சாத்தான்குளம் காவல் நிலயத்தில் தந்தை, மகன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பின்னர் அத்தகைய சம்பவங்கள் நடக்காத வகையில், போலீஸாருக்கு உயரதிகாரிகள் அறிவுரைகள் வழங்கினார்கள். ஆனாலும் சில இடங்களில் போலீஸ் தாக்குதல் சம்பவங்கள் நடக்கின்றன. ஆர்.சி.நந்தன்குளம் என்ற கிராமத்தில் போலீஸாரின் அத்துமீறல் நடந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Also Read: மதுரை: கொரோனா பணிக்குச் சென்ற மருத்துவர்மீது போலீஸ் தாக்குதல்! - விளக்கம் கேட்கும் மனித உரிமை ஆணையம்
இது குறித்து அந்தப் பகுதி மக்களிடம் பேசினோம். நெல்லை மாவட்டம் திசையன்விளை காவல் நிலையத்துக்குட்பட்ட ஆர்.சி.நந்தன்குளம் என்ற கிராமத்தில் போலீஸாரின் அத்துமீறல் நடந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். சுமார் 80 குடும்பங்கள் மட்டுமே வசிக்கும் சிறிய கிராமத்தில் 21-5-2021 அன்று இரவு தேவாலயத்தின் அருகில் நின்றபடி கிங்ஸ்லி என்ற பொறியியல் பட்டதாரி இளைஞரும் அவரது நண்பர்களும் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.
அந்த சமயத்தில் திசையன்விளை காவல்நிலையத்தைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன், இரு காவலர்களுடன் ரோந்து வந்திருக்கிறார். கிங்ஸ்லி செல்போனில் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த போலீஸார் அவரது செல்போனை பறித்ததுடன், வீட்டுக்குச் செல்லுமாறு மிரட்டியுள்ளனர்.
அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த கிங்ஸ்லியை அடித்த எஸ்.ஐ கதிரேசன், அந்த இளைஞரை வண்டியில் ஏற்றி காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல முயன்றுள்ளனர். அதற்கு அவர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். ஆனாலும் போலீஸார் வலுக்கட்டாயமாக அவரை வண்டியில் ஏற்ற முயன்றிருக்கிறார்கள்.
சம்பவம் நடந்த இடத்தின் அருகே கிங்ஸ்லியின் பாட்டியான முன்னாள் கவுன்சிலர் தெரசம்மாள் வீடு இருப்பதால் சத்தம் கேட்டு வந்த அவர் போலீஸாரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவரையும் போலீஸார் அடித்துள்ளனர். அங்கு வந்த கிங்ஸ்லியின் தாய் அன்னபெஸ்லி அத்தை, ஜெஸ்லி ஆகியோரை அடித்தும் உதைத்தும் மிரட்டி அனுப்பியுள்ளனர்.
பின்னர் கிராம மக்கள் திரண்டு வந்ததால் போலீஸார் அங்கிருந்து சென்று விட்டார்கள். போலீஸ் தாக்குதல் காரணமாக காயமடைந்த கிங்ஸ்லி ராதாபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். ஆனால், அவரும் அவரது நண்பர்களும் சேர்ந்து எஸ்.ஐ கதிரேசன் மற்றும் போலீஸாரை தாக்கியதாக போலீஸார் பொய்யான வழக்குப்பதிவு செய்திருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அதனால் ஆர்.சி.நந்தன்குளம் கிராம மக்கள் போலீஸாருக்கு எதிராக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த விவகாரத்தில் உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளானதாக ராதாபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கிங்ஸ்லி கழுத்து வயிற்றுப் பகுதியில் காயம் பலமாக இருப்பதாகத் தெரிகிறது. சிறுநீரக பிரச்னையும் ஏற்பட்டிருப்பதால் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு மேல் சிகிச்சைக்காக குமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து திசையன்விளை இன்ஸ்பெக்டர் சாய் லட்சுமியிடம் கேட்டதற்கு, "சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் மூன்று காவலர்கள் நந்தன்குளத்துக்கு 21-5-2021 அன்று வழக்கமான ரோந்துப் பணிக்குச் சென்றபோது இருட்டுக்குள் கூட்டமாக இருந்த சிலரை அழைத்துள்ளனர். அப்போது சிலர் அங்கிருந்து ஓடிவிட்ட நிலையில் நான்கு இளைஞர்கள் மட்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், எங்க ஊருக்குள் எப்படி வரலாம் எனக் கேட்டு போலீஸாரைத் தாக்கியிருக்கிறார்கள். அப்போது கிராமத்தினர் அங்கு சூழ்ந்துவிட்டதால் நான் போலீஸாருடன் சென்று ஊர்மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அழைத்து வந்தேன். போலீஸாரை தாக்கியதால் பெரும் சிக்கலைச் சந்திக்க நேரிடும் என்பதால் பயந்து போய், போலீஸார் மீது வீண்பழி போடுகிறார்கள். சப்-இன்ஸ்பெக்டர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அடையாளம் தெரிந்த நான்கு பேர் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம்" என்றார்.
source https://www.vikatan.com/news/tamilnadu/the-villagers-accused-the-police-of-assaulting-the-youth-and-filing-a-false-case
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக