Ad

ஞாயிறு, 23 மே, 2021

புத்தம்புது காலை : மொய் பணமும், மொய் விருந்தும் தமிழர் வாழ்வில் கலந்தது எப்படி?!

வைகாசி மாதம், வளர்பிறை நாள், சுப முகூர்த்த தினம் என்று இன்றைய தினத்தை தினசரி காலண்டரில் பார்க்கும்போதே திருமணம், நிச்சயதார்த்தம், புதுமனை புகுவிழா எனப்பல சுப நிகழ்சிகள் நினைவுக்கு வருகிறதா? கொரானாவுக்கு முன், அந்த சுப நிகழ்வுகளில், கூட்டம் கூட்டமாகச் சென்று கொண்டாடியதும், அதில் விருந்து உண்டதும், பரிசுகள் கொடுத்ததும், மொய் வைத்ததும் மறக்கமுடியாதல்லவா!

அதில் பரிசுகள் கூட சரி ... இந்த மொய்ப்பணம் வைப்பது ஏன், எதற்காக?

உண்மையில் மொய் என்பது மொழி என்று சொல்லில் இருந்து வந்தது என்று கூறும் மொழி ஆய்வாலர்கள், ஆசீர்வாதம் அளிக்க கூறப்படும் வாழ்த்துமொழிதான் மொழி என்று குறுகி, பின்பு மொய் என்று மருவியுள்ளது என்ற விளக்கத்தைத் தருகின்றனர்.

எந்தவொரு சுபநிகழ்விலும், வெறும் கையால் வாழ்த்துமொழி கூறாமல், சிறிது பணத்தைத் தருவது தமிழர்களின் மரபு என்பதால், மொய்யுடன் சேர்ந்த பணம், மொய்ப்பணம் ஆனது. உண்மையில் காசு என்பது தமிழர்கள் வாழ்வுடன் கலந்து நிற்பது. தட்சணை கொடுக்காமல் செய்யும் காரியங்கள் பலிக்காது என்பதால் ஜோசியருக்கும், வைத்தியருக்கும் ஒரு ரூபாயாவது தட்சணை கொடுப்பது, கோயிலில் காசு வெட்டி உறவை முறித்துக் கொள்வது போலவே, சுபநிகழ்வுகளில் மொய்ப்பணம் தரும் வழக்கமும் தமிழர்களிடையே இருந்து வந்துள்ளது.

Marriage

மேலும், இந்த மொய்ப்பணத்தை, 101, 501, 2001 என்று ஒற்றைப்படையில் வைப்பதற்கும் ஒரு காரணம் உள்ளது என்று கூறப்படுகிறது.

முன்பு பொன் மற்றும் வெள்ளி நாணயங்கள் மட்டுமே உபயோகத்தில் இருந்த காலத்தில், ஒரு வராகன் எடையுள்ள தங்கக் காசை பரிசாகக் கொடுப்பது வழக்கமாக இருந்ததாம்.

ஒரு வராகன் பொன் என்பது 32 குண்றி எடை (குண்டுமணி). அந்த 32 என்பது, முப்பத்து இரண்டு வகையான தர்மங்களைக் குறிப்பதாகும்.

"இதை, நான் எப்படி தர்மம் சிறிதும் தவறாது உழைத்து சம்பாதித்தேனோ, அதேபோல நீங்களும் தர்மம் வழுவாமல் இதைச் செலவிடுங்கள்..." என்பதை நினைவூட்டும் வகையில், வராகன்கள் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது. பிற்பாடு ரூபாய்த்தாள்கள் புழக்கத்தில் வந்தபிறகு, அந்த ரூபாய்களுடன் ஒரு வெள்ளி நாணயம் சேர்த்து வழங்கப்பட்டது என்றும், அதற்கும் பிறகு, காரணமே புரியாமல் அது இன்றும் 101, 501, 1001 என ஒற்றைப்படையில் வைக்கப்பட்டு வருகிறது என்றும் கூறப்படுகிறது.

ஒரு புரிதல் இப்படியிருக்க, மற்றொரு புரிதலும் இதில் உள்ளது...

இரட்டைப் படை எண்களை இரண்டாகப் பிரித்தால் வெறும் பூஜ்யம் தான் மிஞ்சும். ஆனால், ஒற்றைப்படை எண்களை இரண்டாகப் பிரித்தால் ஒன்றாவது மிஞ்சும். அதனால், நூறு ஐநூறு என்று மொய் வைக்கும் போது அதைக் கொடுப்பவருக்கும் பெறுபவருக்கும் பிரித்துப் பார்த்தால் பூஜ்யம் தான் மிஞ்சும். இதன் அடிப்படையில் இரட்டைப்படையில் மொய் வைத்தால், மொய்ப்பணம் வைப்பவருக்கும், வாங்குபவருக்கும் இடையே இனி, மிச்சம் மீதி எதுவும் இல்லை, உறவு முடிந்து விட்டது என்றும், அதுவே ஒற்றைப்படையில் மொய் வைத்தால் நம்முடைய உறவு முடிந்துபோவதில்லை, என்றும் தொடரும் பந்தம் இது என்பதையும் குறிக்கிறது என்ற நல்லெண்ணக் கதையும் சொல்லப்படுகிறது.


ஆனால், இந்த மொய்ப்பணம் என்பது அன்பைப் பகிரும் அன்பளிப்பு மட்டுமல்லாமல், முன்பொரு நாளில் பெற்றுக் கொண்ட அன்பளிப்பைத் திரும்ப வழங்கும்முறை என்றும், அந்த சுபநிகழ்ச்சியை நடத்துபவரின் நிதித் தேவைக்கு உதவும்வண்ணம் தரப்படும் பணம் என்றும், அதனால்தான், அன்றைய விலைமதிப்பு மிக்க தங்கம் அல்லது வெள்ளி நாணயங்களை ஒற்றைக்காசாக வைக்கும் பழக்கம் ஏற்பட்டது என்றும் கூறப்படுகிறது.

Marriage (Representational Image)

இதை ஒட்டித்தான், கடந்த அறுபது ஆண்டுகளாக, ஆடி ஆவணி மாதங்களில் புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் தொழில் அல்லது வேளாண்மை மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை முன்னேறச் செய்ய அளிக்கப்படும் வட்டியில்லாக் கடன் போன்று மொய் விருந்து நடத்தப்படுகிறது என்றும் சாதி, மதம் பாராமல் ஊரார் அனைவருக்கும் மொய் விருந்துக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

நமது நம்பிக்கைகள் போலவே உலகெங்கும் அன்பைப் பகிரும் அன்பளிப்புகளும், அவற்றின் பொருளாதாரப் புரிதல்களும் நீண்ட நெடுங்காலமாக நடைமுறையில் இருந்து வருகின்றன.

எது எப்படியென்றாலும் நமது தமிழர் நடைமுறையில் ஆண்டாண்டு காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் இந்த மொய்யின் மெய்ப்பொருள்... "இது ஒரு மிகச்சிறந்த அன்பு பகிர்தல்" என்பது நன்கு புரிகிறது!



source https://www.vikatan.com/news/general-news/how-tamils-started-to-give-money-as-gift-in-marriage-events

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக