Ad

புதன், 5 மே, 2021

புதுக்கோட்டை: `எங்க பூஜை சோறு போட்டாலும் கிளம்பிடுவோம்!' - அன்னதானத்துக்காகவே ஒரு வாட்ஸ்அப் குரூப்

ஆடி, சித்திரை, வைகாசி போன்ற முக்கிய மாதங்களில் கோயில்களில் திருவிழாக்கள், கிடா வெட்டு பூஜைகள் அதிகம் நடைபெறுவது வழக்கம். இந்த விழாக்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் அன்னதானம் வழங்குவார்கள். தற்போது கொரோனா தொற்று பரவலால் கோயில்களில் திருவிழாக்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், சில கோயில்களில் நேர்த்திக்கடன் செய்துகொண்ட சிலர் தவிர்க்க முடியாத நிலையில் குறைந்த எண்ணிக்கையிலான மக்களுடன் விழாவை நடத்தி அன்னதானம் கொடுத்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரை புதுக்கோட்டை, கறம்பக்குடி, கந்தர்வக்கோட்டை பகுதிகளில் உள்ள கோயில்களில் அதிகமாகக் கிடா வெட்டு பூஜைகள், அன்னதானம் நடைபெற்று வருகின்றன.

அன்னதானத்தில் கலந்து கொள்ளும் வாட்ஸ் அப் குழு

இந்த அன்னதான நிகழ்வுகளில் பலரும் கலந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், கறம்பக்குடியைச் சேர்ந்த இளைஞர்கள் `பூஜை சோறு தகவல் மையம்' என்ற வாட்ஸ் அப் குரூப்பை உருவாக்கியுள்ளனர். அதில் அன்னதானம் நடைபெறும் இடம், தேதி போன்ற தகவல்களைத் தெரிவிக்கின்றனர். நேரமும் வாய்ப்பும் உள்ள இளைஞர்கள் குழுவாக அந்தந்த இடங்களுக்குச் சென்று அன்னதானத்தில் கலந்துகொண்டு வருகின்றனர்.

இதுபற்றிக் கறம்பக்குடியைச் சேர்ந்த சின்னதுரையிடம் கேட்டபோது, ``எங்க பகுதியில கோயில் திருவிழாக்கள் அதிகம். குறிப்பா அதிகமா கிடா வெட்டு பூஜை நடக்கும். சின்ன வயசிலயிருந்தே நான் பூஜை சோறு சாப்பிட்டு வளர்ந்தவன். அன்னைக்கு பூஜை நடத்துறவங்க, கோயில் சோறு ரொம்ப நல்லதுன்னு சொல்லி, எங்களைக் கூட்டிக்கிட்டுப் போய் சாப்பாடு போடுவாங்க. திருப்தியா சாப்பிட்டுட்டு வருவோம்.

அதுவே பழக்கமாகி, எங்க பூஜை சோறு போட்டாலும் கூச்சமெல்லாம் படாம போய் சாப்பிட்டு வந்திடுவேன். `எங்ககிட்டயெல்லாம் பூஜை பத்தி சொல்ல மாட்டீங்கிற...'னு ஃப்ரண்ட்ஸ் எல்லாம் கோபப்படுவாங்க. அப்பதான் இதுக்காக ஒரு குரூப் ஆரம்பிக்கிற ஐடியாவே வந்துச்சு.

2019 ஆடி மாசத்துல இந்த `பூஜை சோறு தகவல் மையம்' வாட்ஸ்அப் குரூப்பை உருவாக்குனோம். இன்னைக்கு இந்த குரூப்ல 256 பேர் இருக்காங்க. குரூப்பே நிரம்பி வழியுது. என்ன விழா, எந்த ஊர், எந்த இடம், எப்போ பூஜைனு எல்லா விவரத்தையும் குரூப்ல பதிவிடுவோம். வாய்ப்பு கிடைக்கிறவங்க போய் சாப்பிட்டு வந்திடுவாங்க. இதுவரை யாரும் தவறாகவோ, தெரியாமலோ பதிவு போட்டதில்லை. சில இடங்கள்ல சாப்பாடு முடிந்து போனதால சிலருக்குக் கிடைக்காம போயிருக்கு.

நண்பர்கள் அதிகமானதால நிறைய திருவிழாக்கள் சொல்றாங்க. முன்னாடி எல்லாம் கறம்பக்குடிக்குள்ள மட்டும்தான் அட்டெண்ட் பண்ணோம். தஞ்சாவூர் மாவட்டங்கள்ல உள்ள பகுதிகளுக்கு சுமார் 100 கி.மீ தூரம் வரைக்கும் போய் இப்போ சாப்பிட்டு வர்றோம். சைவ சாப்பாடு அன்னதானத்தைவிட, பலரும் கிடா வெட்டு பூஜையைத்தான் விரும்புவாங்க. நடு ராத்திரி 12 மணிக்கெல்லாம் கிடா வெட்டு பூஜை நடக்கும். ஆனாலும், அதைத் தவற விடமாட்டோம். எங்க நடந்தாலும் போய் சாப்பிட்டு வந்திடுவோம்.

அன்னதானம்

`எங்க சோறு போட்டாலும் கிளம்பிப் போயிடுறாங்க, வேலைவெட்டி இல்லாத பயலுவ'னு எங்களைக் கிண்டல் செய்யுறவங்களும் இருக்காங்க. அதபத்தி பெருசா நாங்க கவலைப்படுறதில்ல. காரணம், அவங்க சொல்ற மாதிரி வேலைவெட்டி இல்லாதவங்க இல்லை நாங்க. எங்க குரூப்ல உள்ளவங்க பலரும் படிச்சிட்டு ஏதாவது ஒரு வேலை பார்க்குறவங்க. வேலை நேரத்தைத் தவிர்த்து கிடைக்கும் நேரங்கள்லதான் அன்னதானம் சாப்பிட்டு வர்றோம். ஸ்டார் ஹோட்டல்கள்ல கிடைக்காத ருசி எங்களுக்கு இந்த அன்னதானத்துல கிடைக்குது. எல்லாரும் சேர்ந்து போய், கிடைக்குற எடத்துல உக்கார்ந்து, இலைபோட்டு சாப்பிடுற அந்த ருசி அனுபவிச்சவங்களுக்குத்தான் தெரியும்.

அன்னதானம் சாப்பிடுறதுக்காகத்தான் இந்த குரூப் தொடங்கப்பட்டது. ஆனா, இப்போ இந்த குரூப் மூலமா ரத்ததானமும் கொடுத்துக்கிட்டு வர்றோம். அன்னதானத்துல காட்டுற ஈடுபாட்டை அப்படியே இந்த ரத்ததானத்திலும் காட்டிக்கிட்டு வர்றோம். அவசர உதவிக்கு ரத்தம் கேட்கும்போது, தகவலை உறுதிப்படுத்தி, எங்க குரூப் நண்பர்கள் அங்க போய் ரத்ததானம் கொடுக்கிறாங்க. இப்போ கொரோனா பிரச்னையால சில இடங்கள்ல அன்னதானம் தடைபட்டிருக்குறது வருத்தம்தான். அதே நேரத்துல எங்க குரூப் மூலமா ரத்ததானம் தொடர்ந்து கொடுத்துட்டு இருக்குறது மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு" என்றார்.

உணவும் உதிரமும் பகிரும் நண்பர்கள் குழுவுக்கு வாழ்த்துகள்!



source https://www.vikatan.com/news/tamilnadu/pudukkottai-youths-runs-special-whatsapp-group-to-attend-annadanam-events

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக