Covid question: கிராமத்தில் என் உறவினர் ஒருவருக்கு கோவிட் டெஸ்ட் எடுக்கப்பட்டது. மறுநாளே கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். டெஸ்ட்டில் பாசிட்டிவ் என மூன்றாம் நாள் தெரிந்தது. இதனால் அவருக்கு பாதிப்பு அதிகரிக்குமா?
- ஜீவீ (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் கோவையைச் சேர்ந்த மகப்பேறு மற்றும் மகளிர்நல மருத்துவர் சசித்ரா தாமோதரன்.
``இந்த விஷயத்தில் இரண்டு சந்தேகங்கள் எழலாம்.
`உங்கள் உறவினர் எடுத்துக்கொண்ட தடுப்பூசியின் விளைவால் தொற்று பாதிப்பு அதிகமாகுமா?'
`அடுத்தது இந்தத் தொற்றின் காரணமாக ஆன்டிபாடி உருவாவது குறையுமா?'
கொரோனா தொற்று பாதித்திருப்பது தெரியாமல் அதற்கெதிரான தடுப்பூசியை எடுத்துக்கொண்டதால் அவருக்கு தொற்றின் தீவிரம் இன்னும் அதிகரிப்பதற்கோ, இந்தத் தடுப்பூசி அவரது உடலில் ஆன்டிபாடி உற்பத்தியைக் குறைக்கும் என்பதற்கோ வாய்ப்புகள் மிக மிகக் குறைவு.
ஆனால் இந்த நபரை நாம் தொற்று பாதித்தவராகத் தான் பார்க்க வேண்டுமே தவிர, தடுப்பூசி எடுத்துக்கொண்டவராகப் பார்க்கக்கூடாது. மருத்துவர் அவரைப் பரிசோதித்து, ஆக்சிஜன் அளவைப் பார்த்து, தொற்றின் தீவிரம் குறைவாக இருந்தால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளவும், மிதமாகவோ, அதிகமாகவோ இருந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கவும் அறிவுறுத்துவார். சிடி ஸ்கேன் உள்ளிட்ட அவசிய பரிசோதனைகளை எடுக்கச் சொல்வார். மற்ற கோவிட் நோயாளிகளைப் போலத்தான் அவரையும் அணுகுவார்.
சரி... இந்த நபருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி எப்போது போட வேண்டும் என்றொரு கேள்வி வரும். கொரோனா பாதித்த நபருக்கு 3 மாதங்களுக்குப் பிறகே தடுப்பூசி போட வேண்டும். இவர் இரண்டாவது டோஸ் மட்டும் எடுத்துக்கொண்டால் போதும்".
ஹார்ட் அட்டாக் வந்து ஸ்டென்ட் வைத்தவர்கள் தடுப்பூசி போடலாமா?
- ஸ்டெல்லா ஜெயநாதன்
``ஸ்டென்ட் வைத்தவர்கள், ரத்தம் உறைதலைத் தடுக்க மருந்துகள் எடுத்துக்கொண்டிருப்போர் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன் அவர்களின் மருத்துவரிடம் ஓர் ஆலோசனை கேட்டுக்கொள்வது சிறந்தது. ஸ்டென்ட் வைத்தவர்கள் ரத்தம் உறையாமலிருப்பதற்கான மாத்திரைகளையோ, ஊசிகளையோ ஆயுள் முழுவதும் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். ரிஸ்க் பிரிவில் இருப்பதால் இத்தகையவர்களுக்கு நிச்சயம் தடுப்பூசி அவசியம் என்றாலும் வேறு ஏதேனும் பிரச்னைகள் இருக்குமா என்பதை மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொண்டு பிறகு தடுப்பூசி போட்டுக்கொள்வது பாதுகாப்பானது".
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
source https://www.vikatan.com/health/healthy/can-people-who-have-placed-stent-after-heart-attack-take-covid-19-vaccine
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக