Ad

புதன், 5 மே, 2021

கிங் இன்ஸ்டிட்யூட்டில் திருடப்பட்ட ரெம்டெசிவிர் மருந்து - ரூ.20,000-க்கு விற்பனை செய்த டாக்டர் கைது!

கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் என்ற மருந்து பயன்படுத்தப்படுகிறது. தேவை அதிகரிப்பு காரணமாக இந்த மருந்து கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டுவருகிறது. அதனால் ரெம்டெசிவிர் மருந்தைக் கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டிருக்கிறார். அதன்பேரில் போலீஸார், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

ரெம்டெசிவிர் மருந்து

இந்தநிலையில், கிண்டி பகுதியில் ரெம்டெசிவிர் மருந்து கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக சிவில் சப்ளை சி.ஐ.டி போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. உடனடியாக போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த டாக்டர் ராம்சுந்தர் என்பவரின் காரை போலீஸார் சோதனை நடத்தினர். அவரின் காரில் ரெம்டெசிவிர் மருந்து இருப்பதை போலீஸார் கண்டறிந்தனர். அவர் அளித்த தகவலின்படி ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த மருந்தாளுநர் கார்த்திக் (28) என்பவரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். அவரிடமும் ரெம்டெசிவிர் மருந்து இருந்தது. இதையடுத்து இருவரையும் சிவில் சப்ளை சி.ஐ.டி போலீஸார் கிண்டி போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் இருவரிடமும் விசாரித்தபோது 700 ரூபாய் மதிப்பிலான ரெம்டெசிவிர் மருந்தை 20,000 ரூபாய் வரை விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து 24 மருந்து பாட்டில்களைக்கொண்ட நான்கு பெட்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது பேரிடர் மேலாண்மைச் சட்டம், அத்தியாவசியப் பொருள்கள் சட்டம், தொற்று நோய்கள் தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணைக்குப் பிறகு இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட டாக்டர், மருந்தாளுநர்

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``கைதுசெய்யப்பட்ட மருந்தாளுநர் கார்த்திக், கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிட்யூட்டிலிருந்து ரெம்டெசிவிர் மருந்தை எடுத்து டாக்டர் ராம்சுந்தரிடம் விற்றுவந்திருக்கிறார். அதை டாக்டர் ராம்சுந்தர், நோயாளிகளுக்குக் கூடுதல் விலைக்கு விற்றிருக்கிறார். இது தொடர்பாக ரகசிய தகவல் கிடைத்ததும் இருவரையும் கையும் களவுமாகப் பிடித்தோம். தமிழகம் முழுவதும் ரெம்டெசிவிர் மருந்தைக் கள்ளச்சந்தையில் விற்க ஒரு கும்பல் செயல்பட்டுவருகிறது. அவர்கள் குறித்து விசாரணை நடந்துவருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் தாம்பரத்தைச் சேர்ந்த டாக்டர் முகமது இம்ரான்கான் என்பவர் கைதுசெய்யப்பட்டார். அதையடுத்து தற்போது ராம்சுந்தர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இவர், கொரோனா வார்டில் தற்காலிக டாக்டராகப் பணியாற்றிவருகிறார்" என்றனர்.

சட்ட விரோதமாக கொரோனா தொற்று சிகிச்சைக்குரிய மருந்துகளைக் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாகத் தெரியவந்தால் 8754401111 என்ற செல்போன் எண்ணுக்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம் என அடையாறு துணை கமிஷனர் விக்ரமன் தெரிவித்திருக்கிறார்.



source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-doctor-for-selling-remdesivir-high-price

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக