Ad

புதன், 5 மே, 2021

"பிரதமரே, உங்கள் கைகள் முழுக்க ரத்தம்!" - விரக்தியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் உச்சம் தொட்டிருக்கும் நிலையில், பயோபபுளுக்குள்ளேயே தொற்று பரவியதால் ஐபிஎல் போட்டிகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டன. இந்த ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பாகவே ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்காக வர்ணணையாளராகப் பணியாற்றிய மைக்கேல் ஸ்லேட்டர், திடீரென இந்தியாவில் இருந்து மாலத்தீவுக்குப் பறந்தார்.

இந்தியாவில் தொற்று அதிகரித்ததால் பயோபபுளில் இருந்து வெளியேறி மாலத்தீவுக்கு அவர் சென்றுவிட்டார் என சொல்லப்பட்டது. தற்போது ஸ்லேட்டர் மாலத்தீவில் இருந்து மீண்டும் ஆஸ்திரேலியா செல்லமுடியாமல் தவித்துவருகிறார்.

இந்தியாவில் இருந்து வரும் யாரையும் ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கமுடியாது என நாட்டின் எல்லைகளை மூடியிருக்கிறார் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன். இதனால் ஐபிஎல் போட்டிகளில் விளையாடவந்த 40-க்கும் மேற்பட்ட கிரிக்கெட் வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் நாடு திரும்பமுடியாமல் தவித்துவருகிறார்கள். கிரிக்கெட் வீரர்கள் தவிர 9000 ஆஸ்திரேலியர்கள் தற்போது இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா திரும்பமுடியாமல் இருக்கிறார்கள். மே 15-ம் தேதிவரை இந்தியாவில் இருந்து வரும் யாரும் ஆஸ்திரேலியாவுக்குள் நுழையக்கூடாது எனத் தடை போட்டிருக்கிறது அந்நாட்டு அரசு.

ஐபிஎல், சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்நிலையில் மைக்கேல் ஸ்லேட்டர் ட்விட்டரில் தனது வேதனையைப் பகிர்ந்திருக்கிறார். ''ஆஸ்திரேலிய அரசுக்கு தன் மக்களின் பாதுகாப்பு மீது அக்கறை இருந்தால் எங்களை நாடு திரும்ப அனுமதிக்கும். அரசு எங்களுக்கு செய்யும் மிகப்பெரிய அவமரியாதை இது. பிரதமரின் கைகளில் இரத்தக்கறை படிந்திருக்கிறது. எவ்வளவு தைரியம் இருந்தால் நீங்கள் எங்களை இப்படி நடத்துவீர்கள்? இந்தியா சென்று ஐபிஎல் தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலிய அரசு அனுமதித்ததால்தான் நான் இங்கே வந்தேன். ஆனால், இப்போது நாடு திரும்பமுடியாதென்று எங்களைப் புறிக்கணிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது. பணத்துக்காக நாங்கள் ஐபிஎல்-க்கு சென்றதாக சிலர் விமர்சிக்கிறார்கள்.

இதுதான் என் வேலை. இந்த வேலையிருந்தால்தான் நான் என்னுடய மூன்று குழந்தைகளின் கல்விக்குக் கட்டணம் செலுத்தமுடியும். கடன்களை அடைக்கமுடியும். என்னோடு விவாதிக்க உங்களை (பிரதமர் மாரிசன்) அழைக்கிறேன்'' என மைக்கேல் ஸ்லேட்டர் ட்விட்டரில் எழுதியிருக்கிறார்.

ஆஸ்திரேலிய வீரர்களை தற்போதைக்கு மாலத்தீவு அல்லது இலங்கையில் தங்கவைக்க பிசிசிஐ ஏற்பாடுகளை செய்துவருகிறது. ஐபிஎல் தொடரில் பங்கேற்ற இங்கிலாந்து வீரர்களில் பெரும்பாலானோர் இன்று காலை லண்டன் போய் சேர்ந்துவிட்டனர்.



source https://sports.vikatan.com/ipl/michael-slater-slams-austrtalian-prime-minister-for-travel-ban-from-india

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக