Ad

திங்கள், 10 மே, 2021

கரூர்: `3,576 மதுப்பாட்டில்கள்; 29 பேர் கைது!' - ஊரடங்கில் காவல்துறையின் அதிரடி

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், கரூர் மாவட்டம் முழுக்க நடைபெற்ற மதுவிலக்க வேட்டையில், 29 பேர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து 3,576 மதுபாட்டில்களை போலீஸார் கைபற்றியுள்ளனர்.

கைபற்றப்பட்ட மதுபாட்டில்கள்

Also Read: கரூர்: முழு ஊரடங்கு; சுவற்றில் துளையிட்டு 142 மதுபாட்டில்கள் கொள்ளை - டாஸ்மாக்கில் கைவரிசை

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பதால், தமிழக அரசு திங்கள் (10 - ம் தேதி) கிழமை முதல் ஊரடங்கை அமல்படுத்தியது. அதோடு, திங்கள் முதல் தமிழகம் முழுக்க இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், பதறிபோன குடிமகன்கள், 14 நாள்களுக்கு தேவையான மதுவை வாங்கி, மூட்டைக் கட்டி கொண்டு போன காட்சிகள் அரங்கேறின. அதோடு, பலரும் மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த வகையில், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய், கரூர் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடத்த உத்தரவிட்டார். அதன்படி, கரூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. கரூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முகெஷ் ஜெயக்குமார், கரூர் ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சசிதர் ஆகியோர் கண்காணிப்பில், மாவட்டம் முழுக்க அதிரடி சோதனை தொடர்ந்து நடத்தப்பட்டது. அரசு அனுமதியின்றி சட்டத்திற்கு புறம்பாக மது பாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து, 10 ம் தேதி முதல் வரும் 24 - ம் தேதி வரை ஊரடங்கு காலத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்ய பலர் முயற்சி செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கார்

அப்படி, மதுப்பாட்டில்களை வாங்கி, அவற்றை கடத்திச் செல்வதாக கிடைத்த தகவலின் பேரில், மாவட்டம் முழுக்க நடத்தப்பட்ட வேட்டையில், 29 நபர்கள் சிக்கினர். 6 கார்கள், 4 இருசக்கர வாகனங்களில் கொண்டுவரப்பட்ட 3,576 மதுப்பாட்டில்களை கைப்பற்றினர். வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். அதோடு, இந்த சோதனை மூலம் கரூர் மாவட்டம் முழுக்க மதுபாட்டில்களை கடத்தியது சம்பந்தமாக 26 வழக்குகள் பதியப்பட்டன. இறுதியாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய், "இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான வழக்குகள், அவர்கள் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.



source https://www.vikatan.com/news/crime/karur-police-take-action-and-capture-3756-liquor-bottles

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக