ஒரு தொடக்கத்திற்கும், முடிவிற்குமான இடைவெளியில் ஒரு பெரும் பயணம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இயற்கையின் மற்றுமொரு பரிமாணத்திலிருந்து இதைப் பார்த்தோமேயானால், ஒரு முடிவு அல்லது அழிவிலிருந்து தான் புதிய தொடக்கம் தொடங்குகிறது. இதன் வழி வரும் செய்தி, முடிவும், தொடக்கமும் மிக மிக நெருக்கத்தில் இருக்கின்றன என்பதே.
ஒவ்வொரு நாளும் முன்னால் முன்னேறி செல்லும் நாம் கவனிக்க மறந்த மிக முக்கிய விஷயங்களில் ஒன்று “முடிவுகளின் கதை”. அனுதினமும் புதிய கண்டுபிடிப்புகள், புதிய தொடக்கங்களால் நிறைந்திருக்கும் இந்த தொழில்நுட்ப உலகத்தில் முடிவுகளின் கதைகளை அறிந்துகொள்ள வேண்டியது மிக மிக முக்கியமான விஷயமாக மாறியிருக்கிறது.
அப்படியாக, சில முடிவுகளின் கதைகளை இந்தத் தொடரில் காண இருக்கிறோம். பல காரணங்களால் அழிந்துப் போன, பல காரணிகளால் அழிக்கப்பட்ட நகரங்களின் கதைகளை வெளிச்சம் போட்டு காட்டவிருக்கிறது இந்த “ Ghost Town “ தொடர்…
அத்தியாயம் - 01
“ எந்த மனிதனும் வாழ்ந்திட முடியாத நிலையை எட்டியிருந்தது அந்த ஊர். அது புதன் (Mercury ) கிரகத்தைவிடவும் சூடாக இருந்தது. சனி ( Saturn ) கிரகத்தில் நிரம்பியிருக்கும் விஷவாயுக்கள் அத்தனையும் அதன் காற்றில் பரவியிருந்தன. அந்த மண்ணின் பல இடங்களில் வெப்பம் 1000 டிகிரி Fahrenheit-யை கடந்திருந்தது. நான் அங்கு சென்ற நாளை என் வாழ்வில் மறக்கவே முடியாது. “
- David Dekok - அமெரிக்காவின் பிரபல புலனாய்வு பத்திரிகையாளர்.
அமெரிக்க ஒன்றியத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களித்த பென்சில்வேனியா மாகாணத்தின் ஒரு சிறு நகரம் சென்ட்ராலியா. பென்சில்வேனியா மாகாணம் முழுக்கவே பல்வேறு தாதுவளங்களால் நிறைந்திருந்தது.
உலகின் மிக அரிதான, விலை அதிகமான ஒரு நிலக்கரி வகை 'ஆந்த்ரசிட் ' ( Anthracite Coal ). 1800 களின் தொடக்கத்தில் சென்ட்ராலியா நகரத்தில் இந்த வகை நிலக்கரிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, சுரங்கங்கள் அமைக்கப்பட்டன.
இன்னும் ஏராளமான நிலக்கரிச் சுரங்கங்கள் அமைப்பதற்கான இடங்கள் இருந்தாலும், அந்தக் கடினமான வேலைகளுக்கு அப்போது அமெரிக்காவில் ஆட்கள் இல்லை. அந்த சமயத்தில்தான், சென்ட்ராலியா நகருக்கு வந்து சேர்ந்தார்கள் ' Molly Maguires ' எனும் ரகசிய அமைப்பைச் சேர்ந்தவர்கள். இவர்களைப் பற்றி அறிந்துக்கொள்ள நாம் 1800களின் வட-மத்திய Ireland வரலாற்றினைத் தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
1800களின் ஆரம்பத்தில் IRELAND நாட்டில் பரவிய ஒருவிதமான பூஞ்சை ( Fungus ) காரணமாக, அந்த நாட்டின் உருளைக்கிழங்கு விவசாயம் முழுக்க பாதிப்படைந்தது. இதை வரலாற்றில் ”The Great Potato Famine” என்று சொல்வார்கள்.
அங்கு ஏற்பட்ட பஞ்சத்தைத் தொடர்ந்து, பெரிய கிளர்ச்சிகள் உருவாயின. அங்கு நிறைய ரகசிய அமைப்புகளும் ( Secret Societies ) உருவாயின. அங்கிருந்த நிலக்கிழார்களுக்கு எதிராகப் பெரிய போராட்டங்கள் நிகழ்ந்தன.
அப்படியான ரகசிய அமைப்பில் ஒன்று தான் Molly Maguires. இந்த Mollies Ireland-லிருந்து, அகதிகளாக அமெரிக்காவின் Pennsylvania மாகாணத்திற்குள் வந்தார்கள். இவர்கள் பலவிதமான கொலைகள், கொள்ளைகள், திருட்டுகளுக்கு காரணமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. சிலர் அதை இன்றளவும், மறுக்கவும் செய்கிறார்கள்.
எதுவாக இருப்பினும், Mollies-யின் வருகை, சென்ட்ராலியாவில் பல புதிய நிலக்கரி சுரங்கங்கள் தொடங்க காரணமாக அமைந்தன. காலம் நகர, நகர சென்ட்ராலியாவின் நிலக்கரியில் பெரும்பாலானவை எடுக்கப்பட்டுவிட்டன. பல நிறுவனங்களும், சுரங்கங்களை மூடிவிட்டு நகரை காலி செய்து கிளம்பிவிட்டன. இருந்தும், “Strip Mining” என சொல்லப்படும் முறையில் நிலக்கரி எடுக்கப்பட்டதற்கான தடயங்கள் சின்ன, சின்னக் குழிகளாக நகரமெங்கும் இருந்தன. ஆனால், சென்ட்ராலியா மக்கள் அதை இயல்பாக எடுத்துக் கொண்டு வாழ்ந்து வந்தார்கள்.
1962ம் ஆண்டு, மே மாதம் 7ம் தேதி, எதிர்வர இருக்கும் 'தியாகிகள் தினத்திற்கான' ஏற்பாடுகள் குறித்து பேச ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. நகரின் முக்கிய பிரமுகர்கள் கலந்துக் கொண்ட அந்தக் கூட்டத்தில், நகரின் குப்பை பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது. சரியான குப்பைக் கிடங்கு இல்லாத காரணத்தால், நகரின் பல இடங்களிலும் குப்பைகள் கொட்டப்படுகின்றன என்ற பிரச்னை விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தின் முடிவில், நகரின் சுடுகாட்டிற்குப் பக்கத்திலிருக்கும் ஒரு “ Strip Mining” குழியில் குப்பைகளைக் கொட்டியபின் குழி நிறைந்ததும் நெருப்பு கொண்டு அதை அணைத்துவிடலாம் என்ற முடிவு எட்டப்பட்டது.
300 அடி அகலம், 75 அடி நீளம், 50 அடி ஆழம் கொண்டிருந்த அந்தக் குழியில் குப்பைகள் கொட்டப்பட்டன. 1962, மே 27ம் தேதி… அந்தக் குழிக்கு தீ வைகப்பட்டது. அது இரவு, பகலாக அணையாமல் எறிந்துக் கொண்டேயிருந்தது. மக்கள் பயந்தனர். தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர். பல முயற்சிகளை, பல நாட்களாக எடுத்து வந்தாலும், ஒரு நிரந்தர தீர்வைக் காண முடியவில்லை.
அந்தக் குழியில் கடைசியாக நிலக்கரி எடுத்த Lehigh Valley Coal Company-யிற்கு நோட்டீஸ் அனுப்பினார்கள். அந்த நிறுவனமும், அதன் பிறகு வந்த பல நிறுவனங்களும் எவ்வளவு முயற்சித்தும் நெருப்பை அணைக்க முடியவில்லை.
1976ம் ஆண்டு இந்தப் பிரச்னை குறித்து முதல் தடவையாக David Dekok எனும் புலனாய்வு பத்திரிகையாளர் பத்திரிகையில் எழுத ஆரம்பித்தார்.
1979ல்… John Coddington எனும் பெட்ரோல் பங்க் முதலாளி தன்னுடைய பெட்ரோலின் இருப்பளவைக் கண்டறிய, ஒரு அளவுக் குச்சியை Underground Tank-யிற்குள் விட்டுப் பார்த்தார். அதை வெளியே எடுத்துப் பார்த்த போது, அதன் வெப்பம் மிக அதிகமாகத் தெரிந்தது. அதிர்ச்சியடைந்த ஜான், ஒரு தெர்மாமீட்டரை கயிற்றில் கட்டி டேங்கிற்குள் விட்டுப் பார்த்தார். 172 டிகிரி ஃபாரன்ஹிட் என அது காட்டியது. ஜான் அதிர்ந்துவிட்டார்.
1981ம் ஆண்டு, தன் வீட்டுற்குப் பின்னால் இருந்த காலியிடத்தில் விளையாடிக் கொண்டிருந்தான் Todd Domboski எனும் 12 வயது சிறுவன். அப்போது அங்கே திடீரென பூமி பிளந்து ஒரு குழி ஏற்பட்டது. 150 அடி ஆழமுள்ள அந்தக் குழிக்குள் அவன் விழுந்துவிட்டான். ஒரு மரத்தின் வேரைப் பிடித்து தொங்கிக் கொண்டிருந்தவனை ஊர் மக்கள் வந்து காப்பாற்றினர்.
இந்தக் காலகட்டங்களில் பத்திரிகையாளர் David Dekok ஐநூற்றுக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதுகிறார். அதன் காரணமாக, அரசாங்கத்தின் கவனத்திற்கு இது செல்கிறது. அரசாங்கம் உடனடியாக மக்களை ஊரைவிட்டு காலி செய்து கிளம்பச் சொல்கிறது. சிலர் வெளியேறுகிறார்கள், பலர் தங்குகிறார்கள். 1992ம் ஆண்டு கட்டாய வெளியேற்றத்திற்கான உத்தரவைப் போடுகிறது அரசாங்கம். வெளியேறி வேறு நகரில் குடியமர தேவையான பொருளாதார செலவுகளையும் அரசாங்கமே ஏற்கிறது. அனைவரும் வெளியேறிவிட இறுதியாக, 7 பேர் மட்டும் அங்கேயே வசிக்க உரிமைக் கோருகிறார்கள். அவர்கள் வாழ்நாள் வரை சென்ட்ராலியாவில் வாழ்ந்துக் கொள்ளலாம், ஆனால், சென்ட்ராலியாவில் உள்ள அவர்களின் சொத்துகள் அடுத்த தலைமுறைக்கு கொடுக்கப்படாது என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
2013ம் ஆண்டு நிலவரப்படி சென்ட்ராலியாவில் ஒருவர் மட்டும் தனியாக வாழ்ந்து வந்தார். அவரும் 2015-ல் வெளியேறிவிட்டார். பிளவுபட்ட சாலைகள், செடி, கொடிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் ஆளரவமற்ற வீடுகள், எந்நேரமும் பூமிக்கடியில் கனன்று எரிந்துக் கொண்டிருக்கும் நெருப்பு, மேகங்களுக்குப் போட்டியாக உருவாகும் புகை மண்டலங்கள், ஒருவித சாம்பல் வாசம், இரவு நேரங்களில் மீத்தேன் எரிவாயுவினால் நீல நிறத்தில் தகதகக்கும் நிலம் என ஒரு பேய் நகரமா மாறி நிற்கிறது சென்ட்ராலியா. 1 7 9 2 7 என்ற பின்கோடு அமெரிக்க ஒன்றியத்தின் அனைத்து ஆவணங்களிலிருந்தும் நீக்கப்பட்டுவிட்டன. இதன் அர்த்தம், அந்தப் பின்கோடை தாங்கி நின்ற சென்ட்ராலியா, அமெரிக்க வரைபடத்திலிருந்து நிக்கப்பட்டுவிட்டது என்பது தான்.
தொடரும்....
source https://www.vikatan.com/news/world/ghost-town-his-the-series-to-know-the-reason-for-this-city-thats-no-longer-in-the-world-map-now-part-1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக