Ad

புதன், 5 மே, 2021

டெல்லி: `தீ அணைப்பான்களுக்கு பெயின்ட்!’ - ஆக்ஸிஜன் தேவையை குறிவைத்த கும்பல் சிக்கியது எப்படி?

தலைநகர் டெல்லியில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. மாநிலத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருப்பதால், பெரும்பாலான மருத்துவமனைகளில் உயிர்காக்கும் ஆக்ஸிஜன் மற்றும் படுக்கைகளுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஆக்ஸிஜன் பற்றாகுறையால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் டெல்லியில் அதிகரித்து வருகிறது. சூழலைக் கருத்தில்கொண்டு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மாநிலத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களின் தேவை மிகவும் அதிகமாக உள்ளதால் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்துள்ளார். ஆனாலும், மாநிலத்தின் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தேடி அலையும் உறவினர்களைக் குறிவைத்து சிலர் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், டெல்லி பார்ஷ் பஜார் பகுதியில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் எனக்கூறி தீ அணைப்பான் சிலிண்டர்களை நபர்கள் சிலர் ஏமாற்றி விற்பனை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆக்சிஜன் பற்றாக்குறை

பார்ஷ் பஜார் பகுதியில் முகேஷ் என்பவர் 'ராதா வல்லபா சேவா சங்கம்' என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். டெல்லியில் கொரோனா காரணமாக மக்கள் ஆக்ஸிஜன் கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதைப் பார்த்த முகேஷ், தன்னுடைய தொண்டு நிறுவனத்தின் மூலம் தேவைப்படும் ஏழை எளிய மக்களுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டரைகளை சொந்த செலவில் ஏற்பாடு செய்து வழங்கி வருகிறார். கடந்த வாரம் முகேஷ், டெல்லி அப்னி காலனி பகுதியில் திரவ ஆக்ஸிஜன் விற்பனை செய்து வரும் நிறுவனம் ஒன்றிலிருந்து 5,500 ரூபாய்க்கு 4.5 லிட்டர்கள் கொள்ளளவு கொண்ட ஆக்ஸிஜன் சிலிண்டர் ஒன்றினை வாங்கி கொரோனா நோயாளி ஒருவருக்கு வழங்கி உதவியுள்ளார்.

இந்நிலையில், மீண்டும் நோயாளி ஒருவருக்கு ஆக்ஸிஜன் தேவை ஏற்படவே முன்பு வாங்கிய அதே இடத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தேவை என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்நிறுவனத்தைச் சேர்ந்த ரவி சர்மா என்பவர் முன்னதாக 5,000 ரூபாய்க்கு முகேஷிடம் விற்பனை செய்த ஆக்ஸிஜன் சிலிண்டரின் விலையை 13,000 ரூபாய் என்று உயர்த்தி அதிகமாகக் கூறியிருக்கிறார். விலை மிகவும் அதிகமாக உள்ளதாக முகேஷ் கேட்டதற்கு ரவி சர்மா, "விலை இதை விட இன்னும் பல மடங்கு அதிகமாகும் வேண்டுமென்றால் வாங்கிக்கொள்ளுங்கள் இல்லையென்றால் கிளம்புங்கள், யாரிடம் வேண்டுமென்றாலும் சென்று புகார் அளித்துக்கொள்ளுங்கள் எங்களுக்குக் கவலையில்லை" என்று மிரட்டல் தொனியில் கூறியிருக்கிறார்

தீ அணைப்பான்கள்

முகேஷ் சம்பவம் தொடர்பாக பார்ஷ் பஜார் காவல் நிலையத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர் நிறுவனத்தின் மீது புகார் அளித்தார். புகாரைப் பெற்ற போலீசார் அப்னி காலனியில் அமைந்துள்ள அந்த நிறுவனத்தில் சோதனை செய்தனர். அப்போது, சிலர் சிவப்பு நிற எரிவாயு சிலிண்டர்களில் கருப்பு நிற சாயம் பூசிக் கொண்டிருந்துள்ளனர். போலீசாரை கண்டதும் அதிர்ச்சி அடைந்த நபர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளனர். அதனால் சந்தேகமடைந்த போலீசார் மிரட்டி விசாரித்ததில், தீ அணைக்க பயன்படுத்தப்படும் திரவ சிலிண்டர்கள் மீது கருப்பு நிற சாயம் பூசி கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் எனக்கூறி விற்பனை செய்து வந்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர். இளைஞர்கள் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்களைக் கைதுசெய்து சிலிண்டர்கள் அனைத்தையும் கைப்பற்றினர். விசாரித்ததில் கைது செய்யப்பட்ட நபர்கள் ரவி சர்மா (40), முகமது அப்துல் (38) மற்றும் சம்மு ஷா (30) என்று தெரியவந்துள்ளது. போலீசார் விசாரித்து வருகின்றனர். இக்கட்டான சூழலில் தீ அணைப்பான் சிலிண்டர்களைஆக்ஸிஜன்சிலிண்டர்கள் என ஏமாற்றி கொரோனா நோயாளிகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/news/crime/three-arrested-in-delhi-for-selling-painted-fire-extinguishers-as-oxygen-cylinders

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக