Ad

சனி, 22 மே, 2021

காசு கொடுத்தால் போட்ட ட்வீட்டை மீண்டும் திருத்தலாம்! கட்டணச் சேவையை அறிமுகப்படுத்தும் ட்விட்டர்!

ட்விட்டர் தளமானது பணம் செலுத்திப் பயன்படுத்தும் வகையில் புதிய திட்டங்களைச் சில காலமாகவே அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ட்விட்டர் புளு (Twitter Blue) என்ற புதிய சேவையைக் கொண்டு வரும் முடிவில் இருப்பதாகத் தெரிகிறது. Jane Manchun Wong என்ற ட்விட்டர் பயனர் புதிய ட்விட்டர் புளு எப்படி இருக்கும் என்பது குறித்து அவருக்குக் கிடைத்த ஸ்க்ரீன்ஷாட்களைப் பகிர்ந்திருக்கிறார். அதில் புதிய ட்விட்டர் புளுவில் என்னென்ன வசதிகள் கொடுக்கப்பட இருக்கின்றன மற்றும் மாதம் எவ்வளவு கட்டணம் செலுத்தி அந்தச் சேவையைப் பயன்படுத்தலாம் போன்ற தகவல்களையும் அவர் பதிவிட்டிருக்கிறார்.

அதன்படி மாதம் 2.99 அமெரிக்கன் டாலர் என்ற தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்திப் பயன்படுத்தும் இந்தப் புதிய சேவையில் நமக்குப் பிடித்த ட்வீட்களை சேமிக்கவும், ஒழுங்குபடுத்தவும் முடியும் மற்றும் நாம் ட்வீட் செய்த பிறகும் கூட அந்த ட்வீட்டை திருத்தவும் முடியும் வகையில் புதிய வசதி கொடுக்கப்படும்.

புதிய சேவை மூன்று கட்டண முறைகளில் இருக்கலாம். குறைவான கட்டணம் செலுத்தி அடிப்படை சேவையைத் தேர்ந்தெடுப்பவர்களுக்குக் குறைவான வசதிகளும், அதிகக் கட்டணம் செலுத்துபவர்களுக்கு அதிக வசதிகளும் கொடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. பெரும்பாலான ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்கள் இப்படியான கட்டண முறையோடு செயல்படும் நேரத்தில் சமூக வலைத்தளமான ட்விட்டரும் இந்தக் கட்டண முறையைப் பயன்படுத்தும் முடிவை எடுத்திருக்கிறது.

இந்த மாதத் தொடக்கத்தில் டிப் ஜார் என்ற வசதியையும் ட்விட்டர் அறிமுகப்படுத்தியிருந்தது. அதன் மூலம் நாம் மிகவும் விரும்பும் ட்விட்டர் பயனருக்குச் சிறு பங்களிப்பை அளிக்கலாம் என்பதன் அடிப்படையில் அந்த வசதியை அறிமுகப்படுத்தியிருந்தது. இந்தப் புதிய வசதிகள் அனைத்தையும் ட்விட்டருக்கு விளம்பரங்களைத் தவிர வேறு விதமான வரவுகளைக் கொண்டு வர வேண்டும் என்ற அடிப்படையில் அறிமுகப்படுத்தி வருகிறது. ட்விட்டர் புளு சேவையினால் சாதாரண ட்விட்டர் பயனர்களின் பயன்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது. அவர்களுக்கு ட்விட்டர் தற்போது இருக்கும் அதே வசதிகளுடனே இருக்கும். ஆனால், இன்னும் நிறைய வசதி வேண்டும் என்பவர்கள் கட்டணம் செலுத்தி ட்விட்டர் புளுவைப் பயன்படுத்திக் கொள்ளலாம்!



source https://www.vikatan.com/business/tech-news/twitter-to-introduce-new-subscription-based-twitter-blue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக