Ad

திங்கள், 10 மே, 2021

கிரிமினல் வழக்குகள் கொண்ட எம்.எல்.ஏக்கள்: அதிமுக - 15; பாஜக - 2; திமுக-வில் எத்தனை? - ADR அறிக்கை!

ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு இன்று முதல் முறையாகச் சட்டமன்றக் கூட்டம் கூடியிருக்கிறது. 2016 சட்டமன்றத்தில், தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், ஐ.யூ.எம்.எல் ஆகிய கட்சிகள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. ஆனால், இம்முறை சி.பி.ஐ, சி.பி.எம், ம.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க, ம.ம.க, வி.சி.க, கொ.ம.தே.க, புரட்சி பாரதம் ஆகிய மற்ற கட்சிகளும் சட்டமன்றத்தில் காலெடுத்து வைத்திருக்கின்றன. இந்தநிலையில், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களில் 60 சதவிகிதம் பேர்மீது கிரிமினல் குற்ற வழக்குகள் இருப்பதாகத் தகவல் வெளியிட்டிருக்கிறது ஜனநாயக சீர்திருத்தக் கூட்டமைப்பு (ADR).

ADR

இந்தியாவில் ஜனநாயகத்தை மேம்படுத்துவதற்கும், வலுப்படுத்துவதற்கும் இயங்கிவரும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான தன்னார்வ அமைப்புதான் ஏ.டி.ஆர். 1999-ம் ஆண்டு முதல் இந்தியாவில் இயங்கி வரும் இந்த அமைப்பு, தேர்தல் ஆவணங்கள், அரசியல் கட்சிகள் தாக்கல் செய்யும் ஆவணங்கள், வேட்பாளர்களின் பிராமண பத்திரங்களை ஆராய்ந்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றிருக்கும் 234 எம்.எல்.ஏ-க்களில் 224 எம்.எல்.ஏ-க்களின் பிரமாண பத்திரங்களை, `தமிழ்நாடு எலெக்‌ஷன் வாட்ச்' என்ற அமைப்போடு இணைந்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது ஏ.டி.ஆர் அமைப்பு. `மீதமுள்ள 10 எம்.எல்.ஏ-க்களின்(8 திமுக, 2 காங்கிரஸ்) பிரமாண பத்திரங்கள் தெளிவாக இல்லையென்பதால் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை' என்று ஏ.டி.ஆர் தெரிவித்திருக்கிறது.

சட்டமன்றம்

Also Read: ராதாபுரம் சுயேட்சை எம்.எல்.ஏ முதல் சபாநாயகர் வரை - யார் இந்த அப்பாவு?

கிரிமினல் வழக்குகள்!

ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 224 எம்.எல்.ஏ-க்களில் 134 பேர்மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. கட்சிவாரியாக கிரிமினல் குற்ற வழக்குகள் கொண்ட எம்.எல்.ஏ-க்களின் பட்டியலையும் வெளியிட்டிருக்கிறது ஏ.டி.ஆர். தி.மு.க-வில் 96 எம்.எல்.ஏ-க்களும், அ.தி.மு.க 15 எம்.எல்.ஏ-க்களும், காங்கிரஸில் 12 எம்.எல்.ஏ-க்களும், பா.ஜ.க-வில் இரண்டு எம்.எல்.ஏ-க்களும் கிரிமினல் குற்ற வழக்குகள் கொண்டவர்களாக இருக்கின்றனர். வி.சி.க-வில் மூன்று பேரும், சி.பி.ஐ-ல் இரண்டு பேரும், பா.ம.க-வில் நான்கு பேரும் கிரிமினல் குற்ற வழக்குகள் கொண்டவர்கள் என ஏ.டி.ஆர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 2016 சட்டமன்றத்தில், 34 சதவிகிதமாக இருந்த கிரிமினல் வழக்குகள் கொண்ட எம்.எல்.ஏ-க்களின் விகிதம் தற்போது 60 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது!

தீவிர கிரிமினல் வழக்குகள்!

2021 சட்டமன்றத்தில், 57 எம்.எல்.ஏ-க்கள் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட தீவிர கிரிமினல் வழக்குகள் இருப்பதாக ஏ.டி.ஆர் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. தி.மு.க-வில் 39 பேர் மீதும், அ.தி.மு.க-வில் ஐந்து பேர் மீதும், காங்கிரஸில் ஆறு பேர் மீதும், பா.ம.க-வில் மூன்று பேர் மீதும், பா.ஜ.க-வில் இரண்டு பேர் மீதும் தீவிர கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன. வி.சி.க, சி.பி.ஐ ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்களில் தலா ஒருவர்மீது தீவிர கிரிமினல் குற்ற வழக்குகள் இருக்கின்றன.

கடந்த 2016 சட்டமன்றத்தில், 19 சதவிகிதமாக இருந்த தீவிர கிரிமினல் வழக்குகள் கொண்ட எம்.எல்.ஏ-க்களின் விகிதம், 2021 சட்டமன்றத்தில் 25 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது.
சட்டமன்றம்

Also Read: அதிமுக வாக்கு வங்கியில் சேதம் ஏற்படுத்தாத அமமுக, தேமுதிக - என்ன காரணம்?

ஏ.டி.ஆர் அறிக்கை பற்றிய உங்கள் கருத்துகளை கமென்ட்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்!



source https://www.vikatan.com/government-and-politics/politics/adr-report-on-criminal-cases-against-tn-mlas

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக