Ad

வியாழன், 6 மே, 2021

உங்கள் பிறந்த நாளை மறந்த பார்ட்னரை என்ன செய்யலாம்? #AllAboutLove - 14

ஒருவேளை உங்கள் பார்ட்னர் ஒரு முக்கியமான நாளை மறந்துவிட்டால்?

கவலைப்பட வேண்டியதே இல்லை. மறப்பது மனித இயல்புதான். அதுவும் சில மனிதர்களுக்கு மறப்பது என்பது தவிர்க்க முடியாத குணமாகவும் இருக்கலாம். ஏன் மறந்தார் என்பதை அறிந்துகொண்ட பின்னர் ரியாக்ட் செய்வதே ஆரோக்கியமான ரிலேஷன்ஷிப்புக்கான அடையாளம். `அது எப்படி மறக்கலாம்? அப்ப நான் முக்கியமில்லைன்னுதான அர்த்தம்?’ என்ற கேள்வியில் நியாயம் இருக்கலாம். அதைத் தாண்டியும் சில விஷயங்கள் இருக்கின்றன.

உங்களிருவருக்கும் முக்கியமான நாள், நிகழ்வு ஒன்றை உங்கள் பார்ட்னர் மறந்துவிடுகிறார் என வைத்துக்கொள்வோம். அதை நீங்கள் நினைவூட்டும்போது அவர் என்ன சொல்கிறார் என்பதே முக்கியம். உடனடியாக மன்னிப்பு கேட்டாலோ, செய்த தவற்றைச் சரி செய்ய வேறு ஏதும் முயற்சிகள் எடுத்தாலோ அவர் மறந்தது தற்செயலானது என்ற முடிவுக்கு வரலாம். அதைப் பெரிதுபடுத்தத் தேவையில்லை. ஆனால், அதைப் பற்றி நினைவுப்படுத்தியும் `அதனால என்ன’ என்ற ரீதியில் அவர் பதில் இருந்தால், அந்த ரிலேஷன்ஷிப்பில் அவருக்கு எதோ பிரச்னை என்று பொருள். கவனிக்க; அந்த உறவே அவருக்குப் பிடிக்கவில்லை என்று பொருளல்ல. ஏதோ பிரச்னை என்றுதான் சொல்கிறேன். அது தற்காலிகமான ஒன்றாக இருக்கலாம். அல்லது நீண்ட நாள் பிரச்னையாக இருக்கலாம். அதை நீங்கள் இருவர்தான் பேசித் தீர்க்க வேண்டும்.

Love (Representational Image)

இன்னொரு விஷயம். எந்த விதமான ரிலேஷன்ஷிப் ஆக இருந்தாலும் முதல் மூன்று முதல் ஐந்தாண்டுகள் வரை இப்படி மறப்பது இயல்பானதல்ல என்கிறார்கள். அதன் பின்னர் மறப்பது என்பது அடிக்கடி நடக்கலாம். சில சமயம் செலவாகுமென தவிர்க்கக்கூட செய்யலாம். அவையெல்லாம் காதல் குறைந்ததற்கான அடையாளமாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. ஒரு ரிலேஷன்ஷிப் இயல்பான ஒன்றான மாறுவது என்பது நல்ல விஷயம்தான். எப்போதும் `நான் உன்னை எவ்ளோ லவ் பண்றேன் தெரியுமா?’ என வானத்தில் பறந்துகொண்டே இருக்க முடியாதில்லையா?

பிறந்த நாள் அல்லது ஆண்டு விழாக்களை மறக்க அல்லது தவிர்க்க இன்னொரு காரணமும் உண்டு. அது, அந்த நாளில் வேறு ஏதும் வேலை இருந்தால் அதைச் சமாளிக்க மறந்ததைப்போல நடிக்கலாம். உதாரணமாக, உங்கள் பிறந்த நாளும் உங்கள் பார்ட்னருக்குப் பிடித்த நண்பனின் திருமண நாளும் ஒரே நாளில் வந்தால், உங்கள் பிறந்த நாள் நினைவிலில்லாதது போல ஊருக்குப் போக டிக்கெட் போட்டுவிடுவார். நீங்கள் சொன்ன பின், `அய்யய்யோ... எல்லோரும் டிக்கெட்லாம் போட்டுட்டோமே’ எனச் சொல்லலாம். இதிலும் எது மிக முக்கியம் என்பதைப் பேசி முடிவெடுப்பதே சிறந்தது. அதற்கு பயந்து உங்கள் பார்ட்னர் பொய் சொல்வதாகத் தெரிந்தால் நீங்களும் `ரொம்ப ஸ்டிரிக்ட் ஆபீஸர்’ ஆக இல்லாமல், கொஞ்சம் மாறுவதுதான் ரிலேஷன்ஷிப்புக்கு நல்லது. பொய்கள் அதிகமாகும் ரிலேஷன்ஷிப்பைக் காப்பாறுவது மிகவும் சிரமமான காரியம்.

Love (Representational Image)

இது, சிறப்பு நாள்களுக்கு மட்டுமேயான பிரச்னை அல்ல. நீங்கள் உங்கள் பார்ட்னரிடம் ஏதேனும் உதவி கேட்டிருப்பீர்கள். `வர்றப்ப எனக்கு டின்னர் வாங்கிட்டு வா’, `மொபைல் ரீசார்ஜ் பண்ணிடு’, `ஆபீஸ் விஷயத்துல சின்ன உதவி… பன்ணிடுறியா?’ இப்படிப் பல உதவிகள் கேட்டிருப்பீர்கள். எல்லாவற்றையும் தொடர்ந்து அவர் மறப்பதும், நீங்கள் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துவதும் ரிலேஷன்ஷிப்புக்கு ஆபத்தான செயல்களே. குறிப்பாக, பார்ட்னர் அவருக்காகக் கேட்கும் விஷயங்களை மட்டும் இன்னொருவர் மறந்துகொண்டேயிருந்தால் அது அவர் அந்த ரிலேஷன்ஷிப்புக்குத் தரும் முக்கியத்துவம் குறைகிறது என்றே இன்னொருவருக்குத் தோன்றும். அதுதான் பெரும்பாலும் உண்மையும்கூட.

இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், இப்படி எப்போதெல்லாம் நடக்கிறது? இப்படி முக்கியமான நாள், நிகழ்வுகளை அவர் மறப்பது முன்பும் நடந்திருக்கிறதா? நாள்களை நினைவில் வைத்துக்கொள்வதில் உங்கள் பார்ட்னருக்கு எப்போதும் சிக்கல் இருக்கிறதா? இதையும் கணக்கில் கொள்ளுங்கள். அவர் மன்னிப்பு கேட்பதும் நீங்கள் மன்னிப்பதும் நல்ல விஷயம்தான். ஆனால், அதுவே தொடர்கதையாக ஆகக்கூடாதென அழுத்தமாகச் சொல்லுங்கள்.

Love (Representational Image)

Also Read: மாதவன் முதல் ராஸ் கெல்லர் வரை... ரிலேஷன்ஷிப்பில் இவங்க பிரச்னை இதுதான்! #AllAboutLove - 12

ரிலேஷன்ஷிப்பில் இரண்டு பேர் இருக்கிறார்கள். ஒருவருக்கு முக்கியமில்லாத ஒன்று இன்னொருவருக்கு மிக முக்கியமான விஷயமாக இருக்கலாம். அப்போது, இருவரும் அதைக் கொண்டாடும் சூழலிருந்தால்தான் அது ஆரோக்கியமான ரிலேஷன்ஷிப். `எனக்கு தீபாவளில நம்பிக்கை இல்லை. நீ போய் பட்டாசு வெடிச்சிக்க’ என்பதற்கு சேர்ந்திருக்க வேண்டிய அவசியமில்லையே. ஒரு ரிலேஷன்ஷிப் அழகாக மலர இருவருக்கும் பொறுப்புண்டு; பங்குண்டு. நாம், நாமாக இருக்க வேண்டியது ஓர் உறவுக்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு இன்னொவருக்காகவும் யோசிப்பது முக்கியம். அது இல்லாமல் காதலும் இல்லை; ரிலேஷன்ஷிப்பும் இல்லை.

ஆனிவர்சரிகளில் இன்னொரு முக்கியமான விஷயம் பரிசுப் பொருள். நாம் வாழும் காலம் நுகர்வுக்கலாசாரம் உச்சத்திலிருக்கும் காலம். எவ்வளவு விலை அதிகமான பொருள் தருகிறோமோ அந்த அளவுக்கு நம் அன்பும் அதிகம் என நம்ப வைத்திருக்கிறார்கள். தங்க நெக்லஸ் தரும் கணவனைவிட, புடவை வாங்கித் தரும் கணவனின் அன்பு குறைவு என நினைக்கிறார்கள். இது காதலிலும் பொருந்தும். நம் நாட்டில், திருமண உறவில் பெரும்பாலும் பொருளாதார சூழல் என்பது ஒன்றாகவே இருப்பதால், காதலில்தான் நான் சொல்லப்போகும் விஷயம் பெரிய பிரச்னையாக இருக்கிறது.

Also Read: Ghosting, Benching, Caking... ரிலேஷன்ஷிப்பில் இதெல்லாம் என்ன தெரியுமா? #AllAboutLove - 13

காதலன், மாதம் 15,000 சம்பளம் வாங்குபவனாக இருப்பான். காதலி வீட்டில் காசுக்குப் பிரச்னையே இல்லை. இருவருக்கும் அளவுக்கதிகமான அன்புதான். காதலி தன் காதலனின் பிறந்த நாளுக்கு மொபைல் வாங்கித் தந்திருப்பாள். காதலனும் அந்த அளவுக்கு விலை உயர்ந்த பரிசு தர வேண்டுமென நினைக்க மாட்டாள். ஆனால், அந்த மொபைல் ஒரு மிகப்பெரிய அழுத்தத்தை அந்தக் காதலனுக்குத் தரும். சில சமயம், தாழ்வு மனப்பான்மையைக்கூட அது உருவாக்கும். சிலர் எதற்கெடுத்தாலும் பரிசு வாங்கித் தரும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். சிலர், திருமணத்துக்கு கிஃப்ட் வாங்கிக் கொண்டு போவதையே பாவமென நினைப்பார்கள். அவரவர் இயல்புடன் ஏற்றுக்கொள்வதுதான் காதல். ஆனால், ஏற்றுக்கொண்டபடி நீண்டகாலம் நடப்பதுதான் சிரமம். அதனால்தான் ரிலேஷன்ஷிப் சிக்கலானது. பார்ட்னர்கள் இடையே பொருளாதாரத்தில் மிகப்பெரிய வித்தியாசம் இருந்தால், அந்த ரிலேஷன்ஷிப்பின் தன்மையைப் பொறுத்து புரிந்து நடக்க வேண்டியது அவசியம். இல்லையேல், அதுவும் அவர்களுக்கிடையே பிரச்னையைக் கொண்டு வரலாம்.

போலவே, நாம் மற்றவர்களுக்கும் இணையருக்கும் தரும் பரிசுப்பொருள்களும் முக்கியம். காதலிக்கு பேனாவையும், தோழிக்கு மொபைலையும் வாங்கிக் கொடுத்தால் தர்ம அடிதான் மிஞ்சும். அதில் தவறுமில்லை. ஒருவேளை, அதையும் ஏற்றுக்கொள்ளும் காதலனோ/ காதலியோ கிடைத்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலிதான். அந்த அன்பையும் உறவையும் உங்கள் கேர்லெஸ் செயல்களால் இழந்துவிடாதீர்கள்.

கொண்டாட்டங்களோ, அதற்கான பரிசுகளோ… உங்களுக்குக் கிடைத்தால் அனுபவியுங்கள். நியாயமான காரணங்களால் கிடைக்காமல் போனால் கடந்து செல்லுங்கள். ரிலேஷன்ஷிப்பில் இவற்றைத் தாண்டி பல புதையல்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன.



source https://www.vikatan.com/lifestyle/relationship/what-should-you-do-if-your-partner-forgets-your-birthday-all-about-love

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக