Ad

திங்கள், 10 மே, 2021

தமிழ் வேதமும் தர்ம பரிபாலனமும் போற்றிய ஓங்காராநந்தா சுவாமிகள் நினைவுகள்!

தர்ம ரட்சண சமிதியின் மாநிலத் தலைவரும் தேனி வேதபுரீ ஸ்ரீசித்பவானந்த ஆஸ்ரமத்தின் பீடாதிபதியுமான பூஜ்ய ஸ்ரீ ஓங்காராநந்த சுவாமிகள் நேற்று மகாசமாதி அடைந்தார். வேதம், உபநிடதம், தமிழ்மறைகள், நீதி நூல்கள், பாரதியார் கவிதைகள் என அனைத்தையும் எளியோரும் அறியும்வண்ணம் பொருள்கூறிப் பல லட்சக்கணக்கான பக்தர்களை ஆன்மிக வழியில் நடத்தி சுவாமிகளின் மறைவு ஆன்மிக உலகுக்குப் பேரிழப்பு என்கிறார்கள் பக்தர்கள்.

ஓம்காராநந்தா சுவாமிகள்

சுவாமிகளின் பூர்வாஸ்ரமப் பெயர் மனோகரன், கோட்டீஸ்வர சர்மா என்பதாகும். எளிமையான குடும்பத்தில் பிறந்த மனோகரன் சிறுவயதுமுதலே வேதம் சொல்லும் வாழ்வியலைப் பின்பற்றி வந்தவர். திருப்பராயத்துறை ஸ்ரீ ராமகிருஷ்ணா தபோவனத்தின் நிறுவனர் பூஜ்யஸ்ரீ சுவாமி சித்பவானந்தாவிடம் கல்வி பயின்று அவர் திருக்கரங்களால் ஸ்ரீ ஓங்காராநந்தா என்னும் திருநாமம் பூண்டு சந்நியாச தீட்சையும் பெற்றுக்கொண்டார். பூஜ்யஸ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமிகளின் சீடர்களில் ஒருவரான பூஜ்யஸ்ரீ சுவாமி பரமார்த்தானந்தாவிடம் வேதாந்தங்களைக் கற்றுத் தேர்ந்தார்.

இவரது சொற்பொழிவுகள் எளிய மக்களிடையேயும் பகவத் கீதையையும் உபநிடதங்களையும் கொண்டு சேர்த்தன. தமிழ் வேதங்கள் என்று போற்றத்தக்க தேவாரம், திருவாசகம், திருமந்திரம் போன்றவற்றின் பெருமைகளைக் காலமெல்லாம் எடுத்துரைத்தவர் சுவாமிகள். மேலும், திருக்குறள், தாயுமானவரின் பாடல்கள், பாரதியரின் பாடல்கள் போன்றவை குறித்த சுவாமிகளின் விளக்கங்கள் மிகவும் அற்புதமானவை. சாதி, மத பேதமின்றி சகல உயிர்களையும் ஒன்றுபோல் பாவித்த செய்த சுவாமிகள் தன் வாழ்நாள் முழுவதும் அன்பையே பிரதான உபதேசமாகச் செய்தார்.

சுவாமிகள், வேதாந்த சாஸ்திர பிரச்சாரா அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சேவ சமிதி என்னும் அறக்கட்டளைகளை ஏற்படுத்தி ஆன்மிக விழிப்புணர்வும் சமூக சேவையும் தொடர்ந்து நடந்திட வழி வகுத்தார். தேனியில் வேதபுரி என்ற பெயரில் ஸ்ரீ சுவாமி சித்பவானந்த ஆசிரமத்தை நிறுவினார். சென்னையிலும் ‘சத்குரு சந்தானந்த சத்சங்கம்’ என்னும் அறக்கட்டளையை நிறுவி மக்கள் பணி செய்திடப் பணித்தார்.

ஓம்காராநந்தா சுவாமிகள்

சக்திவிகடன் இதழில், ‘இளையபாரதத்தினாய் வா வா வா’, ‘பாதை புதிது பயணம் புதிது’ என்னும் இரண்டு முக்கியமான தொடர்களை எழுதி இளைஞர்களிடம் ஆன்மிக உணர்வு மேலோங்க உதவினார். இந்த இரண்டு தொடர்களின் மூலமும் இளைஞர்களை ஆன்மிக வழியில் நடத்தியதுபோலவே தன்னம்பிக்கை பெற்று வாழ்வில் வெற்றி பெறவும் வழிகாட்டி உதவினார்.

தொடர்ந்து இந்துதர்மத்தை உபதேசித்து அதற்கு சிறு பாதிப்பு ஏற்படும் என்றாலும் ஒரு கணமும் பொறுக்காது எதிர்க்குரல் எழுப்பியவர் ஓங்காராநந்த சுவாமிகள். அத்தகைய வீரக்குரலுக்குச் சொந்தமான சுவாமிகள் நேற்று (10.5.21) உடல்நலக்குறைவு காரணமாக மாலை மகாசமாதி அடைந்தார். சித்பவானந்தா ஆஸ்ரமத்தைச் சேர்ந்த சீடர்கள், அரசாங்கத்தின் அனுமதியோடு சுவாமிகளின் உடலைப் பெற்று தேனியில் உள்ள ஆஸ்ரமத்தில் சுவாமிகளின் இறுதிச் சடங்கை நடத்தினர். ஏற்கெனவே சுவாமிகள் தேர்வு செய்து வைத்திருக்கும் இடத்தில் சுவாமிகளுக்கான மகா சமாதி அமைக்கப்படும் என்று அறக்கட்டளை சார்பாகத் தெரிவித்திருக்கிறார்கள்.



source https://www.vikatan.com/spiritual/news/swamy-omkarananda-attains-maha-samadhi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக