Ad

சனி, 22 மே, 2021

தமிழக அரசு அறிவித்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள்; சரியாக இயங்குகின்றனவா? பசுமை விகடன் ரிப்போர்ட்

இந்த ஊரடங்கு காலத்தில், விவசாயிகள் உற்பத்தி செய்த உணவுப்பொருள்கள் தேங்காமலும் வீணாகாமலும் மக்களைச் சென்றடைய வேண்டுமென்று தமிழக அரசு பல திட்டங்களை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. `ஊரடங்கு காலத்திலும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. இங்குள்ள நவீன சேமிப்புக் கிடங்குகளில், விவசாயிகள் தங்களுடைய விளைபொருள்களை 180 நாள்கள் வரை சேமித்து வைத்துக்கொள்ளலாம். விவசாயிகளின் விளைபொருள்களின் விலை தற்சமயம் குறைந்திருக்கிறது என்றால், அவற்றின் விலை ஏறுகிற வரைக்கும் கிடங்கில் வைத்துப் பாதுகாக்கலாம்.

விவசாயம்

விரைவில் அழுகக்கூடிய காய்கறிகள் மற்றும் பழங்களை, ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் இருக்கிற குளிர்சாதனக் கிடங்கில் விவசாயிகள் வைத்துக்கொள்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தவிர, விநியோகத் தொடர் மேலாண்மை திட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள, முதன்மை பதப்படுத்தும் நிலையங்களிலும் குளிர்சாதனக் கிடங்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கிடங்குகளில் வைக்கப்பட்டிருக்கிற தங்களுடைய விளை பொருள்களை அடமானமாக வைத்து, தற்போதைய சந்தை மதிப்பில் 75 சதவிகிதம் வரைக்கும் பொருளீட்டு கடன் பெறலாம். இந்த முறையில் அதிகபட்சம் ரூ.3,00,000 வரை கடன் பெறலாம். இந்தக்கடனை 180 நாள்களுக்குள் அடைத்துவிட வேண்டும். இதற்கான வட்டி 5 சதவிகிதம் மட்டுமே. விவசாயிகள் இந்த வசதிகளைப் பயன்படுத்தி தங்களுடைய விளைபொருள்களைப் பாதுகாத்துக்கொள்ளலாம். இதில் அவர்களுக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், மாநில அளவில், 044 -- 2225 3884 என்ற தொலைப்பேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.’

ஒழுங்குமுறை விற்பனை கூடங்களின் தொலைபேசி எண்கள்

இந்த செய்திக் குறிப்புடன் மாவட்டங்களின் தொலைப்பேசி எண்களும் கொடுக்கப்பட்டிருந்தன. அந்த எண்களுக்கு விவசாயிகளின் போன் செய்தால், எப்படி நடந்துகொள்வார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள, நம்முடைய அடையாளத்தை மறைத்து அந்த எண்களுக்கு போன் செய்தோம். அவர்களுடைய ரெஸ்பான்ஸ் இதோ...

``தானியக்கிடங்குல நெல், சிறுதானியம், பயறு வகை, எண்ணெய் வித்துக்கள்னு எல்லா விளைபொருள்களையும் முதல் 15 நாள் இலவசமா வெச்சுக்கலாம்மா. அதுக்கப்புறம்தான் ஒரு நாளைக்கு ஒரு டன்னுக்கு 50 பைசா தரணும்.’’

``இங்கே கொடுக்கிற பொருளீட்டு கடனுக்கு வருட வட்டி 5 சதவிகிதம்க. முதல் 15 நாள் அதுவும் கிடையாது. உங்க பொருளுக்கு நல்ல விலை வந்ததும் வித்து, வட்டியைக் கொடுத்துடலாம்.’’

`எங்ககிட்ட பேச நேரம், காலமெல்லாம் கிடையாதுங்கம்மா. ஒருவேளை நாங்க எடுக்கலைன்னா, அப்புறம் நாங்களே போன் செஞ்சு பேசுவோம்.’’

``குடோன்ல உலர் களங்கள்கூட இருக்கு. நீங்க அதை இலவசமாக பயன்படுத்திக்கலாம். உங்க நெல்லை காய வெச்சு எடுத்துட்டு போகலாம்.’’

``காய்கறிகள் அதிகம் விளையுற தஞ்சாவூர், திருவாரூர்ல குளிர்சாதனக் கிடங்கு இருக்குங்க. இங்க இன்னும் வரலை. கூடிய சீக்கிரம் ஆரம்பிச்சிடுவாங்க. குடோனுக்குள்ள எலி நுழைய முடியாதும்மா. மழை பெய்ஞ்சா தண்ணியும் நுழையாது. தரையில இருந்து மூணு, நாலு அடி உயரத்துலதான் குடோன் இருக்கு.’’

``வியாபாரிகள் வர்றதை விவசாயிகளுக்கு தகவல் சொல்லிடுவோம்.’’

விளைபொருள்கள்

``உங்க விளைபொருள் மேல கடன் வாங்கியிருந்தாலும் நீங்க எப்போ வேணும்னாலும் இங்க வந்து உங்க பொருளை பார்த்துட்டு போகலாம்.’’

``இங்கே உழவர் சந்தை, தோட்டக்கலை, வேளாண்மை, விற்பனைத்துறைன்னு நாலு பேர் இருக்கோம்க. உங்களுக்கு என்ன உதவி வேணும் சொல்லுங்க.’’

``உங்ககிட்ட என்ன பொருள் இருக்குன்னு சொல்லுங்கம்மா. எங்கே விற்பனை செய்யணும்னு நாங்க உதவி பண்றோம்.’’

``மாம்பழம், தக்காளி, கத்தி, வெண்டைக்காய்னு எதுன்னாலும் உங்களால விற்க முடியலைன்னா வேளாண் வணிகத்தின் கீழ் நாங்க உதவி செய்வோம். சென்னைக்கு அனுப்பணும்னா, வியாபாரிகளோட லிங்க் ஏற்படுத்தித் தர்றோம் மேடம்.’’

``வேளாண் பொருள்களை விற்பனை செய்றதுல என்ன இடர்பாடுன்னாலும் சொல்லுங்க மேம். இது அதுக்கான கட்டுப்பாடு அறை.’’

ஆரம்பம் சரியாக இருக்கிறது. இது எப்போதும் இப்படியே இருக்க வேண்டும். விவசாயிகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதே பசுமை விகடனின் விருப்பம்!



source https://www.vikatan.com/government-and-politics/agriculture/is-tn-govts-helpline-for-farmers-to-use-its-godowns-cold-storage-facilities-working

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக