட்டில் 25 சதவிகிதம். இதன்மூலம், உலகளாவிய மரம் நடும் முயற்சிகள் நிச்சயம் பலனளிக்கும் என்பது உறுதியாகிறது. ஆனால், பிரச்னை மரம் நடுவதில் இல்லை. மரம் நடும் முயற்சிகளை மேற்கொள்ளும் விதத்தில்தான் இருக்கிறது என்று அழுத்தமாகக் குறிப்பிடுகிறது மங்காபேவின் ஆய்வுக்குழு.

காடுகள் மீட்டுருவாக்கம்

அடிப்படையில், நாம் மரம் நடுவதற்கும் காடுகள் மீட்டுருவாக்கத்துக்குமான வேறுபாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும். அரசுகளும் சரி பெரும்பான்மையான தன்னார்வ அமைப்புகளும் சரி, இந்த இரண்டையும் ஒன்று போலவே கருதிச் செயல்படுகின்றன. மரக்கன்றுகளை நடும் முயற்சிகளைப் பொறுத்தவரை, ஒரு நிலத்தின் தன்மைக்கேற்ப, அங்கு வளரக்கூடிய இயல் மரங்களை வளர்ப்பதன் மூலம் குறிப்பிட்ட இடத்தின் சூழலியலை மேம்படுத்துவது அதன் குறிக்கோளாக இருக்கும். அதுவே, காடுகள் மீட்டுருவாக்கம் என்று வரும்போது, குறிப்பிட்ட காட்டு நிலம் அது இழந்த சூழலியல் கட்டமைப்பை மீண்டும் உருவாக்க வேண்டும். அது, இயல் தாவரங்களை நட்டு வளர்ப்பது மட்டுமன்றி, அந்தக் காட்டு நிலத்தின் மீள் வளர்ச்சி, இயற்கையாக நடைபெறக்கூடிய வகையில் கட்டமைக்க வேண்டும். அந்தச் செயல்முறைக்கான தூண்டுதல் மற்றுமே செயற்கையாக இருக்க வேண்டும்.

ஆனால், நடைமுறையில் இப்படி இருப்பதில்லை. உதாரணத்துக்கு, ஓரிடத்தில் அழிக்கப்படும் காட்டு நிலத்துக்கு ஈடாக, காடு மீட்டுருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், அங்கு அந்த இடத்துக்கே தொடர்பில்லாத அயல் தாவரங்களை, அதிலும் ஒரே வகையான மரத்தை நட்டு வளர்க்கிறார்கள். இது ஒற்றைப் பயிரிடுதல் என்றழைக்கப்படுகிறது. கற்பனை செய்துபாருங்கள், ஓரிடத்தில் வேம்பு, அரசு, புளி, நெல்லி, அருநெல்லி, இடலை, இரச்சை, எட்டி, ஏழிலைப்பாலை என்று பல்வேறு வகையான மரங்கள் பரவலாக நிரம்பியிருந்த காட்டு நிலம் அழிக்கப்படுகிறது. அதை அழித்த ஒரு நிறுவனம், அதற்கு ஈடாக மற்றொரு நிலத்தில், ஒரு காட்டை மீட்டுருவாக்குவதாகச் சொல்லி, அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்கிறது. ஆனால், அந்த முயற்சியில் அவர்கள் குறிப்பிட்ட நிலத்தில் நடப்பட்டது அனைத்துமே பாக்கு மரங்களாக இருந்தால், அதன்மூலம் சூழலுக்கு எவ்விதப் பயனும் விளையப் போவதில்லை. ஆனால், நடைமுறையில் இதுதான் நடந்துகொண்டிருக்கிறது.

மரக்கன்றுகள்

மக்கள் குடியிருப்புகளிலும் நகரங்களிலும் மரம் நடும் முயற்சிகள் நடக்கும்போது, அதில் இயல் தாவரங்கள் மற்றும் அயல் தாவரங்கள் இரண்டும் கலந்தே நடப்படுகின்றன. பெரும்பான்மைக் குழுக்கள், அதில் எவை அந்த நிலத்திற்குரிய தாவரங்கள், எவை அதற்குத் தொடர்பில்லாதவை என்று வேறுபடுத்தித் தெரிந்துகொள்ளாமலே நடுகின்றனர் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது. மங்காபே ஆய்வுக்குழுவின் அறிக்கை, மக்கள் தங்கள் தேவைகளின் அடிப்படையில் நடுகின்ற மரங்களே ஊர்ப்புறங்களில் அதிகமிருப்பதாகவும் ஆர்வம் மற்றும் அழகியல் அடிப்படையில் நடக்கூடிய மரங்களே நகர்ப்புறங்களில் அதிகமிருப்பதாகவும் குறிப்பிடுகிறது.

மேலும், மரம் நடுவதால் எவ்வளவு நன்மைகள் ஏற்படுகின்றனவோ, அதே அளவுக்கு, தவறான முறையில் மரங்களை நடும்போது, மோசமான பின்விளைவுகளையும் உண்டாக்கும் என்று உறுதியாகியுள்ளது. இதுகுறித்துப் பேசுவதற்கு முன், 2016-ம் ஆண்டு நாம் எதிர்கொண்ட வர்தா புயல் குறித்துச் சிறிது சிந்தித்துப் பார்ப்போம். வர்தா புயலின்போது நாம் எதிர்கொண்ட பல்வேறு சேதங்களில் குறிப்பிடத்தக்க ஒன்று, புயலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் சென்னை முழுக்கச் சாய்ந்துபோன மரங்கள்.

சென்னை நகர்ப்புறம் முழுக்க அரசாங்கத்தால் நடப்பட்ட மரங்களும் சரி, தனியார் நிறுவனங்களால் நடப்பட்ட மரங்களும் சரி, அவற்றில் பெரும்பான்மையானவை மண்ணுக்கு உரியவையே கிடையாது. வர்தா புயலின்போது, நாட்டு மரங்களின் கிளைகள் உடைந்தாலும்கூட, மரங்களின் வேர்ப் பிடிப்பு உறுதியாக இருந்ததால், முழு மரமும் சாயவில்லை. ஆனால், வெளிநாட்டு மரங்களே அதிகம் நடப்பட்டிருந்ததால் நகரத்தின் பெரும்பான்மை பகுதிகளில் சாலையோரங்கள் மற்றும் அலுவலக வளாகங்கள் எங்கும் மரங்கள் வேரோடு சாய்ந்திருந்தன.

‘வர்தா’ புயல்

சென்னை மாநகராட்சி, அந்தப் புயலின்போது, சுமார் 60 சதவிகித பசுமையை இழந்தது. இறுதியில் நிலையாக நின்றது நாட்டு மரங்கள் மட்டுமே. இதன்மூலம், சென்னை முழுக்க நடப்பட்டிருந்த மொத்த மரங்களில் பாதிக்கும் அதிகமான மரங்கள் இந்த மண்ணுக்கே தொடர்பில்லாதவை என்பது புரிகிறது.

இப்போது நாம் பேசிக்கொண்டிருந்த விஷயத்துக்கு வருவோம். மரம் நடுவதால் எவ்வளவு நன்மைகள் ஏற்படுகின்றனவோ, அதே அளவுக்கு, தவறான முறையில் மரங்களை நடும்போது, மோசமான பின்விளைவுகளையும் உண்டாக்கும் என்று உறுதியாகியுள்ளது. உள்ளூர் பருவநிலை, நிலவியல் அமைப்பு, அந்த நிலத்தின் தன்மைக்குரிய தாவரங்கள் ஆகிய அளவுகோல்களைக் கருத்தில் கொள்ளாமல், எங்கு, எப்போது, என்ன வகையான மரங்களை நட்டால் சரியாக இருக்குமென்ற தகவல்கள் இல்லாமல் நடைபெறும் மரக்கன்று நடுதல், வர்தா புயலால் சென்னையில் நடந்ததைப் போன்ற பின்விளைவுகளை உண்டாக்கலாம்.

சென்னை வர்தா புயலில் தன் பெரும்பகுதி பசுமைப் போர்வையை இழந்தததால், அதற்கு அடுத்த 2017-ம் ஆண்டு, கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக வெப்பத்தைச் சந்தித்தது. அப்போது வெப்பத்தைத் தணிக்கப் போதுமான பசுமை கவசம் சென்னைக்கு இருக்கவில்லை.

இன்று, மரம் நடும் முயற்சிகள் அனைத்துமே எத்தனை மரங்கள் நடப்படுகின்றன என்ற இலக்குடனேயே இருக்கின்றன. 2019-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதத்தின் ஒரு நாளில், 22 கோடி மரக்கன்றுங்களை ஒரே நாளில் நட்டதாக உத்தரப்பிரதேச அரசு மார்தட்டிக் கொண்டது. ஆனால், இன்றளவும் நாட்டில் அதிகமான வறட்சியையும் நீர்ப் பற்றாக்குறையும் சந்திக்கும் மாநிலங்களில் ஒன்றாக, குறிப்பாக இந்த மரம் நடும் முயற்சி நடந்த வடக்கு உத்தரப் பிரதேசப் பகுதிகள் இருந்து வருகின்றன.

மரங்கள்

``நாம் எத்தனை மரங்களை நடுகிறோம் என்பதைச் சாதனைக் கணக்காக எடுத்துக் கூறி பெருமைப்பட்டுக் கொள்வதில் எவ்விதப் பலனும் பூமிக்கோ அதன் சூழலியலுக்கோ விளைந்துவிடப் போவதில்லை. எப்படிப்பட்ட மரங்களை எந்த நிலத்தில் நடுகிறோம் என்பதே நேர்மறையான தாக்கத்தைக் கொண்டுவரும்" என்று மங்காபே ஒருங்கிணைத்த ஆராய்ச்சியாளர்கள் குழு தங்களுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆம், மரம் நடுவது பாராட்டுக்குரிய, திறம் மிக்க முயற்சிதான். ஆனால், அதை எப்படிச் செய்கிறோம் என்பதில்தான், அது இந்தப் பூமியின் மீது எத்தகைய தாக்கத்தை உண்டாக்கும் என்பதும் அடங்கியுள்ளது.



source https://www.vikatan.com/social-affairs/environment/do-planting-trees-really-helps-to-mitigating-climate-change

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக