Ad

ஞாயிறு, 23 மே, 2021

‘’கிழிந்த ஷூவை ஒட்டக்கூட பணம் இல்லையே’’ - சர்வதேச கிரிக்கெட்டருக்கு ரசிகர்களால் கிடைத்த பேருதவி!

90-களில் இந்தியா உள்பட பல சர்வதேச கிரிக்கெட் அணிகளுக்கு கடும் போட்டியாக இருந்த அணி ஜிம்பாப்வே. ஆண்டி ஃப்ளவர், ஹீத் ஸ்ட்ரீக், அலிஸ்டர் கேம்பெல், ஹென்றி ஒலாங்கோ என பிரபலமான பல வீரர்கள் அந்த அணியில் இருந்தனர். ஆனால், உள்நாட்டு அரசியல் பிரச்னைகள் உள்பட பல்வேறு காரணங்களில் ஜிம்பாப்வே கிரிக்கெட் கட்டமைப்பு சிதைந்துவிட்டது. தற்போது மிகச் சுமாரான அணிகளில் ஒன்றாக இந்த அணியிருப்பதால் வீரர்கள் யாருக்கும் பெரிய அளவில் சம்பளம் இல்லை. அணிக்கு சரியான ஸ்பான்சர்களும் இல்லை. இதனால் ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர்கள் மிகவும் வறுமையில் இருக்கிறார்கள்.

ரையான் பர்ல்

இந்த சூழலில்தான் நேற்று ட்விட்டர் சமூக வலைதளத்தில் ரையான் பர்ல் எனும் ஸிம்பாப்வேயின் இளம் கிரிக்கெட் வீரர் ட்வீட் ஒன்றைப் பதிவு செய்தார். அதில் ''எங்களுக்கு ஸ்பான்சர் கிடைக்க வாய்ப்பு எதுவும் இருக்கிறதா... இருந்தால் ஒவ்வொரு தொடர் முடிந்ததும் எங்கள் காலணிகளை பசையால் ஓட்டி விளையாட வேண்டிய அவசியம் இருக்காது'' என ட்வீட் செய்திருந்தார்.

ட்விட்டரில் ரையான் பர்ல் பதிவு செய்த போட்டோ

ரையான் பர்லின் இந்த ட்வீட்டை பார்த்ததும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளன் மேக்ஸ்வெல் உள்ளிட்ட பல்வேறு நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களும், கிரிக்கெட் ரசிகர்களும் தொடர்ந்து இதை ரீ ட்வீட் செய்தனர். பலரும் பெரிய நிறுவனங்களுக்கு இந்த ட்வீட்டை டேக் செய்தனர். ரையான் பர்ல் நேற்று மாலை இந்த ட்வீட்டை பதிவு செய்ய அடுத்த சில மணி நேரங்களிலேயே காலணிகள் தயாரிப்பு நிறுவனமான PUMA நிறுவனம், ''ஷூ ஒட்டுவதற்கான பசை இனித் தேவையில்லை. இனி நீங்கள் எங்களிடம்'' என ட்வீட் செய்ய கிரிக்கெட் உலகமே நெகிழ்ந்து போனது.

உடனடியாக PUMA-வின் இந்த செயலைப் பாராட்டி இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். ரசிகர்கள் மீண்டும் ரையான் பர்லுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கும் பூமா நிறுவனம் உதவ வேண்டும் என ட்வீட் செய்ய, ''ஒரே குடும்பம்'' என ட்வீட் செய்திருக்கிறது பூமா நிறுவனம்.

ரையான் பர்லின் ட்வீட்டைப் பார்த்து பல நிறுவனங்கள் கண்டு கொள்ளாமல் இருந்த நிலையில் முதல் ஆளாக உதவ முன்வந்த பூமா நிறுவனத்தைப் பலரும் பாராட்டி வருகின்றனர். அதேசமயம் இஸ்ரேல் கால்பந்து அணிக்கு பூமாதான் ஸ்பான்சர். பாலஸ்தீனியர்களைக் கொல்லும் இஸ்ரேல் அணியின் ஸ்பான்சரான பூமாவின் உதவியை ரையான் பர்ல் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் புறக்கணிக்க வேண்டும் என்கிற விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன.



source https://sports.vikatan.com/cricket/zimbabwe-cricketer-ryan-burl-got-shoe-sponsorship-after-his-emotional-tweet

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக