Ad

ஞாயிறு, 9 மே, 2021

நானும் நீயுமா - 4: சினிமா கிசுகிசுக்களும், ஹீரோக்களின் வளர்ச்சியும், வீழ்ச்சியும்!

தமிழ் சினிமாவின் இருபெரும் ஆளுமைகளான எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜியின் தொடக்க காலக்கட்டத்தை கடந்த வாரத்தில் பார்த்தோம்.

இவர்கள் என்றல்ல, எந்தவொரு இரு முன்னணி நடிகர்களுக்கு இடையிலும் எப்போதுமே பலத்த போட்டி மனப்பான்மை இருக்கும். ஒருவரையொருவர் முந்துவதற்காகக் கடுமையாக போட்டியிடுவார்கள். ஏனெனில் சினிமா தரும் புகழ், செல்வம், செல்வாக்கு போன்ற விஷயங்கள் அத்தகையது. ஒருவகையில் இந்தப் போட்டி அதன் வணிகத்திற்கு அனுகூலமானது. ஏனெனில் கடுமையானப் போட்டி இருக்கும்போதுதான் எந்தவொரு துறையும் செழித்து வளரும். ஆனால், இது ஆரோக்கியமான போட்டியாக இருந்தால் பிரச்னையில்லை. எல்லை மீறும் போதுதான் பிரச்னைகள் உருவாகின்றன.

ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்

பொதுவாக இந்த நடிகர்களைப்பற்றி முன்னணி ஊடகங்களில் வரும் தகவல்களும் செய்திகளும் வரலாறுகளும் 'நேர்மறையாக' மட்டுமே உருவாக்கப்படும். ஏனெனில் தன்னைப்பற்றி எதிர்மறையாக எழுதப்படும் செய்திகளை எந்தவொரு நடிகரும் விரும்பமாட்டார். அவர் மட்டுமல்ல, சம்பந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்களே அதை விரும்பாமல் எழுதிய பத்திரிகையை திட்டித் தீர்ப்பார்கள். ஆனால், எதிர்தரப்பு ரசிகர்களுக்கு இது கொண்டாட்டமாக இருக்கும். நடிகர்களை அந்தத் துறை சார்ந்து மட்டும் பார்க்காமல் அவர்களை கடவுள்களின் அவதாரங்களாக பார்க்கும் அறியாமை இன்றும் நீடிக்கிறது. ஒருவகையில் இப்படிப்பட்ட சினிமா வம்புகளேகூட சில ஊடகங்களின் வணிகத்திற்கு அடிப்படையாக இருக்கிறது. இது போன்ற போக்குகள் இன்று வரையிலும் தொடர்கின்றன.

இதற்கு இன்னொரு பக்கம் இருக்கிறது. முன்னணி நடிகர்கள், நடிகையர் பற்றிய பொய்த் தகவல்களை இட்டுக்கட்டி சுவாரஸ்யமான வம்புகளாக மாற்றி எழுதும் பத்திரிகைகளும் உள்ளன. இவற்றின் அடிப்படையே ஆதாரமில்லாத வம்புத் தகவல்களை உருவாக்கி தங்களின் வணிகத்தைப் பெருக்கிக் கொள்வதுதான். தியாகராஜ பாகவதர் காலத்திலேயே இந்த வகையான போக்கு இருந்தது.

சி.என். லட்சுமிகாந்தன் என்கிற பத்திரிகையாளர் முன்னணி சினிமா நடிகர், நடிகையர்களைப் பற்றிய வம்புச் செய்திகளை இட்டுக்கட்டி எழுதி புகழ் அடைந்தார். வாசிப்பவர்கள் கிளர்ச்சியடையும் வகையில் இவர் நடத்தி வந்த இதழ் இருந்ததால் இந்த இதழின் வணிகம் நாளுக்கு நாள் வளர்ந்தது. பிரபலங்களின் தனிப்பட்ட வம்புகளை அறிந்து கொள்ளும் பொதுசமூகத்தின் ஆர்வத்தை இந்த இதழ் நன்கு பயன்படுத்திக் கொண்டது.

தியாகராஜ பாகவதர்

1944-ம் ஆண்டு லட்சுமிகாந்தன் ரிக்ஷாவில் பயணித்துக் கொண்டிருந்த போது கத்தியால் குத்தி சாகடிக்கப்பட்டார். சாகும் தறுவாயில் போலீஸாருக்கு வாக்குமூலம் தந்தார். இந்தக் கொலை வழக்கு தொடர்பாக எட்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகிய இருவரும் இந்தப் பட்டியலில் இருந்தார்கள். இந்த வழக்குத்தொடர்பான விசாரணை முடிந்து 1945-ம் ஆண்டு ஆறு நபர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. பாகவதரும், கிருஷ்ணனும் இந்தத் தண்டனையை எதிர்த்து லண்டனில் உள்ள ப்ரிவி கவுன்சிலில் முறையிட்டனர். மறுபரிசீலனை மூலம் 1947-ல் இருவரும் விடுதலையானார்கள்.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்

ஹீரோவாக தியாகராஜ பாகவதரும், நகைச்சுவை நடிகராக என்.எஸ்.கிருஷ்ணனும் புகழின் உச்சத்தில் இருந்த காலக்கட்டம் அது. ஆனால், இந்த வழக்கு அவர்களின் வாழ்க்கையையே தலைகீழாக புரட்டிப் போட்டது. அவர்கள் இருவரும் சிறையிலிருந்து வெளியே வந்து மீண்டும் படங்களை உருவாக்கினாலும் இழந்த புகழை மீண்டும் பெற முடியவில்லை. பார்வையாளர்களின் ரசனை மாற்றம் உள்ளிட்ட சில காரணங்கள் இருந்தாலும் இந்த இரு முன்னணி நடிகர்களின் வீழ்ச்சிக்கு வம்புதான் காரணமாக இருந்தது என்பது துரதிர்ஷ்டமான விஷயம்.

எம்.ஜி.ஆரும், சிவாஜியும் முன்னணி நடிகர்களாக உச்சத்தில் செயல்பட்டுக்கொண்டிருந்த காலகட்டத்தில் அவர்களுக்கு இடையே இருந்த போட்டி ஆரோக்கியமானதாக இருந்தது. அதே சமயத்தில் கடுமையானதாகவும் இருந்தது. இந்த இரு நடிகர்களுக்கென்று இரு தயாரிப்பு கோஷ்டிகள், அணிகள் தனித்தனியாக உருவாகின. சில தயாரிப்பாளர்கள் ஒரு குறிப்பிட்ட ஹீரோவை மட்டும் வைத்துத்தான் படத்தை தயாரிப்பார்கள். இதைத்போலவே சில இயக்குநர்களும், துணை நடிகர்களும், கதாசிரியர்களும் அந்த ஹீரோவின் படங்களில் மட்டுமே பணிபுரிவார்கள். எழுதப்படாத, கண்ணுக்குத் தெரியாத இந்தக் கட்டுப்பாடு திரையுலகில் இருந்தது.

சிவாஜி கணேசன்

உதாரணமாக பிரபல நடிகரான கே.பாலாஜி (இவர் நடிகர் மோகன்லாலின் மாமனாரும் கூட) தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் சிவாஜியை மட்டுமே ஹீரோவாக வைத்து ஏராளமான வெற்றித் திரைப்படங்களைத் தயாரித்தார். இத்தனைக்கும் இவர் எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பர். ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு தினத்தில் எம்.ஜி.ஆரை சந்தித்து ஆசி பெறுபவர்களில் இவரும் ஒருவர். ஆனால் சில கலைஞர்களால் கண்ணுக்குத் தெரியாத இந்தச் சுவரைத் தாண்ட முடிந்தது. காரணம் அவர்களுக்கு இருந்த அபாரமான திறமை. எம்.எஸ்.விஸ்வநாதன், கண்ணதாசன் போன்ற மேதைகள் இரு ஹீரோக்களின் படங்களிலும் பணியாற்றினார்கள். என்றாலும் அதில் சில சுவாரஸ்யமான புகைச்சல்களும் கலந்திருந்தன.

உதாரணத்திற்கு ஒரு சம்பவத்தைப் பார்ப்போம். எம்.ஜி.ஆரின் திரைப்படங்களுக்கு ஆஸ்தான பாடலாசிரியராக இருந்தவர் வாலி என்பது அனைவருக்கும் தெரியும். அவர் ஒரு காலகட்டத்தில் சிவாஜி நடித்த 'அன்புக்கரங்கள்' என்கிற திரைப்படத்திற்கு எழுத ஒப்பந்தம் ஆனார். இதை அறிந்து கொண்ட எம்.ஜி.ஆர், பிறகு வாலியைச் சந்தித்த போது ‘’ ’உங்க' அன்புக்கரங்கள் எப்போது ரிலீஸ்?" என்று குறும்பாகக் கேட்க, எம்.ஜி,ஆரின் உள்குத்தைப் புரிந்து கொண்ட வாலி, தனது வார்த்தை ஜாலத்தால் அதிலிருந்து தப்பினார்.

Also Read: நானும் நீயுமா - 3: எம்.ஜி.ஆர் vs சிவாஜி... வெற்றியும், தோல்வியும் எதனால், எப்படி வந்தது?!

வாலி சொன்ன அற்புதமான பதில் "உங்க அன்புக்கரங்களில் இருந்து எனக்கு எப்போதும் ரிலீஸ் கிடையாது". இதைக் கேட்டு மகிழ்ந்த எம்.ஜி.ஆர் வாய் விட்டுச் சிரித்திருக்கிறார்.

தனது எதிரணியினராக இருந்தாலும் திறமைசாலிகளை அரவணைத்துக் கொள்வதில் எம்.ஜி.ஆருக்கு நிகரில்லை. ஆனால் திரைத்துறையில் இருக்கும் சிறப்பான விஷயங்கள் அனைத்தும் தனது திரைப்படத்தில் இருந்தாக வேண்டும் என்கிற கறாரான பிடிவாதத்தைக் கொண்டவர். அதாவது தனது திரைப்படங்கள் எல்லா வகையிலும் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்பதற்காக எம்.ஜி.ஆர் மிகவும் மெனக்கெடுவார். இதற்காக கண்டிப்புகளையும் கறார்தனத்தையும் அவர் நிறையக் காட்டியதுண்டு.

கவிஞர் வாலி

இந்தப் போக்கு அப்போதைய காலகட்டத்தில் திரைத்துறைக்குள் இருந்தவர்கள் பலரும் அறிந்த ரகசியம்தான் என்றாலும் இதைப் பற்றி பகிரங்கமாக பேசத் தயங்குவார்கள். சம்பந்தப்பட்ட நடிகர்களைப் பகைத்துக் கொண்டதால் தங்களின் வாய்ப்பு பறி போய் விடுமோ என்கிற அச்சம்தான் காரணம்.

எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய இருவருடன் பணிபுரிந்த சில கலைஞர்கள் மட்டும் தங்களின் திரைத்துறை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும்போது நேரடியாகவோ, மறைமுகமாகவோ இந்தப் போட்டி மனப்பான்மை பற்றி பதிவு செய்து விடுவார்கள். உதாரணமாக பிரபல வசனகர்த்தா ஆரூர்தாஸ், பாடலாசிரியர் வாலி போன்றவர்களின் அனுபவக் கட்டுரைகளின் நூல்களை வாசித்துப் பார்த்தால் தெரியும்.

எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் இடையே ஆழமான நட்பு இருந்தாலும் இன்னொரு பக்கம் கறாரான தொழில் சார்ந்த கடுமையான போட்டி இருந்ததை இவர்களின் பதிவுகளில் இருந்து உணர முடியும். மேற்குறிப்பிட்ட 'அன்புக்கரங்கள்' உதாரணம் அப்படிப்பட்டதுதான். வாலியே தன் அனுபவக்கட்டுரை ஒன்றில் எழுதிய தகவல் அது.

நானும் நீயுமா?

கண்ணதாசன் இதையெல்லாம் தாண்டியவர். அது கருணாநிதியைப் பற்றியதோ அல்லது எம்.ஜி.ஆர் பற்றியதோ, சிலபல விஷயங்களை துணிச்சலாகவும் பட்டவர்த்தனமாகவும் எழுதி விடுவார். 'மனவாசம்’, 'எம் ஜி ஆரின் உள்ளும் புறமும்' போன்ற நூல்கள் இதற்கு உதாரணம். ஏனெனில் திரைத்துறையைத் தாண்டி அரசியலிலும் கண்ணதாசன் இயங்கியதால் நேர்ந்த விஷயங்கள் இவை. மட்டுமல்லாமல் படைப்பாளிகளுக்கே உரிய எளிதில் உணர்ச்சிவசப்படுதலும் இதற்கு காரணம். ஆனால், கண்ணதாசனின் அபாரமான கவித்திறன் காரணமாகவும் அவரிடம் கொண்டிருந்த நட்பு காரணமாகவும் சம்பந்தப்பட்டவர்கள் அதிகம் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவார்கள்.

ஆனால், மன்னிக்கப்படாத கடுமையான சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன. அதைப் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்!

- போட்டிப் போடுவார்கள்!



source https://cinema.vikatan.com/tamil-cinema/naanum-neeyuma-4-gossips-and-the-rise-and-fall-of-classic-heroes

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக