அரபிக் கடலில் உருவான டவ்தே புயலைத் தொடர்ந்து வங்கக் கடலில் 'யாஸ்' புயல் உருவாகிவருகிறது. மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில், இன்றைய தினம் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகவிருக்கிறது. இது வரும் திங்கட்கிழமை புயலாக வலுப்பெற்று, மேலும் தீவிரமடைந்து, வடமேற்கு நோக்கி நகர்ந்து, வரும் 26-ம் தேதி ஒடிசா, மேற்கு வங்கம் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஆந்திரா, ஒடிசா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இதன் காரணமாக ஒன்பது ரயில்களை இரு வழியிலும், நான்கு ரயில்கள் ஒரு வழியிலும் ரத்து செய்து மத்திய ரயில்வேதுறை உத்தரவிட்டுள்ளது. வங்கக் கடலில் மீன் பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் அருகிலுள்ள துறைமுகங்களுக்குச் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஆந்திரா, ஒடிசா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள் நிர்வாகத்துக்கு மத்திய சுகாதாரச் செயலாளர் ராஜேஷ் பூஷண் எழுதியுள்ள கடிதத்தில், புயலின் பாதையிலுள்ள மருத்துவமனைகளை இடம் மாற்றுவது குறித்துத் திட்டமிட வேண்டும். இந்தச் சூழலைக் கையாள மாநில அரசுகளுக்கு, மத்திய சுதாதார அமைச்சகம் உதவுவதற்குத் தயாராக உள்ளது. மாநில அரசுகள் சுகாதாரத்துறைக்கான அவசரகால நடவடிக்கை மையம் அல்லது கட்டுப்பாட்டு அறையை ஏற்படுத்த வேண்டும். பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்படும் மக்களுக்கு மருத்துவம் மற்றும் சுகாதார வசதிகளைத் திட்டமிட வேண்டும். அவர்களுக்கு கொரோனா தொற்று இருந்தால் விரைந்து மருத்துவம் வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
source https://www.vikatan.com/news/tamilnadu/cyclone-yaas-centre-asks-states-near-eastern-coastline-to-ramp-up-health-infrastructure
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக