Ad

புதன், 5 மே, 2021

மதுபாட்டில்கள் கடத்தல்: மிஸ் செய்த தமிழக போலீஸ்! -100 அடி தூரத்தில் கேரள போலீஸிடம் சிக்கிய கார்

கொரோனா பரவல் காரணமாக, கேரளாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழக – கேரள எல்லைகளில், கேரள போலீஸார், மருத்துவக்குழுவினர் சோதனைகளை கடுமையாக்கியுள்ளனர். மருத்துவம் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. வேறு ஏதாவது காரணம் என்றால், இ-பாஸ் உடன், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

குமுளி சோதனைச் சாவடி

இந்நிலையில், நேற்று (05/05/2021), தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து குமுளிக்கு கார் ஒன்று வந்துள்ளது. தமிழக சோதனைச்சாவடியில், அந்த காரை சோதனை செய்யாமல் அனுமதித்துள்ளனர். தொடர்ந்து கேரள எல்லைக்குள் நுழைந்த அந்த காரை, கேரள காவல்துறை ஆய்வாளர் ராய் தலைமையிலான போலீஸார், நிறுத்தி காரில் இருந்த இருவரிடமும் விசாரணை செய்தனர். அப்போது, இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீஸார், காரில் சோதனை செய்தனர். அப்போது, காரில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 80 மதுப்பாட்டில்களை போலீஸார் கைப்பற்றினர்.

Also Read: மைசூர், குமுளி, கோவா, சிம்லா.. கோடைச் சுற்றுலா எங்கே போகலாம்.. எப்படிப் போகலாம்? #QuickGuide

கைது செய்யப்பட்ட இருவர்

காரில் இருந்த இருவரும், குமுளி அருகே உள்ள வண்டிப்பெரியாறு பகுதியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் ஆண்டனி (வயது 32) மற்றும், செல்வக்குமார் (வயது 31) என்பது தெரியவந்தது. கேரளாவில், கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்ட நிலையில், மதுபாட்டில்களை வாங்க முடியாத சூழல் நிலவியதாகவும், அதனால், கம்பத்தில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி, கேரளாவில் அதிக விலைக்கு விற்க திட்டமிட்டதும் போலீஸார் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளனர். தொடர்ந்து கலால்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டு, காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

குமுளி எல்லைப் பகுதி

குமுளி எல்லையில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் தமிழக பகுதியில் அமைந்திருந்த தமிழக காவல்துறையின் சோதனைச் சாவடி, கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னர் குமுளி எல்லை அருகே மாற்றப்பட்டது. எல்லை தாண்டிய கடத்தல், குற்றங்களைத் தடுக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழக சோதனைச்சாவடியில் காரை சோதனை செய்யாமல், விசாரிக்கவும் செய்யாமல் விட்டுவிட்டதால், வெறும் நூறு அடி மட்டுமே இடைவெளி உள்ள கேரள சோதனைச் சாவடியில் கேரள போலீஸார் காரை நிறுத்தி சோதனை செய்து, மதுபாட்டில்களை கைப்பற்றியுள்ளனர். இதனால், தேனி மாவட்ட காவல்துறையினர் அப்செட் ஆகியுள்ளனர்.

Also Read: கையேந்தும் குரங்குகள்…செல்ஃபி எடுக்கும் சுற்றுலாப் பயணிகள்... குமுளி சோகம்!



source https://www.vikatan.com/news/crime/liquor-smuggling-kerala-police-arrested-two

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக