கள்ளக்குறிச்சி மாவட்டம், கடுவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரோஜா(27)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாக இவருக்கு சமூக வலைதளத்தின் மூலம் ஒரு நபர் அறிமுகமாகியுள்ளார். 'உங்களை பார்க்க வேண்டும்' எனக்கூறி சரோஜாவின் ஜவுளிக்கடைக்கு வந்தாராம் அந்த நபர். சிறிது நேரம் பேசிவிட்டு தான் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பார்ப்பது போல நடித்து, கொள்ளையடித்து சென்றுவிட்டதாக சங்கராபுரம் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 23-ம் தேதி தன் கணவருடன் சென்று புகார் அளித்துள்ளார் சரோஜா.
கள்ளக்குறிச்சி எஸ்.பி. ஜியாயுல் ஹக் ஆலோசனையின் பேரில், டி.எஸ்.பி.ராஜூ மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளது காவல்துறை. இந்நிலையில் கடந்த 29ம் தேதி மாலை 3.00 மணி அளவில் S.குளத்தூர் பகுதியில் வாகன சோதனை நடத்தி வந்துள்ளனர் காவல்துறையினர். அப்போது சங்கராபுரத்திலிருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த காரிலிருந்த ஒரு நபர் காவல்துறையினரை பார்த்தவுடன் இறங்கி தப்பிச் சென்றுள்ளார்.
இரு நபர்களையும் மடக்கிப் பிடித்து விசாரித்துள்ளனர் காவல்துறையினர். அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், பழனி பகுதியை சேர்ந்த விசுவாசகுமார் மகன் மனோஜ்குமார் என்பதும், மற்றொருவர் ராஜேந்திரன் மகன் கௌதம் என்பதும் தெரியவந்துள்ளது. முன்னுக்குப் பின் இருவரும் முரணாக பதில் சொல்லவே காரை சோதனையிட்டுள்ளனர் காவல்துறையினர். காரின் பின்புற சீட்டின் அருகே தங்க சங்கிலியுடன் 6 தங்க காசுகளும் மறைத்து வைக்கப்பட்டிருந்துள்ளது. அதைப் பற்றி கேள்வி எழுப்பிய காவல்துறையினரிடம் கடுவானூர் பகுதியில் சரோஜா எனும் பெண்ணிடம் ஏமாற்றியது பற்றி கூறி ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று மேலும் விசாரணை நடத்திய போது அதிர்ச்சியூட்டும் பல தகவல்களை கூறியுள்ளனர் அந்த முகநூல் மோசடி இளைஞர்கள்.
“என்னுடைய பெயர் மனோஜ்குமார். எனக்கு வயது 25 ஆகுது. நான் B.Sc fire & safety, 2018 ஆம் ஆண்டு முடித்தேன். படித்து முடித்ததும் கை செலவிற்காக பணம் தேவைப்பட்டது. நண்பர்களுடன் இணைந்து குடிப்பழக்கமும் ஏற்பட்டது. குடும்ப கஷ்டத்தினால் பெற்றோர்களால் எனக்கு சில சமயங்களில் பணம் தர முடியவில்லை. அப்போதுதான் பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி பழகி, அவர்களுடன் பாலியல் செயலில் ஈடுபடும்போது வீடியோ எடுத்து மிரட்டினால் பணம் கிடைக்கும் என தோன்றியது. அதன்படி ஃபேஸ்புக்கில் 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் மதுரையை சேர்ந்த ஒரு பெண்ணுடன் ஆசை வார்த்தைகளை கூறி முதன் முறையாக பேசத் தொடங்கினேன்.
முதன் முறையாக 15,000 ரூபாய் பணம் பெற்றேன். அந்த சமயத்தில் தான் என்னுடன் ஆறாம் வகுப்பு வரை படித்த கௌதம் மீண்டும் அறிமுகமானான். கௌதம் ஓட்டிவந்த உறவினரின் எட்டியோஸ் காரை கேட்டு வாங்கிக்கொண்டு, அந்த பெண்ணை அழைத்து சென்று பாலியல் செயலில் ஈடுபட்டேன். பின், சில காரணம் கூறி அவரிடமிருந்து நான்கரை சவரன் தாலியை வாங்கிக்கொண்டு போன் நம்பரை பிளாக் செய்துவிட்டு ஏமாற்றினேன். எட்டியோஸ் காரை நான் சற்று சேதப்படுத்தவே, 'இனி நானே உனக்கு காரை ஓட்டி வருகிறேன்' என கூறி கௌதம் என்னுடன் இணைந்து கொண்டான். இப்படியாக பல பெண்களுடன் சமூக வலைதளம் மூலம் பழகி, ஏமாற்றி வந்தோம். கடந்த வருடம் (2020) மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு போடப்பட்டது. கையில் காசு இல்லாமல் போகவே மீண்டும் சமூக வலைதளம் மூலம் பெண்களிடம் சாட்டிங் செய்ய தொடங்கினோம். இந்த முறை திருமணமான பெண்களை குறிவைத்து பேசத் தொடங்கினோம். ஃபேஸ்புக் மூலம் பழகும் பெண்களிடம் அவர்களுடைய வாட்ஸ்அப் நம்பரை கேட்டு வாங்கி, பின்னர் வீடியோ கால் செய்து பேசுவோம். வீடியோ காலில் பேசும் பொழுது அவர்கள் தங்க செயின் அணிந்திருந்தால் தொடர்ந்து பேசுவோம். இல்லையென்றால் போன் நம்பரை பிளாக் செய்துவிடுவோம்.
அவர்கள் அணிந்திருப்பது தங்க நகையா, கவரிங்கா.. என சகஜமாக கேட்டு உறுதி செய்து கொள்வோம். வீட்டின் அமைவிடம், ஆட்கள் நடமாட்டம், வீட்டில் யார் யாரெல்லாம் இருப்பார்கள் என பேச்சுவாக்கிலேயே தெளிவாக கேட்டு தெரிந்து கொள்வோம். அதன் பின் ஒரு நாளை தேர்ந்தெடுத்து அவர்கள் வீட்டிற்கு செல்வோம். சம்மந்தப்பட்ட பெண்ணுடன் உல்லாசமாக இருந்துவிட்டு, திருப்பி தந்துவிடுவதாக கூறி அவர்களின் நகையை, பணத்தை பெற்றுவந்து விடுவேன். கௌதம் தயாராக வைத்திருக்கும் காரில் தப்பி வந்துவிடுவோம். பின் நம்பரை பிளாக் செய்து விட்டு மீண்டும் பழையபடியே வேறு பெண்களிடம் சாட்டிங் செய்ய தொடங்குவோம். ஒரே காரில் சென்று கொண்டிருந்தால் சிசிடிவி காட்சிகள் மூலம் காவல்துறையிடம் சிக்கி கொள்வோமோ என்ற பயத்தில் மற்றொரு காரையும் பயன்படுத்த தொடங்கினோம். மொத்தமாக இரண்டு கார்களை பயன்படுத்தினோம். சமூக வலைதளம் மூலம் பழக்கமான பெண்ணின் வீட்டிற்கு செல்லும்போது மகேந்திரா காரில் நானும், மற்றொரு எட்டியோஸ் காரில் கௌதமும் ஓட்டி செல்வோம்.
நான் ஓட்டிச்செல்லும் மகேந்திரா காரை மட்டும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகாத வண்ணம் மறைவான இடங்களில் நிறுத்திவிடுவோம். பின், கௌதம் ஒட்டி வரும் எட்டியோஸ் காரின் மூலம் இருவரும் சம்பந்தப்பட்ட அந்த பெண்ணின் வீட்டிற்கு செல்வோம். ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் என்பதால் பெரும்பாலும் மதிய நேரத்தையே தேர்ந்தெடுப்போம். பெண்களை ஏமாற்றிவிட்டு நகை, பணத்தோடு வரும் பொழுது, கௌதம் தயாராக காரை ஸ்டார்ட் செய்து வைத்திருப்பான். அதில் தப்பி வந்துவிடுவோம். அந்த காரையும் சிசிடிவி காட்சிகளில் படாதபடி ஒரு இடத்தில் மறைமுகமான விட்டுவிடுவோம். பின், நான் முன்பே மறைவான இடத்தில் நிறுத்தி வைத்திருந்த மகேந்திரா காரில் இருவரும் வீட்டிற்கு வந்துவிடுவோம். ஓரிரு தினங்களில் அந்த எட்டியோஸ் காரை எடுத்து வந்துவிடுவோம். இப்படி செய்தால் காவல்துறையால் எங்களை கண்டுபிடிக்க முடியாது என நம்பியிருந்தோம்.
அந்த வரிசையில் தான் சரோஜா என்பவரும் பேஸ்புக் மூலம் அறிமுகமானார். அவரிடம் பேசி, பழகிய பின் அவரை நேரில் சந்திக்க வருவதாக அவரிடம் தொலைபேசியில் தெரிவித்தேன். பின், நானும் என் நண்பன் கௌதமும் வழக்கம்போல் இரண்டு கார்களில் சென்றோம். அவருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன். இருவரும் செல்ஃபி எடுத்துக் கொண்டு, பின்னர் பாலியல் உறவில் ஈடுபட்டோம். அப்போது, 'உன் தாலியை பார்த்தால் உன்னுடைய கணவன் ஞாபகம் வருகிறது' எனக் கூறி அதை கழற்றி வைக்க சொன்னேன். சரோஜாவும் கழற்றி வைத்தார். பின் அவர் பாத்ரூம் சென்றவுடன் நான் அந்த நகைகளை ஏமாற்றி எடுத்துக் கொண்டு வந்துவிட்டேன். அவருடைய போன் நம்பரையும் பிளாக் செய்து விட்டேன். லோன் கட்டாததால் எட்டியோஸ் காரை பைனான்ஸ் கம்பெனி எடுத்துச் சென்றுவிட்டது. சில நாட்களுக்கு முன் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பெண்ணுடன் சமூகவலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அவரை ஏமாற்றி விட வேண்டும் என்றுதான் 29ம் தேதி மகேந்திரா காரில் நானும், எனது நண்பன் கௌதமும் சென்று கொண்டிருந்தோம். அப்போது தான் நீங்கள் எங்களை பிடித்து விட்டீர்கள்" என கூறியுள்ளனர். இதை கேட்ட போது தாங்களே அதிர்ந்து போய்விட்டதாக கூறுகின்றனர் காவல்துறையினர்.
source https://www.vikatan.com/news/crime/youths-arrested-for-cheating-on-women-through-facebook
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக