Ad

ஞாயிறு, 9 மே, 2021

புதுச்சேரி: `இன்று நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல்!’ - எவற்றுக்கெல்லாம் அனுமதி?!

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை புதுச்சேரியில் தீவிரமாக பரவி வருகிறது. அதையொட்டி மே மாதம் 1-ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டிருந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் முடிவடைகிறது. ஆனாலும் கொரோனா தொற்றின் தீவிரம் குறையாததால் பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், சில தளர்வுகளுடனும் மே 24-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. அந்த ஊரடங்கு உத்தரவில், ”கடற்கரை, பூங்காக்கள், அருங்காட்சியகம், நூலகங்கள், சமூக நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள், விளையாட்டு கூடங்கள், பொழுதுபோக்கு இடங்கள், கல்வி நிறுவனங்கள் மூடப்படும். ஆளுநர் மாளிகை, சட்டப்பேரவை, தலைமைச் செயலகம், பேரிடர் மேலாண்மை, சுகாதாரம், காவல், ஊர்க்காவல், மாவட்ட நிர்வாகம், தீயணைப்பு, சிறை, உள்ளாட்சி, நலத்துறை, பொதுப்பணி, விவசாயம், வனம், கால்நடை, தொழிலாளர் நலன், தொழிற்சாலைகள், பொதுவிநியோகம், போக்குவரத்து, கருவூலம், நிதி, மீனவர் நலன் உள்ளிட்ட அத்தியாவசிய அரசு அலுவலகங்களைத் தவிர மற்ற அரசு அலுவலகங்கள் மூடப்பட்டிருக்கும்.

புதுச்சேரி ஊரடங்கு

கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி இவற்றில் ஊழியர்கள் பணியாற்றுவர். கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாக்கள் நடத்த தடை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே தங்கி இருக்க வேண்டும். தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. காய்கறி கடைகள், மளிகை கடைகள், பழங்கள் மற்றும் இறைச்சி, மீன் கடைகள் மதியம் 12 மணி வரை மட்டும் திறக்க வேண்டும். அதேபோல அந்த கடைகளில் குளிர்சாதன வசதியை பயன்படுத்த கூடாது. வணிக வளாகங்கள், மால்களை மூட வேண்டும். வழக்கமான பராமரிப்பு பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. வீடுகளுக்கு சென்று உணவு விற்பனை செய்யலாம். உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி கிடையாது. பார்சல் மட்டுமே வழங்க வேண்டும். ஹோட்டல் மற்றும் விடுதிகளில் தங்கியுள்ளவர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளுக்கு சென்று உணவு வழங்க வேண்டும்.

பால் விற்பனை மையம், மருத்துவமனைகள், மருத்துவ ஆய்வகங்கள், மருந்தகங்கள், கண் மருத்துவர்கள், மருத்துவ உபகரணங்கள், செய்தித்தாள்கள் விநியோகம், ஆம்புலன்ஸ், அனைத்து அவசர கால மருத்துவ சேவைகளும் வழக்கம் போல் செயல்படலாம். பேருந்துகள், ஆட்டோ, டாக்சிகள் உள்ளிட்ட அரசு, பொது, தனியார் பயணிகள் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சரக்கு போக்குவரத்து, மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகள், திருமணம், இறப்பு, இறுதிச் சடங்கு, நேர்காணல், தேர்வுகளுக்கு அனுமதி உண்டு. அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்படும். ஆனால் அத்தியாவசிய பூஜைகள், பிரார்த்தனைகள், சடங்குகளை பாதிரியார்கள் மற்றும் ஊழியர்கள் மட்டும் நடத்தலாம்.

கொரோனா ஊரடங்கு

மதம் தொடர்பான திருவிழாக்கள், கூட்டங்கள் நடத்த தடை. திருமணத்தில் 25 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் 20 பேர் மட்டும் கலந்து கொள்ளலாம். தொழிற்சாலைகள் செயல்படலாம். ஏ.டி.எம். நிறுவனங்கள், தொலை தொடர்பு நிறுவனங்கள், இணையதள சேவை வழங்கும் நிறுவனங்கள் சேவை வழக்கம் போல் செல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்படும். அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் நபர்கள் உரிய அடையாள அட்டை அணிய வேண்டும். பிராந்திய நிர்வாகிகள் தேவைப்பட்டால் உள்ளூர் கட்டுப்பாடுகள் விதித்துக் கொள்ளலாம்.

பொது இடங்களில் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். வேலை செய்யும் இடங்களிலும், வாகனங்களில் செல்லும் போதும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்படும். முடிந்த வரை வீட்டில் இருந்தபடியே வேலை செய்யும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். அனைத்து நிறுவனத்திலும் பணியாளர்கள் உள்ளே நுழையும் இடத்தில் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும். சோப்பு பயன்படுத்தி கைகளை கழுவ ஏற்பாடு செய்ய வேண்டும் அல்லது கிருமிநாசினி வழங்க வேண்டும்.

Also Read: நிவர் புயல்: புதுச்சேரியில் இன்று முதல் 3 நாள்கள் ஊரடங்கு! 2 நாள்கள் பேருந்து சேவை நிறுத்தம்

பணியிடங்களை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும். ஊழியர்கள் சமூக இடைவெளி விட்டு பணி செய்ய வேண்டும். கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் கட்டுப்பாடுகளுடன் பொது போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது ரத்து செய்திருக்கிறது அரசு. அதே நேரத்தில் இன்று இரவு முதல் மே 24-ம் தேதி இரவு வரை அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோ மற்றும் டாக்சி இயங்குவதற்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டிருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/healthy/from-today-midnight-onwards-full-lock-down-has-been-imposed-in-puducherry-with-mild-relaxation

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக