Ad

வியாழன், 6 மே, 2021

திருச்சி : `எல்லாம் 15,16 வயசு பசங்க' - பைக் ரேஸ் தகராறில் இளைஞரைக் கொன்ற சிறுவர்கள்!

திருச்சி மேலகல்கண்டார் கோட்டையில் பைக் ரேஸ் விடுவதில் இருதரப்பினருக்குள் நடந்த பிரச்னையில் மணிகண்டன் என்ற இளைஞரைக் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருச்சி விமான நிலையம்

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர், அருகேயுள்ள மேலகல்கண்டார் கோட்டை சேர்ந்தவர் மணிவாசகம். இவரது தந்தை அதே பகுதியில் லோடுமேனாக வேலை பார்த்து வருகிறார். கடந்த மே 4-ம் தேதி இரவு மேலகல்கண்டார் கோட்டை ஆலத்தூர் பாலத்தின் அருகே மணிவாசகம் நடந்து சென்ற போது திடீரென சுற்றி வளைத்த பத்து பேர்கொண்ட மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் மணிவாசகத்தின் முகம், கால் மார்பு பகுதியில் சரமாரியாக வெட்டினர்.

அக்கம் பக்கத்தில் உள்ள மக்கள் சத்தம் போட எந்தவித பயமுமின்றி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். ரத்த வெள்ளத்தில் மணிவாசகம் உயிரிழந்தார்.

மணிவாசகத்தின் உறவினர்கள் மற்றும் அவரது நண்பர்கள், கொலையாளிகள் யார் என உடனடியாக போலீஸார் விசாரணை நடத்தி, கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்தோடு உடலை அங்கிருந்து எடுக்க விடாமல் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கொலை செய்யப்பட்ட மணிவாசகம்

இதையடுத்து போலீஸார் உறவினர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கொலையாளிகளை விரைவில் கைது செய்வோம் என உறுதி அளித்ததின் பேரில் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் படுகொலை செய்யப்பட்ட மணிவாசகனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகத் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலைக்கான காரணம் குறித்து மணிவாசகத்தின் பெரியப்பா மகன் கார்த்தியிடம் பேசினோம். ``பழக்க வழக்கத்துக்காக எதையும் செய்யக்கூடியவன் மணிவாசகம். எங்கள் பகுதியில் அடிக்கடி பைக் ரேஸ் விடுவது வழக்கம்.

மணிவாசகத்தின் பெரியப்பா மகன் கார்த்தி

அந்த வகையில் பைக் ரேஸ் விடும் பொழுது மணிவாசகத்துக்கும், ஸ்ரீநாத் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. அதனை மனதில் வைத்திருந்த ஸ்ரீநாத் அடிக்கடி மணிவாசகத்திடம் பிரச்சனையில் ஈடுபட்டான். ஒருநாள் பிரச்னைக்கு வந்த போது மணிவாசகம் கையில் வைத்திருந்த கத்தியால் அவரது விரலை வெட்டிவிட்டான்.

பின்பு இருதரப்புக்கும் இருந்த பிரச்னை, மோதல் போக்காக வெடித்தது. பின்பு மணிக்கவாசகம், ஶ்ரீநாத்தின் குடும்பத்தாரிடம் மன்னிப்பும் கேட்டுவிட்டான். ஆனால், ஸ்ரீநாத் அதனை மனதில் வைத்துக்கொண்டு 10 பேர் கொண்ட கும்பலை வைத்து இரவு நேரத்தில் கொடூரமாக வெட்டி படுகொலை செய்திருக்கிறான்” என்று கதறி அழத்தொடங்கினார்.

Also Read: புதுக்கோட்டை: கல்லூரி மாணவி கொலை; நகைக்காக அண்ணனே தங்கையைக் கொன்றது அம்பலம்!

சமூக ஆர்வலர் மூர்த்தி என்பவரிடம் பேசினோம்.``நீயா நானா, யார் பெரிய ரவுடி என்கிற அதிகார போட்டியில் இந்த கொலை நடந்துள்ளது. இருவருக்குள் நடந்த பிரச்னைகளை மனதில் வைத்துக்கொண்டு 16 வயது நிரம்பிய சின்னச் சின்ன பசங்களை வைத்து வெட்டியிருக்கிறார்கள். அதுவும் அந்த பசங்க பயங்கர தெளிவா ஸ்கெட்ச் போட்டு வெட்டியிருக்கிறார்கள். அதுக்குக் காரணம் கஞ்சா.

மணிவாசகம்

இந்த பகுதிகளில் கஞ்சா அதிகமாக புழங்கிறது. இது போலீஸாருக்கும் நன்கு தெரியும். ஆனால் போலீஸார் நடவடிக்கை எடுப்பதில்லை. இங்குள்ள ரவுடிகளோடு பல போலீஸார் தொடர்பில் இருக்கிறார்கள். இப்படி இருந்தால் எப்படி சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியும். மக்கள் நடமாடும் சாலையில் எந்தவித பயமும் இன்றி பத்துபேர் கொண்ட கும்பல் ஒருவனை வெட்டுகிறது என்றால் இந்த சமுதாயம் எங்கே செல்கிறது என்று நீங்களே நினைத்துப் பாருங்கள். போலீஸார் கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கொலைகள் தடுக்கப்படும். இல்லையேல் கேள்விக்குறிதான்” என்று ஆவேசப்பட்டார்.

வழக்கை விசாரித்துவரும் காவலர்களிடம் பேசினோம். ``இக்கொலை சம்பவம் தொடர்புடைய ஆறு பேர் நேற்று தஞ்சை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். முக்கிய குற்றவாளியான இரண்டு பேரை நாங்கள் கைது செய்து விசாரித்துக்கொண்டிருக்கிறோம். அவர்களிடம் முழுமையாக விசாரித்துவிட்டு உங்களிடம் பேசுகிறோம்" என்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/crime/trichy-youngster-killed-after-clashes-in-bike-race

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக