பார்சிலோனா என்றவுடன் நம் நினைவுக்கு வருவது கால்பந்துதான். அந்தளவிற்குக் கால்பந்திற்குப் பெயர்போன நகரம் பார்சிலோனா. தற்போது அங்கு ஒரு விளையாட்டு மைதானம் உருவாகவிருக்கிறது. ஆனால், அது கால்பந்து மைதானம் அல்ல, கிரிக்கெட் மைதானம். ''பார்சிலோனாவுல கிரிக்கெட் மைதானமா?'' என வியப்பப்பவர்களுக்கான பதில் ; ஆமாம்... பார்சிலோனாவில்தான்.
சைக்கிளிங் லேன்கள் முதல் பல்வேறு விதமான மைதானங்கள் வரை, பார்சிலோனாவில் எந்த விளையாட்டு வசதியைக் கொண்டுவரலாம் என பார்சிலோனா மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 822 விதமான விளையாட்டு வசதிகள் கொண்ட பட்டியலில், 30 மில்லியன் யூரோ மதிப்பு ஒதுக்கப்பட்ட அந்த திட்டத்திற்கு ஆச்சரியம் அளிக்கும் விதமாக கிரிக்கெட்டைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் பார்சிலோனா மக்கள்.
இந்த ஆச்சரியமான முடிவுக்குக் காரணம் இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்கள்தான். அவர்கள் எடுத்த முயற்சியின் பலனாகத்தான் இந்த முடிவு கிடைத்திருக்கிறது. இந்தப் பெண்களில் 20 வயது நிறைந்த ஹிஃப்ஸா பட் (Hifsa Butt) கூறும் போது, "இவை அனைத்தும் என் உடற்கல்வி ஆசிரியரால் தொடங்கியதுதான்.'நமது பள்ளியில் கிரிக்கெட் கிளப் ஒன்று தொடங்க இருக்கிறோம், யாருக்கெல்லாம் சேர விருப்பம் இருக்கிறது' என்ற அவரது அழைப்பில் இருந்துதான் எல்லாம் ஆரம்பித்தது" என்கிறார்.
கிரிக்கெட்டில் ஆர்வம் இருந்த அவர்களுக்கு விளையாட இடம் இல்லை. கிடைக்கின்ற பேஸ்பால் மைதானங்களில் டென்னிஸ் பால்களை வைத்து விளையாடி இருக்கிறார்கள். பேஸ்பால் சீசன் தொடங்கிய பிறகு அந்த மைதானங்களும் இல்லாமல், உள்ளரங்கங்களில் விளையாடியிருக்கிறார்கள். "நாங்கள் முறையான கிரிக்கெட்டை விளையாட ஆசைப்படுகிறோம். கடினமான பந்துகளில் விளையாட நினைக்கிறோம். 11 பேர் கொண்ட அணியாகப் புல் தரைகளில் விளையாட நினைக்கிறோம். டென்னிஸ் பந்துகளில், உள்ளரங்கங்களில் அல்ல" எனக் கூறுகிறார் ஹிஃப்ஸா.
Also Read: ஜெயவர்த்தனே என்னும் ஜெயங்கொண்டான்: கிளாசிக்கல் கிரிக்கெட் பாஷை பேசிய பேட்ஸ்மேன், தன்னிகரற்ற தலைவன்!
அவர்களது முயற்சியின் பலனாக பார்சிலோனாவில் ஒரு கிரிக்கெட் மைதானம் அமையவிருக்கிறது. ஆனால், 16,000 சதுர அடிகள் கொண்ட தட்டையான இடம் பார்சிலோனாவில் கிடைப்பது மிகவும் கடினம் என்கிறார் பார்சிலோனா இன்டர்நேஷனல் கிரிக்கெட் கிளப்பின் ஆஸ்திரேலிய தலைவரான டேமியன் மெக்முல்லன் (Damien McMullen). பார்சிலோனாவில் மன்ட்ஜூவக் (Montjuic) என்ற மலைப்பகுதியின் மேல் இருக்கும் ஜூலியா டி கேப்மெனி (Julia de Capmany) என்ற இடத்தை கிரிக்கெட் மைதானமாக மாற்றப் பரிசீலித்து வருகிறார்கள்.
source https://sports.vikatan.com/sports-news/barcelona-to-bulit-a-new-cricket-stadium-following-the-voting-process
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக