Ad

செவ்வாய், 11 மே, 2021

குஜராத்தில் மாட்டு சிறுநீர் மூலம் கொரோனா சிகிச்சை, புதிய நோய்கள் தாக்கும் அபாயம்... என்ன நடக்கிறது?

குஜராத் மாநிலத்தில் வடக்குப் பகுதியில், மாடுகளைப் பராமரிக்கும் கோசாலைக்குள் கொரோனா சிகிச்சை மையம் அமைத்து, பசு மாட்டுப் பால், கோமியம் ஆகியவற்றின் மூலம் தயாரிக்கப்பட்ட மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்குகிறார்கள். அந்த மாநிலத்தில், பனஸ்கந்தா மாவட்டத்தில் இருக்கும் திடோடா கிராமத்தில்தான் இந்த வினோதமான கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. மாடுகளைப் பராமரிக்கும் இடமான கோசாலையை, இப்போது கொரோனா சிகிச்சை மையமாக மாற்றியுள்ளார்கள்.

பசு மாடுகள்/ Representational Image

அந்த இடத்துக்கு தற்போது, ``வேதலக்‌ஷனா பஞ்சகவ்யா ஆயுர்வேத கோவிட் தனிமைப்படுத்தல் மையம்" என்று பெயரிடப்பட்டுள்ளது. தீஸா தாலுகாவைச் சேர்ந்த ஏழு கோவிட் நோயாளிகளுக்குத் தற்போது அவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். இதுகுறித்துப் பேசியுள்ள இந்த இடத்தின் அறங்காவலர் மோகன் ஜாதவ், ``இந்த சிகிச்சை மையத்தை நாங்கள் மே 5-ம் தெதியன்று தொடங்கினோம். குறைந்த அறிகுறி இருக்கும் கோவிட்-19 நோயாளிகளுக்கு இங்கு சிகிச்சையளிக்கிறோம். பசுவின் பால், நெய், சிறுநீர் ஆகியவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளை அவர்களுக்குக் கொடுக்கிறோம். இந்த நோயாளிகள், கோவிட்-19 பாசிட்டிவ் என்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டவர்கள்.

பஞ்சகவ்யா மூலம் கோவிட் அறிகுறிகளுக்கு நாங்கள் சிகிச்சையளிக்கிறோம். மேலும், பசுவின் சிறுநீரையும் சில மூலிகைகளையும் இதில் பயன்படுத்துகிறோம். பிறகு, இருமல் பிரச்னைக்கு நாங்கள் பசுவின் சிறுநீரை அடிப்படையாக வைத்து தயாரித்த மருந்தைக் கொடுக்கிறோம். நெல்லிக்காய் மூலம் தயாரிக்கப்பட்ட, நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கக்கூடிய `சவன்ப்ரஷ் (chawanprash)' என்ற மருந்தையும் கொடுக்கிறோம்" என்று கூறியுள்ளார்.

Cow

இந்த மையத்தில், இரண்டு ஆயுர்வேத மருத்துவர்கள் இருக்கின்றனர். அதோடு, தேவை இருப்போருக்கு அலோபதி மருந்துகளும் பரிந்துரைக்கப்படுகின்றன. அதற்கென இரண்டு எம்.பி.பி.எஸ் படித்த மருத்துவர்களையும் நியமித்துள்ளார்கள். மேலும், நோயாளிகளுக்கு இலவசமா க சிகிச்சையளிக்கப்படுகிறது. இந்த மாதத்தின் தொடக்கத்தில், கிராமப்புறங்களில் கோவிட் பாதுகாப்பு மையங்களை அமைத்து, கொரோனா அறிகுறிகளோடு இருப்பவர்களை அங்கு தனிமைப்படுத்த குஜராத் அரசு அனுமதியளித்தது. அதில் ஒன்றாக அறியப்படும் கோசாலை, தங்களிடம் தகவல் கொடுத்திருப்பதாகவும் ஆயுர்வேத முறையில் சிகிச்சையளிக்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாகவும் பனஸ்கந்தா மாவட்ட ஆட்சியர் ஆனந்த் படேல் தெரிவித்துள்ளார்.

இங்கு மட்டுமல்ல, இந்தியாவின் பல பகுதிகளில் பசு மாட்டின் சாணத்தையும் சிறுநீரையும் குடித்தால் கொரோனா குணமாகிவிடும் என்று கூறி பல்வேறு சிகிச்சைகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு பா.ஜ.க பிரமுகர்களே கொரோனா குணமடைய பசு மாட்டு சிறுநீரைக் குடியுங்கள் என்று பொதுவெளியில் பசுவின் சிறுநீருக்காக பிரசாரம் செய்து வருகிறார்கள். அவர்களின் கூற்றெல்லாம், இவை நம்முடைய நோய் எதிர்ப்பாற்றலை பலப்படுத்தி, கொரோனா வைரஸை கொன்றுவிடும் என்பதுதான்.

கடந்த ஆண்டு மார்ச் 18-ம் தேதியன்று, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், ஒரு ஊடகவியலாளர் பசுவின் சிறுநீர் கொரோனா தொற்றுக்கு மருந்தாகும் என்று சொல்லப்படுவதைப் பற்றி கேள்வியெழுப்பினார். மேலும், சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கும் ஆயுஷ் அமைச்சகத்துக்கும் இதில் ஏதேனும் முரண்பட்ட கருத்துகள் உள்ளனவா என்று கேட்டார். ஆனால், இது வெறும் ஒரு கருதுகோள் மட்டுமே என்று கூறிய அதிகாரிகள், மேற்கொண்டு அந்தக் கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டனர்.

Health workers conduct COVID-19 antigen tests in New Delhi/ Representational Image

இதுவரை அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும்கூட, ஒருவேளை மாட்டுச் சாணத்துக்கோ, சிறுநீருக்கோ நோய் நுண்ணுயிர்க்கொல்லியாகச் செயல்படும் திறன் இருக்கலாம். ஆனால், கோவிட் தொற்றுநோயைக் குணப்படுத்த உலகளாவிய அளவில் மருந்தே இல்லையென்று கூறப்படும் நிலையில், பசு மாட்டின் சிறுநீர் அதற்கு மருந்தாகும் என்று சொல்லப்பட்டால், அது அறிவியல்பூர்வ ஆய்வுகளின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டிருக்க வேண்டும். நாடு முழுக்க ஆயிரக்கணக்கான மக்கள் இந்தத் தொற்றுக்கு பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். லட்சக்கணக்கானவர்கள் நோய்வாய்ப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது உண்மையாகவே மருந்தாகச் செயல்படுமெனில், மத்திய அரசு இதன்மீது கவனம் செலுத்தி, இதற்கான ஆய்வை முடுக்கிவிட்டு, உடனடியாகப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.

``கோவிட் தொற்றுநோயைக் குணப்படுத்தவென்று, குறிப்பிட்டு எந்த மருந்தும் இல்லை" என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. ஆனால், இந்தியாவில் பல்வேறு தரப்பினர் பசுவின் சிறுநீரை கொரோனாவுக்கு மருந்தாகப் பரிந்துரைத்துக் கொண்டிருக்கின்றனர்.

குஜராத் கோசாலை மட்டுமன்றி இன்னும் சில குழுவினர் சொல்வதுபோல் இதெல்லாம் கொரோனாவை குணப்படுத்தும் என்பதற்கு இன்றுவரை அறிவியல்பூர்வமாக எந்தவித ஆதாரமும் இல்லை. சுகாதாரத்துறை வல்லுநர்களும் ஆராய்ச்சியாளர்களும் பசுவின் சிறுநீருக்கோ கோமியத்துக்கோ பஞ்சகவ்யாவுக்கோ, இப்படி எவ்விதத் திறனும் இல்லை என்று தொடர்ந்து மறுத்து வருகின்றனர். இருப்பினும், கொரோனா தொற்றுப் பேரிடர் நேரத்தில், இத்தகைய வதந்திகளும் அதுசார்ந்த சிகிச்சைகளும் ஆங்காங்கே தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அறிவியலாளர்கள் இதை மீண்டும் மீண்டும் மறுத்து வந்தாலும்கூட, மத்திய அரசு, இந்தப் பிரச்னை குறித்து வெளிப்படையாகக் கருத்து தெரிவிக்கவோ மக்களின் குழப்பத்தைத் தீர்க்கவோ இதுவரை முனையாமல் இருப்பது அறிவியலாளர்கள் மத்தியில் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

Cows

``பசுமாட்டின் எச்சங்கள் கொரோனாவை குணப்படுத்துமா இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும், அதிலேயே வேறு வகையானதொரு கொரோனா வைரஸ் இருக்கும். அதனால் எந்த நோயும் மக்களுக்கு வந்துவிடக் கூடாதே" என்று கடந்த ஆண்டு பசுவின் சிறுநீர் கொரோனாவுக்கு மருந்தாவது குறித்த வதந்தி தொடங்கியபோதே, இந்திய வைராலஜி கூட்டமைப்பைச் சேர்ந்த முனைவர் ஷைலேந்திர சக்சேனா தனது அச்சத்தை வெளிப்படுத்தினார். மேலும், ``பசுவின் சாணம் மற்றும் சிறுநீருக்கு இருக்கும் மருத்துவ குணங்கள் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டால் நிச்சயம் அதன் முடிவுகள் வரவேற்கப்படும்" என்றும் தெரிவித்தார்.

கொரோனா பெருந்தொற்றுப் பரவல் தொடங்கியது முதலே, பசு மாட்டுச் சிறுநீரை வைத்துப் பரப்பப்படும் செய்திகளும் செயல்பாடுகளும் தொடர்ந்துகொண்டுதான் வருகின்றன. கடந்த மே 9-ம் தேதியன்றுகூட, அகமதாபாத்தில், மாட்டு சாண தெரபி என்ற பெயரில் உடல் முழுக்க சாணத்தைப் பூசிக்கொண்டு, சிலர் இருந்துள்ளனர். இந்நிலையில், தற்போது குஜராத் மாநிலத்தில் கோசாலைவின் செயல்பாடுகளும் பொதுமக்களிடையே குழப்பத்தை விளைவிக்கின்றன. இதைத் தொடர்ந்து இந்திய மருத்துவ சங்கம் அறிவிப்பு ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது.

மருத்துவமனைகள்/ Representational image

Also Read: மருத்துவ குணங்கள் கொண்டதா மாட்டுக் கோமியம்... அமெரிக்கா பேடன்ட் வாங்கியது உண்மையா?

அதில், இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் ஜெயலால், ``பசு மாட்டுச் சாணமோ சிறுநீரோ கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிராகச் செயல்படும் என்பதற்கு எவ்வித மருத்துவ ஆதாரங்களும் கிடையாது. இது முற்றிலும் வெறும் நம்பிக்கை அடிப்படையிலானது" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதுபோன்ற நடவடிக்கைகளால், கோவிட் தொற்றுநோயின் பரவல் தீவிரமடைவது மட்டுமன்றி மாடுகளிடமிருந்து பரவக்கூடிய மேலும் பல நோய்களும் பரவக்கூடும் என்பதால், சிலர் பயன்படுத்துவதை நம்பிவிட வேண்டாம் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். மாட்டின காசநோய், லெப்டோஸ்பிரோசிஸ், புருசெல்லோசிஸ் போன்ற நோய்கள் மாட்டின் எச்சம், சிறுநீர் ஆகியவற்றிலிருந்து பரவக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனாவுக்கு மருந்தாகும் என்று சிலர் பரப்பும் ஆதாரமற்ற வதந்திகளை நம்பி, மக்கள் இந்த நோய்களுக்கு ஆளாகிவிடக் கூடாது என்று மருத்துவர்கள் அஞ்சுகின்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/healthy/doctors-warned-about-treating-with-covid-19-patients-with-cow-urine-in-gujarat

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக