Ad

வியாழன், 6 மே, 2021

`ஊழல் குற்றச்சாட்டு; ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது?!’ - சூரப்பாவுக்கு விசாரணை ஆணையம் நோட்டீஸ்

அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் என்ற பணியில் அமர்ந்தது முதல் ஓய்வு பெற்றது வரையிலும் தொடர்ச்சியாக பல முறைகேடுப் புகார்களில் சிக்கி சர்ச்சைக்குள்ளானவர், சூரப்பா. இவர், அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 11-ம் நாள், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தால் நியமிக்கப்பட்டவர்.

பணியில் அமர்த்தப்பட்டது முதலே இவர்மீது பல சர்ச்சைகள் எழுந்தது. தமிழகத்தில் தகுதியானவர்கள் பலர் இருக்க கர்நாடாகாவைச் சேர்ந்த சூரப்பாவை நியமித்தது ஏன் என்ற கேள்வி தமிழக அரசியல் செயற்பாட்டாளர்களால் முதலில் கேள்வி எழுப்பப்பட்டது. அதன் பின்னர், தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமலேயே தன்னிச்சையாக செயல்பட்டு, அண்ணா பல்கலைக் கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். இதனால் தமிழக அரசுடன் நேரடியான மோதல்போக்கை கடைபிடித்தார்.

சூரப்பா

தொடர்ச்சியாக, அண்ணா பல்கலையின் பணி நியமனங்களில் பணம் பெற்றது, தகுதியற்றவர்களை பணியில் சேர்த்தது, தனது மகளை முறைகேடாக பணியில் அமர்த்தியது, கல்லூரிகளுக்கு பொருட்கள் வாங்கியதில் முறைகேடு, இட ஒதுக்கீடு மறுப்பு என அடுக்கடுக்கான புகார்கள் சூரப்பா மீது தொடர்ந்த வண்ணம் இருந்தது. குறிப்பாக சூரப்பா தான் பதவியில் இருக்கும்போது சுமார் 250 கோடி அளவுக்கு ஊழல் செய்தார் என்ற குற்றச்சாட்டு தீவிரமாக எழுந்தது.

இதன்காரணமாக, மறைந்த சமூக சேவகர் டிராஃபிக் ராமசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் செயற்பாட்டாளர்கள் சூரப்பவை பணிநீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கையை முன்வைத்தும், நீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் தொடர்ந்தனர். இதனிடையே தமிழக அரசு கடந்த 2020-ம் ஆண்டு, சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தது.

Also Read: திருச்சி:`சூரப்பா விவகாரத்தில் மர்மங்கள் நிலவுகின்றன!'‍ - சொல்கிறார் கார்த்தி சிதம்பரம்

இந்நிலையில், மூன்றாண்டுகள் கடந்து பணிநிறைவடையும் நிலையில், தமிழக அரசால் பணிநீட்டிப்பு அறிவிப்பு நடக்கும் என்று எதிர்பார்த்த சூரப்பாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால், கடந்த 2021 ஏப்ரல் மாதம் 11-ம் நாள் பணி ஓய்வு பெற்றார். அடுத்த கணமே, “தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்து, விசாரணைக் கமிஷனுக்கு தடை விதிக்க வேண்டும்” எனக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும், “நான் பணி ஓய்வு பெற்றுவிட்டேன். எனவே, என்னை விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையம் செல்லாது” எனவும் முறையற்று வாதிட்டார்.

சூரப்பா

இருப்பினும், விசாரணை ஆணையம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சூரப்பா ஊழல் குற்றம் புரிந்ததற்கான சாத்தியமான வாய்ப்புகள் புலப்படவே, விசாரணை தொடர்ந்து நடந்தது. எனவே, "சூரப்பா ஓய்வு பெற்றாலும், எங்கு சென்றாலும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்" என்று கலையரசன் தலைமையிலான விசாரணைக்குழு தீர்க்கமாக தெரிவித்தது. இந்நிலையில், அண்ணா பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு, கலையரசன் தலைமையிலான விசாரணைக்குழு தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது. `உங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் புகார்கள் கொண்டு உங்கள் மேல் என நடவடிக்கை எடுக்க கூடாது? என கேட்கப்பட்டு, ஒரு வாரத்திற்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. மேலும், சூரப்பாவின் விளக்கத்தை அடிப்படையாகக்கொண்டு அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும், அவர் அளிக்கும் பதில் திருப்திகரமாக இல்லாதபட்சத்தில் நேரில் அழைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.

சூரப்பாவின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையிலும், அவர் இன்னும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தின் வீட்டில் தான் வசித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: `சங்கி’, `பி டீம்’, ஆவேசம்... சூரப்பா விவகாரத்தில் அறத்தின் பக்கம்தான் நிற்கிறாரா கமல்?



source https://www.vikatan.com/social-affairs/crime/investigation-commission-sends-notice-to-surappa-in-scam-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக