Ad

சனி, 22 மே, 2021

அடடா... செம அடி..! - முன்பதிவற்ற ரயில் பயணங்களில் ஒருநாள் #MyVikatan

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

சிறுவயதிலிருந்தே பேருந்து மற்றும் மகிழுந்துகளில் செல்வதென்றால் வாந்தி வருவது வழக்கம், அது நெடும்பயணமானலும் சரி குறும்பயணமானலும் சரி. எனது அன்னைக்கும் ஒவ்வாமை இருந்ததால் என்னவோ எனக்கும் அதே ஒவ்வாமை இருந்தது. இராமநாதபுரத்திலிருந்து பயணம் ஆரம்பிக்கும் முன்னரே பாலித்தீன் பைகளை நான்கைந்து வாங்கி பைக்குள் வைத்துக்கொள்வது வழக்கம். செல்லுமிடமெல்லாம் இதனாலேயே தந்தையிடம் திட்டு வாங்குவதுண்டு. காலப்போக்கில் அந்த ஒவ்வாமை அறவே மறந்தது. இப்பொழுது எங்கு சென்றாலும் எவ்வளவு தூரம் சென்றாலும் எனக்கும் என் தாய்க்கும் அந்த பிரச்னை வருவதில்லை. மேலும் தந்தை மறைவிற்குப் பின்னர் குடும்பத்தில் ஏற்பட்ட பல்வேறு கொடிய சூழ்நிலைகளால் வாழ்கையை ஆடம்பரமின்றி சற்று எளிமையாக வாழப் பழகிக்கொண்டேன்.

பேருந்து நிலையம்

வாழ்க்கையில் பிறந்தது முதல் இன்றுவரை இரண்டு பாகங்களாகப் பிரித்தால் ஒன்று அப்பா இறப்பதற்கு முன், மற்றொன்று அப்பா இறந்ததற்குப் பின் என்றே பிரிக்கமுடியும்.‌ அவ்விரண்டும் அவ்வளவு எதிர்மறையான வாழ்க்கை. ஒன்று கஷ்டத்தையே காணாத வாழ்க்கை மற்றொன்று கஷ்டத்தை மட்டுமே கண்ட வாழ்க்கை. இத்தகைய சூழலில்தான் அந்த முன்பதிவற்ற ரயில் பயணங்களை பழகினேன். முதலில் பழகினேன் பின்னர் அந்த பயணங்களை ரசித்தேன் என்றே சொல்ல வேண்டும். சென்னையிலிருந்து இராமநாதபுரம் வரை, பிறகு மீண்டும் இராமநாதபுரத்திலிருந்து சென்னை வரையான முன்பதிவற்ற ரயில் பயணங்களின் ஒரு சிறுபகுதிதான் இந்தக் கதை.

ஒருவர் யாரையாவது ஓங்கி அறைந்ததை நீங்கள் சினிமாவைத் தவிர நேரில் கண்டு ரசித்ததுண்டா? அன்று நான் ரசித்தேன். வழக்கம்போல் 3 நாள் விடுமுறைக்காக சென்னையிலிருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் சேதுபதி விரைவு வண்டியைப் பிடிக்க 3 மணிக்கெல்லாம் வேலையை விரைந்து முடித்துவிட்டு ரயில் நிலையத்திற்கு ஓடினேன். முன்பதிவு செய்யப்படாத பெட்டியினுள் இடம்பிடித்தவர்களுக்கு மட்டுமே தெரியும் எதற்காக 5 மணி வண்டிக்கு 3 மணிக்கே செல்ல வேண்டுமென்று. ஒருவழியாக ஒற்றை இருக்கை ஒன்றைப் பிடித்து ஒய்யாரமாக அமர்ந்தேன். ஏனென்றால் நான்குபேர் இருக்கையில் அமர்ந்தால், சற்று நகர்ந்து உட்காருங்கள் என்று கூறி நிறைய தொந்தரவு வரும். மேலே ஏறி படுத்தால் எழுந்து உட்காரப்பா பெட்டிகளை வைக்கவேண்டுமென சில தொந்தரவுகள் வரும். இதுபோக கழிவறைக்கு செல்கிறேன் என்று அடிக்கடி சிலர் எழுந்து செல்வர். இதனாலேயே எதற்கு வம்பென்று அந்த ஒற்றை இருக்கையிலேயே வழக்கமாக அமர்ந்துவிடுவேன்.

ரயில்

அந்த ஒற்றை இருக்கையின் வலதுபுறத்தில் உள்ள நால்வர் அமரும் இருக்கையில் ஒரு அக்காவும் அவருடைய கணவரும், மேலும் கணவரின் நண்பர்கள் நால்வரும் வந்து இடம்பிடித்தனர். அந்த அக்காவிடம் அவரது கணவர் நீ உள்ளேயே இருமா நான் நண்பர்களுடன் வெளியே உரையாடிக் கொண்டிருக்கிறேன். வண்டி புறப்படும் நேரம் சரியாக உள்ளே வந்துவிடுவேன் என்று கூறினார். அந்த அக்கா ஜன்னலின் ஓரமாய் அமர்ந்தார். அவருக்கு எதிர்ப்புறம் இருந்த நால்வர் அமரும் இருக்கையில் கணவரின் நண்பர்களுக்காக சில பைகளையும் துண்டையும் போட்டார். அவருக்கு அருகிலே கணவருக்காக ஒரு பையை வைத்தார். வண்டி புறப்பட ஒரு ஐந்து நிமிடம் இருக்கும் பட்சத்தில் உள்ளே வந்தான் ஒருவன். அந்த துண்டு கிடக்கும் நால்வர் அமரும் இருக்கையில் ஒரு ஓரமாய் துண்டை விலக்கி அமர்ந்தான். மேலும் அவன் மது அருந்தியிருந்தான்.

உடனே அந்த அக்கா, "அண்ணா... அந்த இடத்தில் என் கணவரின் நண்பர்கள் அமர்வார்கள்" என்று கூற, "சரிமா... வரட்டும் வந்ததும் நான் எழுந்துவிடுகிறேன்" என்று கூற, அவர், "சரி அண்ணா!" என்று பேச்சை விட்டார். இறுதியாக வந்து அமர்ந்தவனை, வழியனுப்ப வந்தவர், "அண்ணா... வா வேறு இடம் பார்க்கலாம்" என்று கூறினார். அவனோ, "அதெல்லாம் வேண்டாம் நான் பார்த்துக்கொள்கிறேன். நீ செல்" என்று தெனாவெட்டாய் கூறினான். சரி என்னதான் நடக்கும் என்று நான் பொறுத்திருந்தேன்.‌ ரயில் புறப்படுவதற்கான ஒலி எழுப்ப அந்த அக்காவின் கணவரும் மற்றும் அவருடைய நண்பர்களும் உள்ளே வந்தனர். உடனே அந்த அக்கா அண்ணா அவர்கள் வந்துவிட்டனர் நீங்கள் எழுந்துகொள்ளுங்கள் என்று கூறினார். அதெல்லாம் முடியாது என்று மறுத்தான்.

உடனே அந்த அக்கா, அண்ணா நீங்கள் முன்பே அவர்கள் வந்ததும் நான் எழுந்துவிடுவேன் என்று கூறியதால் தான் உங்களை அமர அனுமதித்தேன் என்றார். அதெல்லாம் முடியாது என்றான் அவன்.

"ஹேய் நீ இப்போ எழ முடியுமா? முடியாதா?" என்று அந்த அக்காவின் கணவரும் அவருடைய நண்பர்களும் சற்று சத்தமாய் கேட்க, "டேய் நான் யாரு தெரியுமா? என்ன ஜாதி தெரியுமா?" என்று கூறினான் அந்த மதிப்பிற்குரிய மதுப்பிரியன். அதெல்லாம் எங்களுக்கு வேணாம் நீ எழுந்து செல் என்று நிதானமாக பேசினார்கள். ஆனால் மாறாக அவனோ நான் “இவன்டா” என்னடா பண்ணுவ என்று தன் ஜாதிப்பெயரைக் கூறி மிஞ்ச, அப்பொழுதும் அவர்கள் "சரி நீ எழுந்துபோ" என்றே கூறினர். எனக்கோ, என்னடா இவன் இப்படி வெட்டவெளியில் வாயாடுகிறான் இவர்கள் ஐந்து பேரும் அமைதி காக்கின்றனர் என்று மனதினுள் கோபக்கனல் எரிந்துகொண்டிருந்தது. மீண்டும் இரண்டு மூன்று முறை அவன் தன் ஜாதிப்பெயரை மார்தட்ட, சடாரென ஐவரில் ஒருவரின் கை அவன் கன்னத்தை பதம்பார்த்தது.

ரயில்கள்

அடடா! இதுவல்லவா அரை என்று மனதார ரசித்தேன். அப்பொழுது அங்கிருந்து சென்றவன்தான் கண்காணாத இடத்திற்கு சென்று மறைந்தான். சரி இங்ஙனம் இது முடிவடைந்தது என்று பார்த்தால், பகலில் பரமக்குடி தாண்டி இராமநாதபுரம் அடையுமுன் சரியாக அதே இடத்திற்கு வந்தான் அந்த ஜாதியப் பித்தன். "இங்கேதான் இருந்தார்கள் எங்கே சென்றனர் அவர்கள். நாங்களும் இராமநாதபுரம்தான் ஆனதைப் பார்த்துக்கொள் என்றார்களே. பொய் சொன்னார்களோ! இங்கே பாருங்கள் நான் அவர்களைப் படம் எடுத்துள்ளேன்" என்று அவர்களுடைய புகைப்படத்தை என்னிடம் காட்டினான். அவர்கள் சிக்காமலா போய்விடுவார்கள் என்று கூறினான். "அடப்பாவி இன்னுமா திருந்தவில்லை நீ, உனக்கு இதைப்போல் பல இடங்களில் நையப்புடை காத்திருக்கிறது" என்று மனதிற்குள் நினைத்தவாறு ஊர் வந்ததும் மகிழ்வுடன் வீட்டிற்குக் கிளம்பினேன்.

(குறிப்பு: இவன்டா என்று மேலே குறிப்பிட்டது ஒரு ஜாதியின் பெயர், அதை இப்படி வெட்டவெளியில் நான் சுட்டிக்காட்ட விரும்பவில்லை)

பேரன்புடன்

- சசிக்குமார் ரெத்தினம்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/



source https://www.vikatan.com/oddities/miscellaneous/ramanathapuram-man-shares-his-unreserved-train-journey-experience

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக