Ad

திங்கள், 10 மே, 2021

புதுச்சேரி: 3 நியமன எம்.எல்.ஏ-க்கள்; மருத்துவமனையில் இருக்கும் ரங்கசாமியை நெருக்குகிறதா பா.ஜ.க?

30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி மாநில சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.கவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பா.ஜ.க 9 தொகுதிகளிலும், அ.தி.மு.க 5 தொகுதிகளிலும் போட்டியிட்டன. அதேபோல காங்கிரஸ் கட்சியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், தி.மு.க 13 தொகுதிகளிலும், வி.சி.க மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன.

புதுச்சேரி சட்டப்பேரவை

16 தொகுதிகளில் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், 9 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க 6 இடங்களிலும் வெற்றிபெற்ற நிலையில், 5 இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க அனைத்து இடத்திலும் தோல்வியைத் தழுவியது. எதிரணியில் 14 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வெறும் 2 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான தி.மு.க 6 இடங்களிலும் வெற்றிபெற்றது. இந்தக் கூட்டணியில் தலா ஒரு தொகுதியில் போட்டியிட்ட வி.சி.க மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தோல்வியை தழுவின.

தேசிய ஜனநாயகக் கூட்டணி 16 இடங்களில் வெற்றிபெற்றதால், தங்களுக்கு இரண்டு அமைச்சர் பதவிகளையும், ஒரு துணை முதல்வர், ஒரு துணை சபாநாயகர் பதவியும் வேண்டுமென்று ரங்கசாமிக்கு அழுத்தம் கொடுத்தது பா.ஜ.க. ஆனால் ’வெறும் 6 எம்.எல்.ஏக்களை மட்டுமே வைத்திருக்கும் உங்களுக்கு எப்படி இவற்றை தர முடியும். தவிர புதுச்சேரியில் துணை முதல்வர் என்ற ஒரு பதவியே இல்லையே’ என்று கடுப்பானார் ரங்கசாமி. அதற்கு ‘உள்துறை அமைச்சகம் மூலம் துணை முதல்வர் பதவியை நாங்கள் உருவாக்கிக் கொள்கிறோம்’ என்று முரண்டு பிடித்து வருகிறது பா.ஜ.க. அமைச்சரவைக்கான பங்கீடு முடியாததால், என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி சார்பில் மே 7-ம் தேதி ரங்கசாமி மட்டும் முதல்வராக பதவியேற்றார்.

பா.ஜ.க நியமன எம்.எல்.ஏக்கள்

ஆளுநர் மாளிகையில் அவருக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அன்றைய தினம் அமைச்சர்கள் யாரும் பதவி ஏற்றுக்கொள்ளவில்லை. அதையடுத்து மே 9-ம் தேதி முதல்வர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதியானதால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சூழலில் தங்கள் கட்சியைச் சேர்ந்த கே.வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம், ஆர்.பி.அசோக் பாபு மூன்று பேரையும் நியமன எம்.எல்.ஏக்களாக நியமித்து நேற்று இரவு உத்தரவிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்.

நியமன எம்எல்ஏக்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று இரவு அறிவிப்பு வெளியிட்டிருந்ததையடுத்து, இன்று புதுச்சேரி அரசிதழிலும் அந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

முதல்வர் ரங்கசாமி மருத்துவமனையில் இருக்கும்போது நியமன எம்.எல்.ஏக்களை நியமித்த விவகாரம், என்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்களை மட்டுமல்லாமல் பொதுமக்களையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களும், அமைச்சர்களும் பதவியேற்காத நிலையில், இரவோடு இரவாக மத்திய உள்துறை செய்த இந்த எம்.எல்.ஏக்கள் நியமனம் மக்களை முகம் சுழிக்க வைத்திருக்கிறது. ஏனாம் தொகுதியின் சுயேட்சை எம்.எல்.ஏவான கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் பா.ஜ.கவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், தற்போது பா.ஜ.கவின் பலம் 10 ஆக உயர்ந்திருக்கிறது. 30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி சட்டப்பேரவைக்கு 3 எம்.எல்.ஏக்களை நியமித்துக் கொள்ளலாம். ஆட்சி அமைக்கும் கட்சி பரிந்துரைக்கும் மூன்றுபேரை மத்திய உள்துறை நியமன எம்.எல்.ஏக்களாக அறிவிக்கும்.

நரேந்திர மோடி

ஆனால் மத்தியில் பா.ஜ.க அமர்ந்ததும், புதுச்சேரி அரசின் பரிந்துரை இல்லாமல் தங்கள் கட்சியைச் சேர்ந்த மூன்றுபேரை பா.ஜ.க எம்.எல்.ஏக்களாக நியமித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. மத்திய உள்துறையின் இந்த அறிவிப்புக்கு சமூக வலைதளங்களில் ’இது அரசியல் மற்றும் ஜனநாயக படுகொலை’ என்று, பா.ஜ.கவையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

அதேபோல, ‘கேட்கும் பதவிகளை கொடுக்க மறுக்கும் ரங்கசாமியை பணிய வைப்பதற்காகவே, அவர் மருத்துவமனையில் இருக்கும்போது எம்.எல்.ஏக்கள நியமித்திருக்கிறது’ என்று கூறுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Also Read: புதுச்சேரி பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களின் நியமனம் செல்லும்! - தீர்ப்பை உறுதிப்படுத்தியது உச்ச நீதிமன்றம்

தற்போது எம்.எல்.ஏக்களாக நியமிக்கப்பட்டிருக்கும் வெங்கடேசன் கடந்த தேர்தலில் தட்டாஞ்சாவடி தொகுதியில் தி.மு.க சார்பில் வெற்றிபெற்று, காங்கிரஸ் அரசு கவிழ்வதற்காக கடைசி நேரத்தில் ராஜினாமா செய்தவர். அதன்பின்னர் பா.ஜ.கவில் இணைந்தார். அதேபோல முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் சபாநாயகராக இருந்த சிவக்கொழுந்துவின் சகோதரர்தான் இந்த ராமலிங்கம். அசோக் பாபு பா.ஜ.கவின் வழக்கறிஞர் பிரிவில் இருந்தவர் என்பது குறிப்பிடதக்கது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/home-ministry-appointed-3-mla-in-puducherry-did-bjp-giving-pressure-to-cm-rangasamy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக