Ad

செவ்வாய், 11 மே, 2021

விழுப்புரம்: 'தன் வாழ்க்கை தொடங்கிய டீ கடையிலிருந்தே அமைச்சர் பணியையும் தொடங்கிய கே.எஸ்.மஸ்தான்.'

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. கடந்த 7ஆம் தேதி அமைச்சரவையில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களான க.பொன்முடி உயர் கல்வித்துறை அமைச்சராகவும், கே.எஸ்.மஸ்தான் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

க.பொன்முடி, கே.எஸ்.மஸ்தான்

திமுக கட்சியில் மாநில பொறுப்பிலிருக்கும் க.பொன்முடி, அமைச்சராக இருந்த அனுபவம் உள்ளவர். ஆனால், ஒரு முறை மட்டுமே எம்.எல்.ஏ வாக இருந்த அனுபவம் கொண்ட கே.எஸ்.மஸ்தானுக்கு இம்முறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

யார் இந்த மஸ்தான்?!

செஞ்சி, தேசூர் பாட்டை பகுதியைச் சேர்ந்த இவருக்கு வயது 66. மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அனைவருமே திருமணமானவர்கள். செஞ்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த இவர் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். செஞ்சி பகுதி டீ கடை ஒன்றில் வேலை செய்து தன் வாழ்க்கையைத் தொடங்கியவர் தான் இன்றைய சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர். பின்னர் டீ மாஸ்டராக மாறிய இவர், அரசியலில் ஈடுபடவும் தொடங்கினார்.

Also Read: ஹாட்ரிக் வாய்ப்பை இழந்த சி.வி.சண்முகம்... அமைச்சர் ரேஸில் பொன்முடி! - விழுப்புரம் மாவட்ட நிலவரம்

தனது 21-வது வயதில் (1976) தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டுள்ளார். விழுப்புரம், ஒருங்கிணைந்த தென் ஆற்காடு மாவட்டமாக இருந்தபோது செயலாளர் ராமச்சந்திரனுடன் நிழலாகப் பயணித்தவர். செஞ்சி பேரூராட்சி செயலாளர் பதவி தொடங்கி படிப்படியாக வளர்ச்சிக்கண்ட இவர், 2014 ஆம் ஆண்டு விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளராக உயர்ந்தார். 1986 முதல் 2016க்கு இடைப்பட்ட காலத்தில் ஐந்து முறை செஞ்சி பேரூராட்சித் தலைவராக (Town chairman) பதவியில் இருந்துள்ளார். விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரான இவருக்கு, 2016 சட்டமன்றத் தேர்தலில் செஞ்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கியது திமுக தலைமை. அந்தத் தேர்தலில் பெற்ற வெற்றியின் மூலம் எம்.எல்.ஏ-வாக தனது பயணத்தைத் தொடங்கிய மஸ்தான், 2021 சட்டமன்ற தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்டார். வாக்கு சேகரிக்க செல்லும்போது மாட்டு வண்டியில் செல்வது, பழமையை மறக்காமல் டீ க்கடையில் நின்று டீ போடுவது என வித்தியாசமான அணுகு முறையைக் கையாண்டவர்.

அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த அமைச்சர்.

எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளரை சுமார் 35,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றியும் பெற்றார். தலைமையின் அமைச்சரவை பட்டியலை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த கே.எஸ்.மஸ்தானுக்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் பதவி அறிவிக்கப்பட்டது. கடந்த 7-ஆம் தேதி அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்ட இவர், செஞ்சி தொகுதியில் முதன் முறையாக நேற்று (10.05.2021) பணியைத் துவங்கியுள்ளார். பணியைத் தொடங்குவதற்கு முன்பாக, தான் முன்னாளில் பணியாற்றிய பேரூராட்சி அலுவலகத்தைப் பார்வையிட்டு வந்துள்ளார். பின்னர், தான் பயணப்பட்டு வந்த பாதையை நினைவுக்கூறும் விதமாக செஞ்சி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள தனது தம்பியின் டீக்கடைக்கு சென்று தன் கையால் டீ போட்டு தன்னுடன் வந்த நபர்களுக்கு கொடுத்துள்ளார். அதன் பின்னரே, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்து தன் அமைச்சர் பணியைத் தொடங்கியுள்ளார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/political-journey-of-minister-masthaan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக